வம்பில் மாட்டிவிட்ட நம்பர் ப்ளேட்: சிக்கித் தவித்த விக்கி கவுஷல்!

பாலிவுட் நடிகர் விக்கி கவுஷல்
பாலிவுட் நடிகர் விக்கி கவுஷல்

திரைப்படக் காட்சிகளில் காட்டப்படும் தொலைபேசி எண்கள், நிஜத்திலும் பயன்பாட்டில் இருக்கும் தொலைபேசி எண்ணாக இருந்துவிட்டால், சம்பந்தப்பட்டவர்களுக்குத் தொல்லைகள் நேர்வதுண்டு. அப்படி, படத்தில் காட்டப்படும் வாகனப் பதிவு எண்களும் சில சமயம் சிக்கலை ஏற்படுத்தும். அரிதான சந்தர்ப்பங்களில் அவை புகார்களாகவும் பதிவாவதுண்டு.

‘மாஸான்’, ‘உரி’, ‘சர்தார் உதம்’ போன்ற படங்களின் மூலம் புகழ்பெற்ற பாலிவுட் நடிகர் விக்கி கவுஷல், அப்படி ஒரு விசித்திரமான வழக்கை எதிர்கொள்ள நேர்ந்தது. மத்திய பிரதேசத்தில், ‘லக்கா சுப்பி 2’ இந்திப் படத்தின் படப்பிடிப்பில் பயன்படுத்தப்பட்ட பைக்கின் நம்பர் ப்ளேட்டால் வந்த சிக்கல் அது.

படத்தின் நாயகியான சாரா அலிகானுடன் இந்தூரின் சாலைகளில், அந்த பைக்கில் வலம்வந்தார் விக்கி. அந்நகரின் பாணகங்கா பகுதியில் வசித்துவரும் ஜெய் சிங் யாதவ், அதைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்தார். காரணம், விக்கி ஓட்டிய பைக்கின் நம்பர் ப்ளேட்டில் இருந்தது, ஜெய் சிங்கின் இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணான எம்.பி. 4872.

‘என் அனுமதியில்லாமல் எப்படி என் வாகனப் பதிவு எண்ணைப் பயன்படுத்தலாம்’ என கோபமடைந்த அவர், காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

விசாரணையின்போது எதிர்பாராத திருப்பம் நிகழ்ந்தது. விக்கி பயன்படுத்திய பைக்கின் நம்பர் ப்ளேட்டில் குறிப்பிடப்பட்டிருந்த எண் 1872. ஆனால், அந்த நம்பர் ப்ளேட்டை வாகனத்துடன் இறுக்கிப் பொருத்த திருகாணி பொருத்தப்பட்டிருந்தது. அதனால், 1 எனும் எண், 4 என்பதைப் போல் தெரிந்தது.

படக்குழுவைச் சேர்ந்த ஹர்ஷ் தவே இந்தத் தகவலைத் தெரிவித்ததுடன், “எங்கள் குழுவைச் சேர்ந்த ஒருவர் பயன்படுத்தும் வாகனத்தின் எண் அது. ஆனால், நம்பர் ப்ளேட்டில் திருகாணி இருந்ததால், 1872-ஐ 4872 எனக் கருதிக்கொண்டு ஜெய் சிங் யாதவ் புகார் தெரிவித்துவிட்டார்” எனக் கூறினார்.

பாணகங்கா காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர் ராஜேந்திர சோனியும் அதை உறுதிசெய்திருக்கிறார்.

சினிமா எடுப்பதில்தான் எத்தனைச் சிக்கல்கள் பாருங்கள்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in