`கதாநாயகியை பார்க்காமலேயே இந்தப் படத்தில் நடித்தேன்'- நடிகர் மிர்ச்சி சிவா!

நடிகர் மிர்ச்சி சிவா
நடிகர் மிர்ச்சி சிவாபத்திரிகையாளர்கள் சந்திப்பில்...

லார்க் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிப்பில், ’மிர்ச்சி’ சிவா கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’. பிப்ரவரி 24-ம் தேதியன்று வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஷா பி.என். இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் மிர்ச்சி சிவாவுடன் மேகா ஆகாஷ், அஞ்சு குரியன், மாகாபா ஆனந்த், ஷா ரா, திவ்யா கணேஷ் இவர்களுடன் பின்னணி பாடகர் மனோ உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இதன் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

பாடகர் மனோ பேசுகையில், 'சிங்காரவேலன்’ படத்தில் நடித்த பிறகு இசைஞானி இளையராஜா என்னை அழைத்து, 'மீண்டும் நடிக்கச் சென்றால், உனக்காக பாட்டு காத்துக்கொண்டிருக்காது' என சொன்னார். இதற்குப் பிறகு நடிப்பின் பக்கம் திரும்பிக்கூட பார்க்கவில்லை. ஏனெனில் எந்த பாடல் வெற்றி பெறும் என்று தெரியாது. அதன் பிறகு தயாரிப்பாளர் குமாரிடமும், இயக்குநரிடமும் எப்போது நடிக்க முடியும் என்பதனை தெரிவித்து விடுவேன். அதற்கு ஏற்ப சமரசம் செய்து கொண்டு, என்னை நடிக்க வைத்தனர். கொரோனா தொற்று பாதிப்பிற்கு பிறகு இப்போது தான் மேடைக் கச்சேரிகளுக்கு வாய்ப்பு வருகிறது. அதனை தவறவிட மாட்டேன் என்று சொன்னவுடன், அதனையும் படக் குழுவினர் புரிந்து கொண்டு, எனக்கு கிடைத்த ஓய்வில் பயன்படுத்திக் கொண்டனர்.

‘சிங்காரவேலன்’ படப்பிடிப்பின் போது ஒருமுறை ஆறு மணி அளவில் கமல்ஹாசன் படப்பிடிப்பிற்கு வருகை தந்திருந்தார். இந்த தகவலை இயக்குநர் உதயகுமார் எனக்கு தெரிவிக்கவில்லை. நான் அப்போது 15 நிமிடம் தாமதமாக படப்பிடிப்பு தளத்திற்குச் சென்றேன். அந்த படப்பிடிப்பு தளத்திலிருந்த அனைவரும் ‘வணக்கம்’ வைத்தனர். அதற்கு அடுத்த நாளிலிருந்து படப்பிடிப்பு தளத்திற்கு அரை மணி நேரம் முன்னதாகவே சென்றேன். அதேபோல் இந்தப் படத்திலும் குறிப்பிட்ட நேரத்திற்கு அரை மணி நேரம் முன்னதாகவே சென்று விடுவேன். இதே பாணியை படத்தின் நாயகனான மிர்ச்சி சிவாவும் பின்பற்றினார். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெறும்” என்றார்.

மிர்ச்சி சிவா
மிர்ச்சி சிவா

படத்தின் நாயகன் மிர்ச்சி சிவா பேசுகையில், ''கொரோனா தொற்று காலகட்டத்திற்கு பிறகு தொடங்கப்பட்ட திரைப்படம் இது. இயக்குநர் விக்னேஷ் ஷா போனில் தொடர்பு கொண்டு கதையை விவரித்தார். உணவை விநியோகிக்கும் ஊழியருக்கு செயற்கை நுண்ணறிவு கொண்ட ஸ்மார்ட் போன் ஒன்று கிடைக்கிறது. அதன் பிறகு அவருடைய வாழ்க்கை எப்படி மாறுகிறது? அவனுக்கு அவன் விரும்பியது அனைத்தும் கிடைக்கிறது. அவனுக்கும், போனுக்கும் ஒரு உணர்வுபூர்வமான தொடர்பு ஏற்படுகிறது. அதன் பிறகு அதற்கான தீர்வு என்ன? என திரைக்கதை இருக்கிறது. இது புதிதாக இருந்தது.

இந்தப் படத்தில் யார் நடிக்கிறார்கள்? என கேட்டேன். ‘மேகா ஆகாஷ் நடிக்கிறார்’ என சொன்னார். படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற பிறகு, ‘நீங்கள் ஷங்கர் அவர் சிம்ரன்’ என்றார், நானும் சரி என்று, ‘சிம்ரன் எங்கே?’ என்று கேட்டேன். ஒரு போனை கொண்டு வந்து கொடுத்தனர். நான் மேகா ஆகாஷ் நாளைக்கு வருவார் என நினைத்தேன். ஆனால் படப்பிடிப்பு முடியும் வரையிலும் மட்டுமல்ல, இதுவரையிலும் அவரை நான் நேரில் பார்த்ததில்லை'' என்றார்.

இந்தத் திரைப்படத்தில் லியோன் ஜேம்ஸ் இசையில், ‘சோறு முக்கியம்..’ என்ற பாடல் இடம் பெற்றிருக்கிறது. இந்த பாடலை படமாக்கும் போது பார்வையாளர்களாக ஆயிரம் பேர் திரண்டிருந்தனர். ஏனெனில் நான் முதன்முதலாக இந்த பாடலுக்கு நடனமாடி இருக்கிறேன். இதற்காக நடன இயக்குநர் சாண்டி அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

சிலர் அருகில் இருக்கும் போது சந்தோஷமாக இருக்கும். அந்த மாதிரியான நேர்மறையான அதிர்வை ஏற்படுத்தும் சாதனையாளர் தான் பாடகர் மனோ. இதுவரை 26 ஆயிரம் பாடல்களை பாடி இருக்கிறார். இவர் தமிழ் திரையுலகத்திற்கு கிடைத்த மாபெரும் சொத்து. இவருடன் நடிக்கும் போது, கிடைக்கும் ஓய்வு நேரத்தில் அருகில் அமர வைத்து, அவர் பாடிய பாடல்களை பாடுமாறு கேட்பேன். அவரும் சலிக்காமல் பாடி, அனைவரையும் உற்சாகப்படுத்துவார். இதன் தொடர்ச்சியாக அவருடைய வீட்டிலிருந்து மதிய உணவை வரவழைத்து படக்குழுவினருக்கு வழங்கி அவருடைய விருந்தோம்பலை வெளிப்படுத்துவார். இதற்காகவே அவர் நடிக்கும் அனைத்து படங்களிலும் நானும் அவருடன் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். நாம் அனைவரும் தவறவிட்ட குழந்தைத்தனத்தை அவர் இந்த திரைப்படத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார். இது ரசிகர்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்'' என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in