"இப்போது தான் உன்னை அதிகம் காதலிக்கிறேன்!" - திருமண நாளில் நடிகர் மாதவன் உருக்கம்

மாதவன் - சரிதா
மாதவன் - சரிதா

நடிகர் மாதவன் - சரிதா தம்பதியர் நேற்று (ஜுன் 6) தங்களது 23-வது திருமண நாளை கொண்டாடினார்கள். அதை முன்னிட்டு இன்று இருவரும் தங்களது பழைய புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளனர்.

தமிழில் 'அலைபாயுதே' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் மாதவன். பின்பு 'மின்னலே', 'டும் டும் டும்', 'தம்பி' உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இப்போது பாலிவுட்டில் கவனம் செலுத்திவரும் மாதவன், 'ராக்கெட்ரி: நம்பி விளைவு' திரைப்படம் மூலம் இயக்குநராகவும் அவதாரம் எடுத்துள்ளார். இந்தப் படம் அடுத்த மாதம் தியேட்டர்களில் வெளியாகிறது. சினிமாவுக்கு வருவதற்கு முன்பே நடிகர் மாதவன் 1999-ம் ஆண்டு சரிதாவை திருமணம் செய்து கொண்டார்.

பெற்றோர் சம்மதத்துடன் நடந்த காதல் திருமணம் இது. திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு 8 ஆண்டுகள் இருவரும் இணைந்து வாழ்ந்து வந்தனர். அதற்குப் பிறகு பெற்றோர் சம்மதத்துடன் 1999 ஜூன் 6-ம் தேதி இருவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு, 2005-ல் வேதாந்த் என்ற மகன் பிறந்தார்.

மாதவன்- சரிதா தம்பதிக்கு திருமணம் முடிந்து இன்றுடன் 23 ஆண்டுகள் நிறைகிறது. இதை முன்னிட்டு மாதவன் சரிதாவுடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம் ஒன்றை பகிர்ந்து, 'முன்பை விட இப்போது தான் நான் உன்னை அதிகமாக காதலிக்கிறேன். இப்போது தான் நாம் நமது வாழ்வை தொடங்கியது போல உள்ளது. திருமண வாழ்த்துகள் மனைவி!' என்று கூறியுள்ளார்

சரிதாவும் மாதவனைக் காதலித்த போது எடுத்த புகைப்படங்களையும் திருமணத்திற்குப் பிறகு எடுத்த புகைப்படங்களையும் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்து, ‘23 வருடங்கள் இருவரும் இணைந்து வாழ்ந்து வருகிறோம். இப்பொழுது தான் நாம் இருவரும் இணைந்து வாழ்வை தொடங்கியது போல உள்ளது. I Love You So Much'. திருமண வாழ்த்துகள் அன்பே!' என்று கூறியுள்ளார்.

மாதவனும் சரிதாவும் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் சந்தித்துக் கொண்டனர். அப்போது மாதவன் பப்ளிக் ஸ்பீக்கிங் வகுப்புகளை எடுத்து கொண்டிருக்கும் போது அவரது ஒரு வகுப்பில் கலந்து கொண்டார் சரிதா. அந்த சமயங்களில் தான் தனது காதலை மாதவனிடம் வெளிப்படுத்தினார். இருவரும் காதல் வயப்பட்டார்கள். 8 ஆண்டுகள் காதலித்த பிறகு இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in