
தனது நிறத்தையும் அழகையும் இழந்து வருவதாக நடிகை மம்தா வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை மம்தா மோகன்தாஸ். கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதன் பாதிப்பில் இருந்து மீண்டு வந்து, பழையபடி படங்களில் நடித்து வந்தார். இப்போது, தான் விட்டிலிகோ என்ற ஆட்டோ இம்யூன் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக மம்தா புகைப்படத்துடன் பதிவிட்டு இருக்கிறார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, ``என்னுடைய அழகையும் நிறத்தையும் இழந்து கொண்டிருக்கிறேன். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உங்களிடம் அன்பை வேண்டுகிறேன். நீங்கள் பார்க்கும் கதிரை நானும் தினம் பார்க்க எழுகிறேன். உங்கள் அன்பையும் பிரார்த்தனையையும் எனக்கு கொடுத்தால் என்றென்றும் நன்றியுள்ளவளாக இருப்பேன்’ எனத் தெரிவித்துள்ளார்.
மம்தாவுக்கு ஆறுதல் தெரிவித்தும் நம்பிக்கையுடன் இருக்கும்படியும் ரசிகர்களும் திரையுலகைச் சேர்ந்தவர்களும் தெரிவித்து வருகின்றனர். பரவும் தன்மையற்ற நோயான இந்த விட்டிலிகோ உடலில் ஆங்காங்கே வெள்ளை நிறத் திட்டுகளை ஏற்படுத்தும். இதற்கு இன்னும் நிரந்தரத் தீர்வு கண்டுபிடிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நடிகை சமந்தாவும் மயோசிடிஸ் எனப்படும் ஆட்டோ இம்யூன் நோயால் பாதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.