`இதுபோன்ற காதல் கதையில் இதுவரையில் நடித்ததில்லை'- 'சீதா ராமம்' பட நாயகன் துல்கர் சல்மான்

`இதுபோன்ற காதல் கதையில் இதுவரையில் நடித்ததில்லை'- 'சீதா ராமம்' பட நாயகன் துல்கர் சல்மான்

"நான் இதற்கு முன்னர் நிறைய காதல் கதைகளில் நடித்திருந்தாலும், இதுபோன்ற வித்தியாசமான காதல் கதையில் நடித்ததில்லை" என 'சீதா ராமம்' படத்தின் கதாநாயகன் துல்கர் சல்மான் கூறினார்.

'சீதா ராமம்' படத்தின் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் துல்கர் சல்மான், நடிகை ரஷ்மிகா மந்தானா, பாலிவுட் நடிகை மிருணாள் தாகூர், தெலுங்கு நடிகர் சுமந்த் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படம் காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் முன்னோட்டத்தை நடிகர் கார்த்தி தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார். இந்தப் படம் ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இந்த படத்தை வைஜயந்தி மூவிஸ் தயாரித்துள்ளது.

படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் நாயகன் துல்கர் சல்மான், நாயகி மிருணாள் தாகூர், நடிகர் சுமந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பேசிய நடிகர் சுமந்த், "தெலுங்கு திரை உலகில் பல ஆண்டுகளாக பணியாற்றி வந்தாலும், 'சீதா ராமம்' படத்தில் தான் முதல் முதலாக அழுத்தமான குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். 'சீதா ராமம்' போன்ற காதல் காவிய படைப்புகள் தற்போது உருவாவதில்லை. இதனால் இயக்குநர் கதையை விவரித்ததும், அவருடைய கற்பனையை நனவாக்க மகிழ்ச்சியுடன் நடிக்க ஒப்புக்கொண்டேன்'' என்றார்.

நடிகை மிருணாள் தாகூர் பேசுகையில், "சீதா ராமம் படத்தில் சீதா மகாலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். என்னுடைய கலை உலக பயணத்தில் முதன் முதலாக அற்புதமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். அனைத்து இளம் நடிகைகளும் நடிக்க விரும்பும் கதாபாத்திரம் இது'' என்றார்.

நடிகர் துல்கர் சல்மான் பேசுகையில், "நான் இதற்கு முன்னர் நிறைய காதல் கதைகளில் நடித்திருந்தாலும், இதுபோன்ற வித்தியாசமான காதல் கதையில் நடித்ததில்லை. கதை நடக்கும் காலகட்டம், கதை களம், கதாபாத்திர பின்னணி என பல அம்சங்கள் சிறப்பாக இருந்ததால் நடிக்க ஒப்புக்கொண்டேன். படத்தில் இடம் பிடித்திருக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் சிறப்பானவை" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in