உண்மைக் கதையைக் இயக்குகிறார் சுதா கொங்கரா: சூர்யா ஹீரோ?

உண்மைக் கதையைக் இயக்குகிறார் சுதா கொங்கரா: சூர்யா ஹீரோ?

இயக்குநர் சுதா கொங்கரா அடுத்து உண்மைக் கதையை படமாக்க இருக்கிறார். அதில் சூர்யா ஹீரோவாக நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.

சூர்யா, அபர்ணா பாலமுரளி, பரேஸ் ராவல், கருணாஸ், ஊர்வசி உட்பட பலர் நடித்த படம் ’சூரரைப் போற்று’. ஏர் டெக்கான் நிறுவனரின் வாழ்க்கைக் கதையை ஒட்டி, இந்தப் படம் உருவாக்கப்பட்டு சூப்பர் ஹிட்டானது. இதையடுத்து இந்தப் படத்தை அவர் இந்தியில் இயக்க இருக்கிறார். அதற்கான பணிகளில் அவர் ஈடுபட்டுள்ளார். இதற்கிடையே இயக்குநர் சுதா கொங்கரா, கே.ஜி.எஃப் 2 படத்தைத் தயாரித்த நிறுவனத்துக்குப் படம் இயக்குகிறார்.

பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியான ’கே.ஜி.எஃப் 2' படத்தில் வசூலில் சாதனைப் படைத்து வருகிறது. இந்தப் படத்தில் சஞ்சய் தத், ரவீணா டாண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தை ஹோம்பாலே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் தயாரித்திருந்தார்.

இவர் அடுத்து தயாரிக்கும் படத்தை சுதா கொங்கரா இயக்க உள்ளார். இதை ஹோம்பாலே பிலிம்ஸ் ட்விட்டரில் அறிவித்துள்ளது. அதில், சில உண்மைக் கதைகள் சொல்லப்படுவதற்கு தகுதியானவை என்று கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் யார் நடிக்கிறார்கள், படம் எப்போது தொடங்கப்பட இருக்கிறது என்கிற விவரங்களை தெரிவிக்கவில்லை. ஆனால், சூர்யா நடிக்கலாம் என்று கூறப்படுகிறது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்க வாய்ப்பிருப்பதாகக் கூறுகின்றனர்.

இந்நிலையில், சூர்யா தரப்பில் விசாரித்தபோது, ``சுதா கொங்கரா, சூரரைப் போற்று படத்தை இந்தியில் இயக்கி வருகிறார். இதை அடுத்து 2 டி நிறுவனத்துக்காக சூர்யா நடிக்கும் படத்தை இயக்குகிறார். அதன் பிறகுதான் ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தை இயக்குகிறார்'' என்று தெரிவித்தனர்.

Related Stories

No stories found.