தொழிலதிபரை மிரட்டி ரூ.14 லட்சம் பறித்த பிரபல நடிகர் கைது

தொழிலதிபரை மிரட்டி ரூ.14 லட்சம் பறித்த பிரபல நடிகர் கைது

’ஹனிடிராப்’முறையில் தொழிலதிபரை மிரட்டி ரூ.14 லட்சம் பறித்ததாக, நடிகர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பெங்களூரு அல்சூர்கேட் பகுதியில் 73 வயது தொழிலதிபர் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு அந்தப் பகுதியை சேர்ந்த கனவா என்ற இளம் பெண்ணுடன் கடந்த 4 வருடத்துக்கு முன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர் கடந்த வாரம் நிதி என்ற இளம் பெண்ணை, தொழிலதிபருக்கு அறிமுகப்படுத்தி உள்ளார். இவர்கள், தொழிலதிபருக்குத் தங்களுடைய கவர்ச்சியான புகைப்படங்களை அடிக்கடி அனுப்பி வந்துள்ளனர். அதன் மூலம் அவரைத் கவர்ந்திழுக்கத் திட்டம் போட்டனர். மேலும் போனில் பாலியல் ரீதியாகவும் பேசி வந்துள்ளனர்.

இந்நிலையில் இளம் பெண் நிதி, கடந்த 3-ம் தேதி தொழிலதிபருக்கு மெசேஜ் ஒன்றை அனுப்பினார். அதில் குறிப்பிட்ட இடத்தில் சந்திக்க விரும்புவதாகத் தெரிவித்திருந்தார். சபலப்பட்ட தொழிலதிபர், அந்த இடத்துக்கு ஆசையாகச் சென்றார். திடீரென அங்கு வந்த முன் பின் தெரியாத இரண்டு பேர், தாங்கள் போலீஸ்காரர்கள் என்றும் இளம் பெண்களிடம் ஆபாசமாக பேசியதாக புகார் வந்துள்ளதாகவும் பணம் கொடுத்தால், வழக்கை முடித்துவிடலாம் என்றும் அவரிடம் கூறியுள்ளனர்.

இதை உண்மை என்று நம்பிய தொழிலதிபர், முதலில் ரூ.3.40 லட்சமும் பிறகு ரூ.6 லட்சமும் கொடுத்துள்ளார். ஆனால், அவர்கள் தொடர்ந்து மேலும் ரூ.5 லட்சம் கேட்டுள்ளனர். தரவில்லை என்றால், அந்தப் பெண்களின் ஆபாச வாட்ஸ் அப் மெசேஜ்களை குடும்பத்தினருக்கு அனுப்பிவிடுவதாக மிரட்டினர். தொடர்ந்து அவர்கள் பணம் கேட்டு மிரட்டியதால், ஹலசுரு கேட் போலீஸ் ஸ்டேஷனில் தொழிலதிபர் புகார் அளித்தார்.

போலீஸ் விசாரணையில், யுவராஜ் என்பவர், நிதி என்பவர் பெயரில் ஆபாச வாட்ஸ் அப் மெசேஜ்களை அவருக்கு அனுப்பி பேசியிருப்பது தெரிய வந்தது. பெங்களூரு ஜே.பி.நகரை சேர்ந்த யுவராஜ், நடிகர். இவர், ’மிஸ்டர் பீமாராவ்’என்ற கன்னட படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதையடுத்து யுவராஜ் மற்றும் இளம்பெண்ணை கைது செய்துள்ள போலீஸார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in