’நான் உங்க ரசிகன், சொகுசு கார் பரிசா தர்றேன்’: மற்றொரு நடிகைக்கு சுகேஷ் வலை!

பூமி பட்னேகர்
பூமி பட்னேகர்

தான் உங்கள் ரசிகன் என்றும் கார் பரிசாகத் தர விரும்புகிறேன் என்றும் மற்றொரு நடிகைக்கு மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர், வலை விரித்த சம்பவம் இப்போது தெரியவந்துள்ளது.

பெங்களூருவைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர், அரசியல் தலைவர்கள் மற்றும் ஆட்சியாளர்களுடன் நட்பு இருப்பதாகக் கூறி தொழில் அதிபர்கள், அரசியல் பிரபலங்கள் உட்பட பலரை ஏமாற்றிப் பணமோசடி செய்ததாக புகார்கள் எழுந்தன. இரட்டை இலை சின்னத்தை மீட்டுத் தருவதாகக் கூறி, டி.டி.வி.தினகரன் தரப்புக்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், சுகேஷ் கைது செய்யப்பட்டார். சிறையில் இருந்தவாறே தொழிலதிபர் ஒருவரின் மனைவியை ஏமாற்றி ரூ.200 கோடி மோசடி செய்தது தொடர்பாக, சுகேஷ் சந்திரசேகர் மீது டெல்லி பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

சுகேஷ் சந்திரசேகர்
சுகேஷ் சந்திரசேகர்

இது தொடர்பாக, அவர் காதலி நடிகை லீனா மரியா பால், இந்தி நடிகைகள் ஜாக்குலின் பெர்னாண்டஸ், நோரா பதேஹி ஆகியோரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதேநேரம், சுகேஷின் கூட்டாளியான பிங்கி இரானி என்ற ஏஞ்சல் என்பவர் கைது செய்யப்பட்டார்.

பின்னர், சுகேஷ் உட்பட 6 பேர் மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. அதில் ஜாக்குலின் அவர் காதலி போல இருந்ததும், அவருக்கு ரூ.10 கோடி மதிப்புள்ள விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை சுகேஷ் கொடுத்தது குறிப்பிடப்பட்டு இருந்தது. ஜாக்குலினுடன் சுகேஷ் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

சாரா அலி கான், ஜான்வி கபூர், பூமி பட்னேகர்
சாரா அலி கான், ஜான்வி கபூர், பூமி பட்னேகர்

இந்நிலையில் பிங்கி மூலமாக, ஜான்வி கபூர், சாரா அலிகான், பூமி பட்னேகர் ஆகிய நடிகைகளையும் சுகேஷ் அணுகியுள்ள தகவல் இப்போது வெளியாகி இருக்கிறது. அமலாக்கத் துறை சார்பில் டெல்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட துணை குற்றப்பத்திரிகையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகை பூமி பட்னேகரை, கடந்த வருடம் ஜனவரியில் தொடர்பு கொண்ட பிங்கி இரானி, தங்கள் குழுமத்தின் சேர்மன் சுகேஷ், தங்களை சந்திக்க விரும்புவதாகவும் அவர் தங்களின் தீவிர ரசிகர் என்றும் ஒரு சொகுசு காரை பரிசளிக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். மறுநாள் சுகேஷ், பூமி பட்னேகரை தொடர்பு கொண்டு, தான் என்இ நிறுவன சேர்மன் என்றும் தனது புதிய புராஜக்ட் பற்றி பிங்கி உங்களைத் தொடர்பு கொள்வார் என்றும் சொகுசு கார் பரிசளிக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார். ஆனால், சந்தேகமடைந்த பூமி, அந்தப் பரிசை ஏற்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in