'உடல் எடை குறைத்த பின்பும் கேலிகளை எதிர்கொண்டேன்’: குஷ்பு மகள் அவந்திகா வேதனை!

'உடல் எடை குறைத்த பின்பும் கேலிகளை எதிர்கொண்டேன்’: 
குஷ்பு மகள் அவந்திகா வேதனை!

நடிகை குஷ்புவின் இளையமகள் அவந்திகா. சினிமாவில் தன்னுடைய விருப்பம், உடல் எடை அதிகரித்து இருந்த போது மனநிலை, பின்பு உடல் இளைத்த பின்பும் எதிர்கொண்ட கேலிகள், நெப்போட்டிசம் ஆகியவை பற்றி யூடியூப் தளம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் பேசி இருக்கிறார்.

அதில் அவர் பேசியிருப்பதாவது, "நானும் என்னுடைய அக்கா இரண்டு பேரும் சினிமாவில் ஆர்வமுடைய குழந்தைகளாகவே இருக்கிறோம். அக்கா நடிப்பில் ஆர்வம் கொண்டிருக்கிறாள். இதனால் தான் லண்டனில் நடிப்பு தொடர்பான படிப்பை படித்து வருகிறார். எனக்கு தயாரிப்பு தரப்பில் ஆர்வம் அதிகம். அம்மா, அப்பா இரண்டு பேருமே நாங்கள் சினிமாவில் வருவதற்கு முழு ஆதரவு கொடுத்து இருக்கிறார்கள். ஆனால், தங்களுடைய பிரபலத்தை உபயோகப்படுத்தி எதுவும் செய்ய மாட்டோம், உங்கள் திறமையை கொண்டு உங்களுக்கான அடையாளத்தை உருவாக்குங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள்" என்றார்.

இது போல பிரபலங்களின் குழந்தைகள் சினிமாவுக்குள் வருவது நெப்போட்டிசம் தொடர்பான பேச்சுகளை அதிகப்படுத்துமே என்ற கேள்விக்கு, "பிரபலங்களின் குழந்தைகள் என்பதால் எங்களுக்கு சினிமாவில் நுழைவதற்கான வழி எளிதாக கிடைக்கிறது என்பது உண்மை தான். ஆனால், உள்ளே வந்த பிறகு அந்த பிரபல தன்மை உபயோகப்படுத்தி நாங்கள் ஒன்றிரண்டு படங்கள் தயாரிக்கலாம். ஆனால். அதுவும் வெற்றி பெற்றால் மட்டுமே நிலைத்து நிற்க முடியும். எங்களுக்கான அடையாளத்தை உருவாக்கி கொள்ள நாங்கள் தவறினால் நிச்சயம் எங்களுக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வருவது கடினம் தான். பாலிவுட்டில் எடுத்துக்கொண்டால் கூட ரன்பீர் கபூர் அபிஷேக் பச்சன் என அவர்களும் பிரபலமான குடும்பங்களில் இருந்து வந்தவர்கள் தான். ஆனால், இப்பொழுது அவர்கள் தங்களுக்கென்று தனி அடையாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அது போலதான் நாங்களும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம்" என்று கூறியுள்ளார்.

மேலும், உடல் எடை அதிகரித்து இருந்த போது எதிர்கொண்ட கேலிகள் பற்றியும் பேசி இருக்கிறார். "நான் என்னுடைய சிறு வயதில் உடல் எடை அதிகரித்து இருந்தேன். அதை ஒரு போதும் குறையாக என் வீட்டில் யாரும் சொன்னதில்லை. ஏனெனில் எங்கள் குடும்பத்தில் ஜீன் அப்படிதான். ஆனால், ஒரு கட்டத்திற்கு மேல் சமூக வலைதளங்களில் நான் கேலிகளை எதிர்கொள்ள ஆரம்பித்தது மன அழுத்தத்தில் கொண்டு போய்விட்டது. அந்த கோபம் என் அம்மா மீது திரும்பியது. 'எதற்காக என்னை எல்லாவற்றையும் சாப்பிட அனுமதித்தீர்கள்?' என்றெல்லாம் அவருடன் சண்டை போட்டு இருக்கிறேன். ஒரு கட்டத்திற்கு மேல் இது போன்ற கேள்விகளை எப்படி எதிர்கொள்வது என்பதையும் நான் புரிந்து கொண்டேன். அம்மாவும் எல்லா இடத்திலும் உன்னை நான் பாதுகாத்துக் கொண்டே இருக்க முடியாது என்று சொல்லி இருந்தார். மேலும் எனக்கே தனிப்பட்ட முறையில் உடல் எடை குறைத்தாக வேண்டும் என்று தோன்றியதால், உணவு கட்டுப்பா,டு உடற்பயிற்சியென இப்போது உடல் எடை குறைத்து இருக்கிறேன். ஆனால் இப்போழுதும் என்னிடம் 'பிளாஸ்டிக் சர்ஜரி செய்து இருக்கிறீர்களா?' என்று கேட்கிறார்கள். 16 வயதில் எல்லாம் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய முடியாது என்ற அறிவு கூட இல்லாமல் கேட்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் பிளாஸ்டிக் சர்ஜரி செய்வது அழகிற்காக தான். அப்போது நான் அழகாக இருக்கிறேன் என்ற பாராட்டுகளைத் தான் அவர்கள் தருகிறார்கள் என்று அதை எல்லாம் நான் கடந்து விடுவேன்" என்கிறார் பாசிட்டிவாக.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in