‘ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதம் என்ற பெயர் கிடையாது!’

‘ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதம் என்ற பெயர் கிடையாது!’

வெற்றிமாறன் சர்ச்சை குறித்து கமல்ஹாசன் கருத்து

ராஜராஜ சோழன் இந்து மதத்தைச் சேர்ந்தவர் அல்ல என இயக்குநர் வெற்றிமாறன் கூறியது சர்ச்சையாகியிருக்கும் நிலையில், “ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதம் என்ற பெயர் கிடையாது” என்று நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்திருக்கிறார்.

மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் 'பொன்னியின் செல்வன் பாகம் 1' திரைப்படம் வெளியான 5 நாட்களில் தமிழகத்தில் மட்டும் 100 கோடி ரூபாயை வசூலித்து நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் நேற்று இந்தப் படத்தை நடிகர்கள் விக்ரம் மற்றும் கார்த்தி ஆகியோருடன் அமர்ந்து திரையரங்கில் ரசித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய கமல்ஹாசன், “தமிழ் சினிமாவின் பொற்காலம் தொடங்கிவிட்டது என நினைக்கத் தோன்றுகிறது. தமிழ் சினிமா கலைஞனாக இது எனக்கு பெருமிதம் கொள்ளும் நேரம். இந்தப் புத்துணர்ச்சி நீடிக்க வேண்டும். ‘விக்ரம்’ பட சாதனையை இந்தப் படம் முறியடித்துள்ளது என்பது சந்தோஷம்தான். அதைக் கொண்டாடத்தான் நான் இங்கு வந்துள்ளேன். ஆரோக்கியமான போட்டி இருப்பதில் தவறில்லை" என்று பேசினார்.

தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் ராஜராஜ சோழன் இந்து மதம் இல்லை என்று கூறிய கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த கமல்ஹாசன், “ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதம் என்ற பெயர் கிடையாது. சைவம், வைணவம், சமணம் போன்ற சமயங்கள் இருந்தன. இந்து என்பது ஆங்கிலேயர்கள் வைத்த பெயர். இங்கு மதங்கள் வெவ்வேறாக இருந்தன. அவற்றை 8-ம் நூற்றாண்டில் ஆதிசங்கரர் ஷண்மத ஸ்தாபனம் என்று கொண்டுவந்தார். இவையெல்லாம் வரலாற்றில் உள்ளவை. இந்தத் திரைப்படம் ஒரு வரலாற்றுப் புனைவு. இங்கு நாம் சரித்திரத்தைப் புனைய வேண்டாம், திரிக்க வேண்டாம், மொழி அரசியலைத் திணிக்கவும் வேண்டாம். நல்ல கலைஞர்களைக் கொண்டாடுவோம்” என்று கூறினார்.

Related Stories

No stories found.
காமதேனு
kamadenu.hindutamil.in