நான் அந்தோணிதாசனின் ரசிகை: பாடகி சித்ரா நெகிழ்ச்சி

நான் அந்தோணிதாசனின் ரசிகை:  பாடகி சித்ரா நெகிழ்ச்சி

சென்னையில் நடந்த ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸ் ஆடியோ கம்பெனி தொடக்கவிழாவில், அந்தோணிதாசனுக்கு உலகெங்கும் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த ரசிகர்களைப்போல நானும் அந்தோணிதாசனின் ரசிகை என பாடகி சித்ரா நெகிழ்ந்து பேசினார்.

பாடகரும், இசையமைப்பாளருமான அந்தோணிதாசன், கவனிக்கப்படாத நாட்டுப்புறப் பாடகர்கள் மற்றும் கலைஞர்களுக்காக, ’ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸ்(Folk Marley Records) என்னும் புதிய ஆடியோ கம்பெனியை தொடங்கியுள்ளார்‌.

திறமைகள் இருந்தும் சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் இருக்கும் கலைஞர்களுக்காக ஒரு தளத்தை உருவாக்கி அதன் மூலமாக வெளிச்சம் பெறாத கலைஞர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கவேண்டும் என்கிற நோக்கில். ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸ் எனும் நிறுவனத்தை துவங்கியிருக்கிறார்.

பாடல் எழுதத் தெரிந்தவர்கள், பாடத்தெரிந்தவர்கள், இசைக்கருவிகளைக் கையாளத் தெரிந்தவர்கள் இன்னும் இசை சம்பந்தமாக திறமைகள் இருந்தும் வாய்ப்பு கிடைக்காதவர்கள் ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தை தொடர்புகொள்ளலாம். அவர்களுக்கு வழிகாட்டியாகவும் பாடல் உருவாக்கவும், நிறுவனம் உதவிசெய்யும். பாடல்கள் உருவாக்கி வைத்திருப்பவர்களும் ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸ் மூலம் வெளியிடலாம். ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸ் துவக்கவிழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

இவ்விழாவில் இயக்குநர் சீனு ராமசாமி பேசுகையில், ‘அந்தோணிதாசனின் இந்த முயற்சியை நான் பாராட்டுகிறேன், தான் நடந்து வந்த பாதையை மறக்காமல் தன்னைப்போல கலைஞர்களைக் கைதூக்கிவிடும் எண்ணம் கொண்டு இந்த நிறுவனத்தை துவங்கியிருப்பது பாராட்டுக்குரியது. எனது ஆதரவு எப்போதும் அந்தோணிதாசனுக்கு உண்டு. அந்தோணிதாசன் மிகப்பிரமாதமான பாடகர் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால், அந்தோணி தாசன் பிரமாதமான நடிகன். அந்தோணிதாசன் ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்தை நான் இயக்குவேன்’ என்று பேசினார்.

இவ்விழாவில் கலந்து கொண்ட பின்னணிப்பாடகி சித்ரா பேசுகையில், ‘அந்தோணிதாசனுக்கு உலகெங்கும் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த ரசிகர்களைப்போல நானும் அந்தோணிதாசனின் ரசிகை, இதை அவரிடமே சொல்லி இருக்கிறேன். மேடையிலும் சொல்லி இருக்கிறேன். இது ஒரு குடும்ப விழா. இத்தனை பாடகர்களின் குரலைக் கேட்டிருக்கிறேன். இந்த மேடையில் அவர்களை நேராகப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. அந்தோணிதாசன் மிக நல்ல மனிதர், மிக அன்பான மனிதர். தன் குடும்பத்தினரையும் தன்னோடு இருப்பவர்களையும் அவர் அன்போடு கவனித்துக்கொள்ளுவதைப் பார்த்து நெகிழ்ந்திருக்கிறேன். அந்தோணிதாசனின் முயற்சிகள் எல்லாம் பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்று பேசினார்’.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in