
பாலிவுட் சினிமா மற்றும் இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த துனிஷா சர்மா என்ற நடிகை, இன்று படப்பிடிப்பு தளத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
20 வயதாகும் துனிஷா சர்மா, குழந்தை நட்சத்திரமாக பாலிவுட் பயணத்தை தொடங்கியவர். தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்கள் பலவற்றில் தொடர்ந்து நடித்து வந்தார். முன்னணி நடிகையருக்கு இணையாக சமூக ஊடகங்களில் செல்வாக்கு மிக்கவராகவும் திகழ்ந்தார். இன்டாகிராமில் இவருக்கு ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர்.
இன்றைய(டிச.24) தினம் மகாராஷ்டிர மாநிலம் வசாய் நகரில் நடைபெற்று வந்த ஒரு சின்னத்திரை தொடருக்கான படப்பிடிப்பில் பங்கேற்றிருந்தார். படப்பிடிப்பின் இடையே மேக்கப் சரிபார்ப்புக்காக ஓய்வறைக்கு சென்றவர் வெகு நேரமாகியும் திரும்பவில்லை. படப்பிடிப்பு குழுவினர் சந்தேகமடைந்து ஓய்வறைக்கு சென்றபோது, அதில் உள்ளடங்கியிருந்த கழிவறையில் துனிஷா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
இளம் நடிகையான துனிஷா சர்மா, தனது திரை பயணத்தின் உச்சத்தில் இருந்தார். மேலும், இறப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பாக அவர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவில், நேர்மறையான கருத்துடன் தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும், துனிஷா தற்கொலை செய்துகொண்ட விதம் குறித்தும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சந்தேக மரணம் என்பதன் கீழ் வழக்கு பதிந்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.