கணவர் மீது நடிகை வழக்கு: உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை

கணவர் மீது நடிகை வழக்கு: உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை

பிரபல கன்னட நடிகை சைத்ரா ஹள்ளிகேரி (36). இவர், 'குரு சிஷ்யரு', 'ஸ்ரீதனம்மா தேவி' உட்பட பல படங்களில் நடித்துள்ளார். சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகிறார். இவரது கணவர் பாலாஜி. இரு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் மைசூரு ஜெயலட்சுமிபுரம் காவல் நிலையத்தில் தன் கணவர், மாமனார் மீது சைத்ரா கடந்த மாதம் புகார் அளித்தார். அதில், தனது வங்கிக் கணக்கைப் பயன்படுத்தி, கணவர் குடும்பத்தினர் நகைக்கடன் பெற்றுள்ளதாகக் கூறியிருந்தார். இந்தப் புகாரின் பேரில் அவரது கணவர் பாலாஜி, மாமனார் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இதற்கிடையே, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கணவர் பாலாஜி மற்றும் மாமனார் போத்ராஜ் மீது பெங்களூரு ஒயிட்பீல்டு காவல் நிலையத்தில் சைத்ரா ஒரு புகார் அளித்தார். அதில், கணவரும், மாமனாரும் தன்னைக் கொடுமைப்படுத்துவதாகக் கூறி இருந்தார். இதுதொடர்பான வழக்கு பெங்களூரு நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.

இந்த விசாரணைக்குத் தடை விதிக்கக் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பாலாஜியும், அவரது தந்தையும் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனு மீதான விசாரணை நேற்று முன் தினம் நடைபெற்றது. அப்போது கீழ் நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in