‘விஜய் பற்றிய எனது கணிப்பு பலித்துவிட்டது’ - சந்தோஷத்தில் சரத்குமார்

‘விஜய் பற்றிய எனது கணிப்பு பலித்துவிட்டது’ - சந்தோஷத்தில் சரத்குமார்

90-களில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்த நடிகர் சரத்குமார், கதைக்கு முக்கியத்துவம் கொண்ட படங்களில் கதாநாயகன் வேடம், முக்கிய கதாபாத்திரங்கள் என இப்போதும் தொடர்ந்து இயங்கிவருகிறார். ஓடிடி தளங்களிலும் பிஸியாக நடித்துவருகிறார். மணி ரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’, நடிகர் விஜய் நடித்துவரும் ‘தளபதி 66’ போன்ற படங்களிலும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துவருகிறார்.

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த இரண்டு படங்கள் குறித்து முக்கியத் தகவல்களை சரத்குமார் பகிர்ந்துள்ளார்.

அதில், ‘விரைவில் ‘தளபதி 66’ ஷூட்டிங்கில் இணைய உள்ளேன். மே மாதம் ஆரம்பித்து ஆகஸ்ட் வரை படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற இருக்கிறது. தயாரிப்பாளர் தில் ராஜூ தனது பேட்டிகளில் குறிப்பிட்டது போல மிகவும் வலுவான கதை இது. இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரம் மிகவும் முக்கியமான ஒன்றாகவும் தவிர்க்க முடியாததாகவும் இருக்கும். கண்டிப்பாக ரசிகர்களுக்கும் பிடிக்கும். நடிகர் விஜய்யுடன் இணைந்து வேலை பார்ப்பதில் மகிழ்ச்சி.

இந்தப் படத்திற்கான பூஜையில் விஜய்யைச் சந்தித்தபோது, ‘சூரியவம்சம்’ படத்தின் 250-வது நாளுக்காக கமலா தியேட்டரில் நாங்கள் இருவரும் சந்தித்ததைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அதில் நடிகர் விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்பதை கூறியிருந்தேன். அதை விஜய்யும் ஞாபகம் வைத்திருந்தார். அப்போது நான் சரியாகத்தான் கணித்திருந்தேன் என்பதை நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது’ என சரத்குமார் கூறியுள்ளார்.

‘பொன்னியின் செல்வன்’ படம் பான் இந்தியா படமாக இந்தியா முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதன் முதல் பாகம் இந்த வருடம் செப்டம்பர் மாத இறுதியில் வெளியாக இருக்கிறது. மேலும் அமேசான் இந்தப் படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்றி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் பெரிய பழுவேட்டரையராக நடித்தது குறித்தும் அந்த பேட்டியில் பகிர்ந்திருக்கிறார் சரத்குமார்.

’இந்தப் படத்தில் நானும் ஒரு அங்கம் என்பதை நினைக்கும்போதே மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழ் சினிமாவில் நிச்சயம் இந்தப் படம் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும். தயாரிப்பு, இயக்கம் என மணிரத்னம் இந்தப் படத்தை மிக அருமையாக நகர்த்தி இருக்கிறார். இந்தக் கதையை நாம் புத்தகங்களில் படித்து அறிந்திருக்கிறோம். எனவே, புத்தகத்தின் கதையை, படமாக்கப்பட்ட விதத்துடன் நிச்சயம் ஒப்பிடுவார்கள் என்பதுதான் இதில் அவர் சந்திக்க கூடிய சவாலாக இருக்கும். நிறைய நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் இதில் உழைத்திருக்கிறார்கள்.

எங்கள் மேக்கப்பிற்கு மட்டும் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் ஆகும். அதிகாலை 3 மணி, இரவு என நேரம் காலம் பார்க்காமல் வேலை செய்திருக்கிறோம். ’வானம் கொட்டட்டும்’ படம் சமயத்தில்தான் மணி ரத்னம் என்னை ‘பெரிய பழுவேட்டரையர்’ கதாபாத்திரத்தில் நடிக்கச் சொல்லி கேட்டார். உடனே மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டேன். ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் இரண்டு பாகங்களில் என்னுடைய பகுதிக்கான படப்பிடிப்பு முடிந்தது’ என அந்தப் பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார் சரத்குமார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in