'நான் ஒரு பார்சல் கிடையாது’: நடிகை அலியாபட் கொந்தளிப்பு

'நான் ஒரு பார்சல் கிடையாது’: நடிகை அலியாபட் கொந்தளிப்பு

தன்னுடைய கர்ப்பத்தால் வழக்கமான பட வேலைகள் எதுவும் தடைபடாது என நடிகை அலியாபட் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகை அலியாபட் மற்றும் ரன்வீர் இருவரும் தங்கள் முதல் குழந்தை குறித்த செய்தியை நேற்று அறிவித்தனர். கடந்த ஏப்ரல் மாதத்தில் தான் இந்த தம்பதிக்கு திருமணம் நடந்தது. இரண்டு மாதத்தில் இந்த மகிழ்ச்சியான செய்தியைத் தெரிவித்த இவர்களுக்கு பல பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

ரசிகர்களின் வாழ்த்துகளுக்கு அலியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், " உங்கள் அனைவரின் அன்பும் எங்களை நெகிழ செய்துள்ளது. உங்களது வாழ்த்துகள் அனைத்தையும் படிக்க முயற்சி செய்கிறேன். இது போன்று வாழ்க்கையின் முக்கிய தருணங்களை உங்களின் அன்பினாலும், ஆசீர்வாதத்தினாலும் கொண்டாடுவதை மகிழ்ச்சியாக உணர்கிறோம். ஒவ்வொருவரின் வாழ்த்துக்கும் நன்றி" என நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.

இந்த மகிழ்ச்சியான செய்தியை பல ஊடகங்களும் செய்தியாக வெளியிட்டன. அதே சமயம் சில செய்தி ஊடகங்கள், தற்போது லண்டனில் இருக்கும் அலியாவை ரன்பீர் அடுத்த ஜூலை மாத மத்தியில் மும்பைக்குக் கூட்டி வருவார் என்றும், அதனால் கைவசம் இருக்கும் படப்பிடிப்பை ஜூலைக்குள் முடித்து விட்டு அலியா ஓய்வு எடுப்பார் என்றும், அவரது மற்ற எந்த கமிட்மெண்ட்டும் அவரது கர்ப்ப காலத்தைப் பாதிக்கக்கூடாது என அலியா நினைப்பதாகவும் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுதான் அலியாவை கோபம் கொள்ள செய்துள்ளது. இதற்கு அலியா, “ நாம் இன்னும் ஆணாதிக்க சமூகத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உங்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். என்னால் எதுவும் தாமதமாகாது. அதேபோல, யாரும் யாரையும் கூட்டி வரத் தேவையும் இல்லை. நான் ஒரு பார்சல் கிடையாது. ஒரு பெண். எனக்கு இப்போது ஓய்வும் தேவை இல்லை. இதை எல்லாம் நீங்கள் எனக்குச் சொல்ல மருத்துவராகி இருக்கிறீர்கள் என்பதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

இது 2022-ம் வருடம். இன்னும் இது போன்ற குறுகிய சிந்தனைகளில் இருந்து வெளியே வந்து விடுவோமே? இத்தோடு முடித்துக் கொள்வோம். இப்போது என்னை மன்னித்து விடுங்கள். ஏனெனில், படப்பிடிப்பில் என்னுடைய ஷாட் தயாராக இருக்கிறது” என இந்த செய்திகளுக்குப் பதிலடி கொடுத்துள்ளார் அலியா.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in