அவசியமில்லாத ‘லிப் லாக்’ காட்சிகளை நான் ஏற்கவில்லை!

சடசடக்கும் சம்யுக்தா
சம்யுக்தா
சம்யுக்தா

மண்ணின் கதைகளைப் பேசுவதில் அதிக ஆர்வம் காட்டிவந்த மலையாள சினிமா முகம் மாறிவிட்டதற்கான அடையாளமாக வெளியான படங்களில் ஒன்று 2018-ல் வெளியான ‘தீ வண்டி’. டோவினோ தாமஸ் கதாநாயகனாக நடித்த அந்தப் படத்தின் அதிரி புதிரியான வெற்றியைத் தொடர்ந்து புகழ் வெளிச்சத்தில் நனைந்தார் அப்பட நாயகியான சம்யுக்தா. ஆனால், அந்தப் படத்துக்கு முன்பே தமிழில் ‘களரி’, ‘ஜூலை காற்றில்’ என இரண்டு படங்களில் நடித்து முடித்திருந்தார். அப்போது அவருக்கு கிடைக்காத வெற்றி தனுஷ் ஜோடியாக ‘வாத்தி’ படத்தில் நடித்தபோது கிடைத்தது.

தற்போது, தெலுங்கில் தயாராகி, தமிழ், இந்தி உட்பட பல மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகியிருக்கும் ‘விரூபாக்‌ஷா’ படத்தில் நாயகனுக்குரிய இடத்தை எடுத்துக்கொண்டு நடித்திருக்கிறார். படம் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில் காமதேனுவுக்காக அவருடன் உரையாடியதிலிருந்து...

ஓரளவுக்கு தடங்கல் இல்லாமல் தமிழ் பேசுகிறீர்களே எப்படி?

நான் பாலக்காட்டில் பிறந்து வளர்ந்த பெண். கொஞ்சம் மலையாள வாசனை அடிக்குமே தவிர, அங்கே என்னுடன் தமிழ் பேசுவதற்கு நிறைய நண்பர்களும் உறவினர்களும் இருக்கிறார்கள். நான் படித்த சின்மயா வித்யாலயா பள்ளியில் தமிழ் மாணவ - மாணவிகள் அதிகம். தவிர, பாலக்காட்டில் ரிலீஸாகும் நேரடித் தமிழ்ப் படங்களைப் பார்த்து வளர்ந்திருக்கிறேன். தமிழ் தடங்கல் இல்லாமல் வர இதெல்லாம் தான் காரணம்.

‘தீ வண்டி’ படத்தில் ‘லிப் லாக்’ காட்சியில் நடித்தீர்கள். அந்த முத்தம் கதைக்கருவின் சிக்கலைக் கூறுவதாக அமைந்தது. ஆனால், கதைக்கு அவசியமே இல்லாமல் காதல் காட்சியில் ‘லிப் லாக்’ காட்சிகள் இடம்பெறுவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

அதை நான் ஏற்கவில்லை. கதைக்கு முக்கியத்துவம் தரப்படும் படங்களில் வலிந்து நுழைக்கப்பட்ட காட்சிகள் எதுவாக இருந்தாலும் அது ஆடியன்ஸுக்கு வெறுப்பைத்தான் ஏற்படுத்தும். அது அவர்களுடன் கனெக்ட் ஆகாது. தினிக்கப்பட்ட ‘லிப் லாக்’ காட்சிகளையும் நான் அப்படித்தான் பார்க்கிறேன்.

‘தீ வண்டி’ பட வெற்றிக்குப் பிறகு, ‘லிப் லாக்’ காட்சி எத்தனை ரீ டேக் எடுக்கப்பட்டது என்று சிலர் கேட்டார்கள். அவர்கள் தங்களை ஊடகத்தினர் என்றும் சொல்லிக்கொண்டார்கள். அப்போது நான் மனமுடைந்தேன். அப்படிக் கேட்டவர்களிடம் கடுமை காட்டினேன். ஆனால், ‘லிப் லாக்’ பற்றி நீங்கள் கேட்ட கேள்வியின் உள்ளர்த்தம் உணர்ந்து உங்களைப் பாராட்டுகிறேன்.

நீங்கள் பேசுவதை வைத்துப் பார்க்கும்போது... உங்களை, எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவர் என்று எடுத்துக்கொள்ளலாமா?

உண்மைதான்! நான் கொஞ்சம் எமோஷனல்தான். என்னை அன்போடு, பொறுப்போடு அணுகினால் நான் இனிமையானவள்; கலகலப்பானவள். சீண்டினால் கொந்தளித்துவிடுவேன்.

உங்கள் பெயரின் பின்னால் ஓட்டிக்கொண்டிருந்த ‘மேனன்’ என்கிற சாதிப் பெயரைப் போட வேண்டாம் என்று ஊடகத்தினரிடம் கேட்டுக்கொண்டீர்களாமே... உண்மையா?

