
`` ’ஜெய்பீம்’ பட விவகாரம் தொடர்பாக, நடிகர் சூர்யாவுக்கு எதிராக எந்த கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கக் கூடாது'' என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தா.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்த படம், “ஜெய் பீம்”. ஓடிடியில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதில், குறிப்பிட்ட சமூகத்தை புண்படுத்தும் வகையில், காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சூர்யா, ஜோதிகா, ஞானவேல் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் கடந்த 2021-ம் ஆண்டு புகார் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் வேளச்சேரி போலீஸார், நடிகர் சூர்யா உள்ளிட்டோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யவும், விசாரணைக்குத் தடை விதிக்கவும் கோரி இயக்குநர் ஞானவேல், நடிகர் சூர்யா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன் இன்று விசாரணைக்கு வந்தது. புகார்தாரர் தரப்பில், வழக்கை ரத்து செய்ய எதிர்ப்புத் தெரிவித்து இடையீட்டு மனு த்தாக்கல் செய்துள்ளதாகவும், அந்த மனுவையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டது. இதை ஏற்று சூர்யா மற்றும் ஞானவேல் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 21-ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அதுவரை இந்த வழக்கில் சூர்யா உள்ளிட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என போலீஸுக்கு உத்தரவிட்டுள்ளார்.