ரஜினிகாந்த் நடிக்க ஆசைப்பட்ட கேரக்டரில் நான் நடிக்கிறேன்: நடிகர் சரத்குமார் பெருமிதம்

ரஜினிகாந்த் நடிக்க ஆசைப்பட்ட கேரக்டரில் நான் நடிக்கிறேன்: நடிகர் சரத்குமார் பெருமிதம்

நடிகர் ரஜினிகாந்த் நடிக்க ஆசைப்பட்ட வேடத்தில் 'பொன்னியின் செல்வன்' படத்தில் நான் நடித்ததைப் பெருமையாக கருதுகிறேன் என்று நடிகர் சரத்குமார் கூறியுள்ளார்.

மணிரத்னம் இயக்கும் 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் எடுக்கப்படடுள்ளது. எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் கதையை இரண்டு பாகங்களாக மணிரத்னம் இயக்குகிறார்.

கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், ஐஸ்வர்யா லக்ஷ்மி, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, ஜெயராம், ரகுமான், நிழல்கள் ரவி என மிகப் பெரிய நட்சத்திரப் பட்டாளம் நடித்திருக்கும் 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் செப்டம்பர் 30-ம் தேதி நாடு முழுவதும் ஐந்து மொழிகளில் வெளியாகிறது.

இப்படத்தில் பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் சரத்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், "பழுவேட்டரையர் 64 விழுப்புண்களைப் பெற்ற மாவீரர். பொன்னியின் செல்வன் கதையைப் படிக்கும்போதே பெரிய பழுவேட்டரையர் வேடத்தில் நடிப்பது யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அந்த வாய்ப்பை எனக்கு அளித்த டைரக்டர் மணிரத்னத்துக்கு நன்றி. அந்த வேடத்தில் யாரெல்லாம் நடிக்க ஆசைப்பட்டார்கள் என்று தெரியாது. ரஜினிகாந்த் நடிக்க விரும்பியதை பெருமையாக கருதுகிறேன்.

'பொன்னியின் செல்வன்' படத்தில் சில கதாநாயகர்களின் கதாபாத்திரம் சுருக்கப்பட்டதாக பேசப்படுவது பற்றி எனக்குத் தெரியாது. டைரக்டர் மணிரத்னம் என்ன நினைத்தாரோ அதை சிறப்பாக படமாக்கி இருக்கிறார்.

கதாநாயகனாக நடிச்ச நான் இப்போது அண்ணன், அப்பா கதாபாத்திரங்களில் நடிப்பது குறித்து வருத்தம் இருக்கிறதா என்று கேட்டால், நாயகன், வில்லன், அப்பா, அண்ணன் இதெல்லாம் கதாபாத்திரங்கள். அதில் சிறப்பாக நடிப்பவர்கள் தான் நல்ல நடிகராக இருக்க முடியும்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in