நாட்டைப் பற்றியே பேச வந்துள்ளேன்: சிம்புவின் திருமண கேள்வியைத் தவிர்த்த டி.ஆர்!

நாட்டைப் பற்றியே பேச வந்துள்ளேன்: சிம்புவின் திருமண கேள்வியைத் தவிர்த்த டி.ஆர்!

"இங்கு என் நாட்டைப் பற்றி மட்டுமே பேச வந்துள்ளேன். வீட்டைப் பற்றிக் கிடையாது. அதனால், சிம்பு பற்றிய கேள்விகளையும், அவரது திருமணம் பற்றிய கேள்விகளை தவிர்க்கிறேன்” என்று டி.ராஜேந்தர் கூறினார்.

நடிகரும், இயக்குநரும், இசையமைப்பாளருமான டி.ஆர்.ராஜேந்தர் ‘வந்தே வந்தே மாதரம்’ என்ற தனியிசைப் பாடலை தனது டி.ஆர்.ரெக்கார்ட்ஸ் மூலமாக தமிழ் மற்றும் இந்தியில் குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ளார். இதில் அவரது பேரன் ஜேசனை பாடகராகவும் நடிகராகவும் அறிமுகப்படுத்தியுள்ளார்.

இந்தப் பாடல் வெளியீட்டுவிழா குறித்தான பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது. இதில் கலந்து கொண்ட டி.ராஜேந்தர் பேசுகையில், "குறுகிய காலத்தில் அழைப்பை ஏற்று வந்த அனைவருக்கும் நன்றி. இன்று என்னுடைய வாழ்க்கையில் முக்கியமான நாள். உணர்ச்சிவசப்படக்கூடியவன் தான் நல்ல மனிதன். இயக்குநர், இசையமைப்பாளர் என பல படங்களுக்கு ப்ளாட்டின டிஸ்க் வாங்கி இருக்கிறேன். ட்யூன் பேங்க்காக ஆயிரக்கணக்கான பாடல்களை வைத்துள்ளேன்.

இதை வெளியிட டி.ஆர். ரெக்கார்ட்ஸ் ஆரம்பித்துள்ளேன். இதன் மூலம் பலருக்கும் வாய்ப்பு கிடைக்கும். இந்த 'வந்தே வந்தே மாதரம்' பாடலை என் தாய்மொழி தமிழ் மற்றும் இந்தியில் வெளியிட்டுள்ளேன். கலைஞர் ஆட்சியில் இருந்தபோது 'மோனிஷா என் மோனலிசா' படத்தை இந்தியில் எடுத்து பான் இந்தியா அளவில் முயற்சி செய்தேன். அப்போது டிஜிட்டல் வசதிஇல்லை. இப்போதும் பான் இந்தியா அளவில் படமெடுத்து என் பேரன் ஜேசனை அறிமுகப்படுத்த முயற்சி செய்தேன்.

ஆனால், இடையில் எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. இப்போது இறைவன் அருளால் மீண்டும் வந்துள்ளேன். எனவே, மீண்டும் அந்த பான் இந்தியா படத்தைத் தொடங்க உள்ளேன்.

இந்தப் பாடலை தமிழ் மற்றும் இந்தியில் அல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளத்திலும் தயார் செய்திருக்கிறேன். 'ஆர்ஆர்ஆர்', 'கேஜிஎஃப்', 'காந்தாரா’ எனத் தென்னிந்திய மொழிப் படங்கள் இந்திய அளவில் பல மரியாதைகளைச் செய்துள்ளது.

கன்னடம், தெலுங்கு, துளு ஆகிய மொழிகளுக்கு தமிழ்தான் தாய்மொழி. இன்று இந்தி என சொன்னால் அதில் சமஸ்கிருதம் கலந்திருக்கும். ஆனால், தமிழ் அப்படி கிடையாது. வேற்றுமையிலும் ஒற்றுமை காணும் நாடு எங்கள் இந்தியா. சிவன், இயேசு, அல்லா எல்லாவற்றையும் குறித்து பாடியிருக்கிறேன். காதல், பெண், அவர்கள் அழகு எனவும் பாடியிருக்கிறேன். ஈழத்தமிழர்கள் என் முன்னோடிகள். அவர்களின் உணர்வுதான் இத்தனை மொழிகள் கற்றுக் கொள்ள எனக்கு உதவியது. பான் இந்தியா அளவில் செல்ல ஒரு பிள்ளையார் சுழியாக டி.ஆர். ரெக்கார்ட்ஸ் ஆரம்பித்திருக்கிறேன். என் பேரனையும் அவனைப் போல பல குழந்தைகளையும் வைத்து நிறைய திட்டமிட்டுள்ளேன். அவற்றை நீங்கள்தான் கொண்டு சேர்க்க வேண்டும். அமெரிக்கா சென்று வந்த பிறகு நான் இந்தப் பாடலை பாரதத்திற்காக வெளியிட்டிருப்பதில் மகிழ்ச்சி” என்றார்.

பின்பு பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு டி.ராஜேந்தர் பதிலளித்தார். இந்தியாவில் இந்திக்கு எதிர்ப்பு இருந்தபோது இந்தி மொழியை நீங்கள் முன்னிறுத்துவது ஏன் என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டதற்கு, ‘இந்தியைத் திணித்தால்தான் எதிர்ப்பு. வட இந்தியாவில் பல இடங்களிலும் தமிழ் உள்ளது. நான் சிகிச்சைக்காகச் சென்றபோது அங்கு என்னை அப்படி நலம் விசாரித்து அக்கறையுடன் பார்த்துக் கொண்டார்கள். அவர்கள் அன்பும் நான் மீண்டு வந்ததற்கு ஒரு காரணம்” என்று பதிலளித்தார்.

அதேபோல, ”முதல்வர் ஸ்டாலின் அவர்கள் எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனபோது பலமுறை அன்புடன் விசாரித்தார். எனக்கு முதல்வர் நல்ல நண்பர் போல, உதயநிதி ஸ்டாலின் என் மகன் சிம்புவுக்கு நல்ல நண்பர். பான் இந்தியா படங்களின் முன்னோடி என என்னை நான் சொல்லிக் கொள்ளவில்லை. 'ரோஜா' படம் எடுத்த மணிரத்னம்தான் நமது பான் இந்தியா படங்களின் முன்னோடி. இந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு தேசிய ஒருமைப்பாட்டிற்கு வெளியிட்டிருக்கிறேன். இங்கு என் நாட்டைப் பற்றி மட்டுமே பேச வந்துள்ளேன். வீட்டைப் பற்றிக் கிடையாது. அதனால், சிம்பு பற்றிய கேள்விகளையும், அவரது திருமணம் பற்றிய கேள்விகளை தவிர்க்கிறேன்” என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in