உடை விஷயத்தில் 'துணிவு' பட இயக்குநர் காட்டும் அலட்சியம்: பிரபல இயக்குநர் போட்டுடைத்த ரகசியம்

வினோத், அஜித்
வினோத், அஜித்

'துணிவு' பட இயக்குநர் ஹெச்.வினோத் உடை விஷயத்தில் மிகவும் அலட்சியம் காட்டுவதாகவும், அதற்குப் பின்னால் இருக்கும் சமூக நோக்கு குறித்தும் 'கத்துக்குட்டி', 'உடன்பிறப்பே' ஆகிய படங்களின் இயக்குநர் இரா.சரவணன் விமர்சனம் செய்துள்ளார். அவரது முகநூல் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

'தீரன் அதிகாரம் ஒன்று' திரைப்படத்தின் மூலம் கவனம் குவித்தவர் ஹெச்.வினோத். 'நேர்கொண்ட பார்வை', 'வலிமை' ஆகிய படங்களைத் தொடர்ந்து அஜித்தை வைத்து தொடர்ந்து மூன்றாவதாக 'துணிவு' படத்தை இயக்கி உள்ளார். நீண்ட காலத்திற்கு பின்பு இந்த படத்தின் மூலம் அஜித், விஜய் படங்கள் ஒரே நேரத்தில் சேர்ந்து மோதுகிறது. விஜய்யின் 'வாரிசு' படமும், அஜித்தின் 'துணிவு' படமும் ஒரேநாளில் ரிலீஸ் ஆவதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இயக்குநர் இரா.சரவணன்.
இயக்குநர் இரா.சரவணன்.

இந்நிலையில் 'கத்துக்குட்டி', 'உடன்பிறப்பே' ஆகிய படங்களை இயக்கிய இரா.சரவணன், 'துணிவு' இயக்குநர் ஹெச்.வினோத் குறித்துத் தன் முகநூல் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.

அதில், ”இயக்குநர் ஹெச்.வினோத்தை நேரில் சந்திக்கும் போதெல்லாம் சட்டென குற்ற உணர்வுக்கு ஆளானதைப் போல் தோன்றும். காரணம், உடைகள் விஷயத்தில் அவர் காட்டும் அநியாய அலட்சியம். ஒரு நாள் வெளிப்படையாகக் கேட்டே விட்டேன். “ஏன் பெரும்பாலும் போட்ட சட்டையே போடுறீங்க? காசு பணத்துக்கா குறைச்சல்?” இதற்க அவர் சத்தம் போட்டுச் சிரித்தார். “ஒரு சட்டை பயன்படுத்த முடியாத அளவுக்குக் கிழியிற வரைக்கும் நான் அதைப் பயன்படுத்திட்டேதான் இருப்பேன். செருப்பு அறுந்து போகும் வரை யூஸ் பண்ணுவேன். அது என் பழக்கம், கஞ்சத்தனம் இல்ல. ஒரு சட்டையை, செருப்பை, காரை உற்பத்தி பண்ண எவ்வளவு மறைநீர் செலவாகுதுன்னு யூட்யூப்ல பார்த்தேன். பலர்கிட்ட விசாரிச்சா, மயக்கம் வராத குறை. இவ்வளவு தண்ணீரை வீணடிச்சு உருவாகுற பொருளை நாம சரியா பயன்படுத்துறோமான்னு பார்த்தா, கிடையவே கிடையாது.

இந்த ஆதங்கம் இருந்ததே தவிர, அதுக்காக ஒரு சின்ன நகர்வைக்கூட என்னால செய்ய முடியலை. அன்னிக்கு முடிவெடுத்தேன். ஒரு பொருளை முழுவதுமாக பயன்படுத்துறதுதான் இந்த மண்ணுக்கு நான் செய்ற அதிகபட்ச பங்களிப்புன்னு. அதனாலதான் உடைகள் விஷயத்தில் நான் பெரிசா ஆர்வம் காட்டுறது இல்லை” என்றார் ஹெச்.வினோத். இதே கருத்தை இப்போது மீடியாக்களிடமும் வெளிப்படையாகச் சொல்லி வருகிறார் வினோத். கடந்த வாரம் சந்தித்தேன். சபரிமலைக்கு மாலை போட்டிருக்கிறார். ‘துணிவு’ குறித்து கேட்க அவ்வளவு ஆர்வம். அவர் நான் சபரிமலை போய் வந்தது குறித்தே பேசிக்கொண்டு இருந்தார். சாமி சரணம் ஐயப்பா...'துணிவு' தூள் கிளப்பட்டும் நண்பா”என பதிவிட்டுள்ளார். அவரின் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in