
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்துள்ள படம், ’பீஸ்ட்’. இதில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ளார். இயக்குநர் செல்வராகவன், யோகிபாபு, ஷைன் டாம் சாக்கோ, ஜான் விஜய், விடிவி கணேஷ், அபர்ணா தாஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ளார். நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார்.
படம் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இந்தப் படத்தை வெளியிடுகிறது.
இந்நிலையில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
சிறு வயதில் இருந்தே நான் விஜய் ரசிகன். அவரை மனதில் வைத்தே 'பீஸ்ட்' படத்தை இயக்கி இருக்கிறேன். ஆரம்பத்தில் அவரிடம் கதை சொல்ல தயக்கமாக இருந்தது. கதை கேட்பாரா, சம்மதிப்பாரா என்று நினைத்தேன். விஜய் சார் ஸ்டைலில் இருந்து இது கொஞ்சம் வித்தியாசமான கதை என்பதால், தயக்கம் இருந்தது. பிறகு கதையைக் கேட்டதும் அவர் ஓகே என்றார். மகிழ்ச்சியடைந்தேன். நான் நினைத்ததை விட அவருடன் பணியாற்றியது எளிதாக இருந்து.
இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக இதுவரை நடிக்காதவராக இருக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். அப்போது பூஜா ஹெக்டே நடித்து ’அலா வைகுந்தபுரம்லோ’ நன்றாக ஓடி கொண்டிருந்தது. விஜய் உயரத்துக்கு அவர் சரியாக இருப்பார் என்பதால் அவரையே நாயகி ஆக்கினோம்.
இவ்வாறு நெல்சன் கூறினார்.