சாய்னா விவகாரம்: நடிகர் சித்தார்த் மீது வழக்குப் பதிவு

சித்தார்த், சாய்னா
சித்தார்த், சாய்னா

சாய்னா நேவால் குறித்து சர்ச்சைக் கருத்து வெளியிட்டதாக நடிகர் சித்தார்த் மீது, ஹைதராபாத் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பஞ்சாப் சென்ற பிரதமரின் பாதுகாப்பு, கேள்விக்குறியான விவகாரம் குறித்து, பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். அதில், “எந்த நாடும் தனது சொந்த நாட்டுப் பிரதமரின் பாதுகாப்பில் சமரசம் செய்துகொண்டால், அந்த நாடு பாதுகாப்பாக இருப்பதாக கூறிக்கொள்ள முடியாது. பிரதமர் மோடி மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை வலுவான வார்த்தைகளால் கண்டிக்கிறேன்’’ என்று கூறியிருந்தார்.

சாய்னாவின் அந்தப் பதிவை டேக் செய்த நடிகர் சித்தார்த் தெரிவித்திருந்த கருத்து, பெண்களை ஆபாசமாகச் சித்தரிக்கிறது என்று சர்ச்சை எழுந்தது. அவருக்கு எதிராகக் கண்டனங்கள் குவிந்தன. தேசிய மகளிர் ஆணையத் தலைவி ரேகா சர்மா, நடிகர் சித்தார்த் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யுமாறு காவல் துறைக்குப் பரிந்துரை செய்தார். மேலும் சித்தார்த்தின் ட்விட்டர் கணக்கை முடக்குமாறும் அவர் கடிதம் எழுதினார்.

சாய்னா நேவாலின் தந்தை ஹர்விர் சிங் நேவால், நடிகர் சித்தார்த் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இதைத் தொடர்ந்து நடிகர் சித்தார்த் மன்னிப்புக் கேட்டார். தனது முரட்டுத்தனமான நகைச்சுவை தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுவிட்டது என்றும் பெண் என்பதால், அவமதிக்கும் வகையில் கருத்துப் பதிவிடவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சித்தார்த் என்னைப்பற்றிக் கூறிய கருத்து ஏன் வைரலானது என தெரியவில்லை என்றும், அவரைக் கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என்றும் பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தெரிவித்தார்.

இந்நிலையில் பெண் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், ஹைதராபாத் சைபர் க்ரைம் போலீஸார் அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in