இளையராஜாவுக்கு விதிக்கப்பட்ட தடை: இசை நிறுவனங்களுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

இளையராஜாவுக்கு விதிக்கப்பட்ட தடை: இசை நிறுவனங்களுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

1980-களில் வெளியான 30 திரைப்படங்களின் இசையைப் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து, பிரபல இசையமைப்பாளர் இளையராஜா தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவுக்குப் பதிலளிக்கும்படி, இந்தியன் ரெக்கார்டு உற்பத்தி நிறுவனம் உள்ளிட்ட மூன்று இசை நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரபல இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்து, 1980-களில் வெளியான, 20 தமிழ்ப் படங்கள், 5 தெலுங்கு, 3 கன்னட, 2 மலையாளப் படங்கள் என மொத்தம் 30 படங்களின் இசைப் பணிகளுக்கு, படத் தயாரிப்பாளர்களிடமிருந்து காப்புரிமை பெற்றுள்ளதால், இந்தப் படங்களின் இசையைப் பயன்படுத்த இளையராஜாவுக்குத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரி இந்தியன் ரெக்கார்டு உற்பத்தி நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, இந்த 30 படங்களின் இசை இந்தியன் ரெக்கார்டு உற்பத்தி நிறுவனத்துக்குச் சொந்தமானது எனக் கூறி, அவற்றைப் பயன்படுத்த இளையராஜா மற்றும் இரு இசை நிறுவனங்களுக்கு தடை விதித்து கடந்த 2020 பிப்ரவரியில் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து இளையராஜா தரப்பில் வழக்கறிஞர்கள் தியாகராஜன், சரவணன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். அந்த மனுவில், படத் தயாரிப்பாளர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியன் ரெக்கார்டு உற்பத்தி நிறுவனத்துக்குச் சாதகமான உத்தரவைப் பிறப்பிக்க முடியாது என்றும், படத் தயாரிப்பாளர்களுக்குப் படத்தின் காப்புரிமை மட்டுமே உள்ளதாகவும், இசைப் பணிகளுக்கு அவர்கள் முதல் உரிமையாளர்கள் அல்ல என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த விவகாரம் வர்த்தகம் சம்பந்தப்பட்டது என்பதால் அது சம்பந்தமான வழக்குகளை விசாரிக்கும் அமர்வுதான் விசாரிக்க வேண்டும் என்றும், தனி நீதிபதியின் உத்தரவு அதிகாரவரம்புக்கு அப்பாற்பட்டது என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தனி நீதிபதியின் உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும், அதை ரத்து செய்ய வேண்டும் என்றும் இளையராஜா தரப்பு மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி மற்றும் தமிழ்ச்செல்வி அடங்கிய அமர்வு, மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்க இந்தியன் ரெக்கார்டு உற்பத்தி நிறுவனம் உள்ளிட்ட மூன்று நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது.

Related Stories

No stories found.