மும்பை வந்தார் ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்: இதுதான் காரணமா?

மும்பை வந்தார் ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்: இதுதான் காரணமா?

ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் மும்பைக்கு வந்துள்ளார். அவர் ரசிகர்களை நோக்கி கைகாட்டும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித். மென் இன் பிளாக், பேட் பாய்ஸ், செவன் பவுண்ட்ஸ், தி கராத்தே கிட், சூசைட் ஸ்குவாட் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர், டென்னிஸ் வீராங்கனைகளான செரினா, வீனஸ் வில்லியம்ஸ்களுக்குப் பயிற்சி கொடுத்த அவர் தந்தை கிங் ரிச்சர்ட்டின் வாழ்க்கைக் கதையை கொண்ட படத்தில் சிறப்பாக நடித்திருந்தார். இதற்காக ஆஸ்கர் விருதை பெற்றார்.

விருது விழாவில், தன் மனைவி ஜடா பிங்கெட் பற்றி கிண்டலாகப் பேசிய நிகழ்ச்சித் தொகுப்பாளர் கிறிஸ் ராக் என்பவரை மேடையில் ஏறி கன்னத்தில் அறைந்தார். இது பரபரப்பானது. பின்னர் தனது செயலுக்கு வில் ஸ்மித் மன்னிப்புக் கேட்டார். இதையடுத்து அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்த ஆஸ்கர் நிர்வாகம், அவருக்கு 10 ஆண்டுகள் தடை விதித்தது.

இந்தச் சர்ச்சை காரணமாக, எங்கும் செல்லாமல் இருந்த வில் ஸ்மித் இப்போது இந்தியா வந்துள்ளார். மும்பை கலினா விமான நிலையத்தில் இருந்து அவர் வெளியே செல்லும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

நடிகர் வில் ஸ்மித், இந்தியா வருவது இது முதன்முறையல்ல. அவர் கடந்த 2019-ம் ஆண்டு, தி பக்கெட் ஷோ என்ற நிகழ்ச்சியின் படப்பிடிப்புக்காக வந்திருந்தார். அப்போது, சில இந்தி திரையுலக நட்சத்திரங்களைச் சந்தித்தார். ஹரித்துவாருக்கும் சென்றிருந்தார்.

இந்நிலையில், அவர் எதற்காக இப்போது இந்தியா வந்துள்ளார் என்று அதிகாரபூர்வ தகவல் இல்லை என்றாலும் அவர் மன அமைதிக்காகவே இங்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.