ஆமாம்! எனது சமூக ஊடகப் பக்கங்களில் இருந்து ‘மேனன்’ என்கிற ‘சர் நேமை’ நீக்கிவிட்டேன். ஆனால், போட வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட பிறகும் பலர் ‘சர் நேம்’ உடன் என் பெயரைப் போடுகிறார்கள். மிகவும் வருத்தமாக இருக்கிறது. நான் நடிக்கும் படத்தில் பணி புரியும் எல்லாரும் நான் பிறந்து, வளர்ந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இல்லையே... ஆனால், அவர்கள் எனது வளர்ச்சிக்காக உழைக்கிறார்களே..! நான் சாப்பிடும் சாப்பாட்டை விளைவிப்பவர்களும் நான் உடுத்தும் ஆடை, அணியும் காலணி ஆகியவற்றை செய்பவர்களும் அப்படித்தானே!

நமக்குத் தேவையான அனைத்தையும் நம்மால் நிறைவு செய்துகொள்ள முடியாது எனும்போது நீங்கள் சார்ந்திருக்கும் சமூகம் எந்த வகையில் மற்ற சமூகங்களை விட உயர்ந்தது என்று சொல்லமுடியும்? கடவுளின் முன்னால் நாம் அனைவரும் சமம்; அவருடைய குழந்தைகள் அவ்வளவே. சமுத்துவமும் மனிதநேயமும் பேசினால் மட்டும் போதாது அதை வாழ்க்கையிலும் கடைபிடிக்கப் பழகினால் உலகம் அழகாகும்.

‘களரி’, ‘ஜூலை காற்றில்’ ஆகிய படங்களின் வழியாக தமிழ் ரசிகர்களிடம் கவனம் பெறாமல் போனதில் வருத்தம் இருக்கிறதா?

எப்படி இல்லாமல் போகும்? நான் தமிழ், தெலுங்குப் பட உலகங்களை மிகவும் நேசிக்கிறேன். அங்கே ரசிகர்கள் திரை நட்சத்திரங்களை அவதார்களாகப் பார்க்கிறார்கள். இது தீவிர அன்பு. அவர்களிடம் நான் அவதாராகச் சென்றடைவதைவிட, என் நடிப்புக்காக நான் அவர்களால் நேசிக்கப்பட வேண்டும் என நினைக்கிறேன்.

அந்த இரண்டு படங்களிலுமே எனக்கு நல்ல கதாபாத்திரங்கள் அமைந்தன. ஆனால், படங்கள் தோல்வி அடைந்துவிட்டன. இங்கே நாம் நடிக்கும் ஒரு படம் வெற்றி அடையும்போதுதான் நம்மை எல்லோரும் திரும்பிப் பார்க்கிறார்கள். அப்படி என்னை இங்கே திரும்பிப் பார்க்க வைத்துவிட்டது ‘வாத்தி’. தனுஷை ‘நடிப்பு அசுரன்’ என்று ரசிகர்கள் சொல்வதை ட்விட்டரில் கவனித்தேன். அது உண்மைதான். அவருடன் நடித்ததும் அதற்கு கிடைத்த வரவேற்புக்கும் அதில் எனது நடிப்பைப் பாராட்டிய விமர்சகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்நாட்டில் பெற்ற வெற்றியைவிட தெலுங்கில் பெரிய வெற்றி அந்தப் படத்துக்குக் கிடைத்தது. அதன் பலனாக தற்போது 3 தெலுங்குப் படங்களை ஒப்புக்கொண்டிருக்கிறேன். ஒவ்வொன்றிலும் வித்தியாசமான கதாபாத்திரங்கள்.

‘விரூபாக்‌ஷா’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நடிப்பது சிரமமாக இருந்ததா?

ஆமாம்! அதற்கு முன்பு வரை நான் ‘ரோப் ஷாட்’களில் நடித்ததில்லை. கிளைமாக்ஸ் காட்சிக்காக மூன்று நாட்கள் ரோப்பில் தொங்கியதில் தோள் பட்டை வலி வந்துவிட்டது. இப்போது படத்தின் வெற்றியைப் பார்க்கும்போது அந்த வலியெல்லாம் ஒன்றுமே இல்லை என்றாகிவிட்டது.

உங்கள் பாதை கதாநாயகியாக இருப்பதா... கதாபாத்திரங்களில் நடிப்பதா?

இரண்டும் என்பேன். நல்ல கதாபாத்திரங்களில் நடித்துக்கொண்டே கமர்ஷியல் படங்களில் கதாநாயகியாக நடிக்க விரும்புகிறேன். அதுபோன்ற படங்களின் வழியேதான் சினிமாவைக் கொண்டாடும் ரசிகர்களைச் சென்று அடைய முடியும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in