‘எதற்கும் துணிந்தவன்’ பயன்பாட்டுக்கு ‘டம்மி’ துப்பாக்கிகள்!

நீதிமன்ற உத்தரவால் நிம்மதியடைந்த திரைக்கலைஞர்கள்
‘எதற்கும் துணிந்தவன்’ பயன்பாட்டுக்கு ‘டம்மி’ துப்பாக்கிகள்!

சினிமா படப்பிடிப்புகளில் டம்மி துப்பாக்கிகளைப் பயன்படுத்துவது குறித்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, தமிழ்த் திரையுலகினர் மத்தியில் ஆசுவாசம் அளித்திருக்கிறது.

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘எதற்கும் துணிந்தவன்’ படப்பிடிப்பு சென்னை கோயம்பேடு பகுதியில் கடந்த ஆண்டு நடந்தது. அதில் ஏகே-47 ‘டம்மி’ துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டன. ஆனால், அந்த வகை துப்பாக்கிகளைப் பயன்படுத்த முறையான அனுமதி பெறவில்லை எனக் கூறி கோயம்பேடு போலீஸார் அவற்றைப் பறிமுதல் செய்தனர்.

அத்துடன், இதுபோல் டம்மி துப்பாக்கி வைத்திருப்பவர்கள் முறையாக அனுமதி பெற வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

அந்தப் படத்துக்கு செல்வராஜ் என்பவர் டம்மி துப்பாக்கிகளை விநியோகித்தார். சினிமா வட்டாரத்தில் 'கன்' செல்வராஜ் என்று அழைக்கப்படும் இவர், தனது டம்மி ஆயுதங்கள் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக, தென்னிந்தியத் திரைப்பட டம்பி எஃபெக்ட்ஸ் சங்கத்தில் (South Indian Movies Dummy Effects Association (SIMDEA)) இது குறித்துத் தெரிவித்தார். இதுதொடர்பாக அந்தச் சங்கத்தினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர்.

அதில்,‘மகாராஷ்டிர மாநிலத்தில் படப்பிடிப்புக்குப் பயன்படுத்தப்படும் டம்மி ஆயுதங்களுக்கு எண் வழங்கப்பட்டு, உரிமம் வழங்கப்படுகிறது. அந்த மாநில நீதிமன்றம் உத்தரவின்படி போலீஸார் அவ்வாறு செய்துள்ளனர். இதனால், ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு டம்மி துப்பாக்கிகளைக் கொண்டு செல்வது எளிதாகிறது. அதுபோல, தமிழ்நாட்டிலும் டம்மி துப்பாக்கிகளுக்கு எண் வழங்கி, உரிமம் வழங்க டி.ஜி.பி.க்கு உத்தரவிட வேண்டும்’ என அச்சங்கம் கோரிக்கை வைத்தது.

மனுவை விசாரித்த நீதிபதி, ‘மனுதாரர்கள் வைத்திருக்கும் டம்மி ஆயுதங்கள் எண்ணிக்கை அதிகளவில் உள்ளதால் சம்பந்தப்பட்ட காவல் துறை உதவி ஆணையர் மனுதாரரின் இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி அதன்பிறகு ஆயுதங்களுக்குச் சான்றிதழ் வழங்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.

இந்த உத்தரவால், படப்பிடிப்புகளில் இனி டம்மி ஆயுதங்களைப் பயன்படுத்த தடை இருக்காது எனத் திரையுலகினர் நிம்மதியடைந்திருக்கின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in