என்மீது படிந்துள்ள குடும்பப் பெண் இமேஜை மாற்ற வேண்டும்!

’தலைக்கூத்தல்’ வசுந்தரா பேட்டி
வசுந்தரா
வசுந்தரா

ஆர்யா நாயகனாக நடித்த ‘வட்டாரம்’ படத்தில் அதிசயாவாக அறிமுகமானவர் வசுந்தரா. அதன்பின்னர், அவரை ‘பேராண்மை’ படத்தில் வசுந்தரா என்கிற இயற்பெயரிலேயே நடிக்க வைத்தார் எஸ்.பி.ஜனநாதன். ‘பேராண்மை’க்குப் பிறகு பேச்சியாக ‘தென்மேற்குப் பருவக் காற்று’ படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து இன்னும் பேசப்பட்டார். ஆனாலும் ஏனோ பிறகு பின் தங்கிப் போனார். கடந்த 10 வருடங்களில் பெயர் சொல்லும் சில படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்துள்ள வசுந்தரா, மீண்டும் ‘தலைக்கூத்தல்’ படத்தின் மூலம் தனது இருப்பைக் காட்டியிருக்கிறார். காமதேனுவுக்காக அவருடன் உரையாடியதிலிருந்து...

‘பேராண்மை’க்கு முன்பே நீங்கள் மூன்று படங்களில் நடித்துவிட்டீர்கள். என்றாலும் ‘பேராண்மை’தான் உங்களை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது இல்லையா?

ஆமாம்! நான் சினிமாவுக்கு ஒரு மென்டர் இல்லாமல்தான் நடிக்க வந்தேன். ஆனால், ‘பேராண்மை’யில் உன்னால் சிறந்த நடிப்பைக் கொடுக்க முடியும் என்று சொல்லி என்னை எனக்கே அடையாளம் காட்டிய எனது மென்டர் தான் ஜனா சார். நான் கேட்ட எல்லா சந்தேகங்களுக்கும் பதில் சொல்லி எனக்கு நிறையக் கற்றுக்கொடுத்திருக்கிறார். நான் இயக்குநர் ஆக விரும்புகிறேன் என்றபோது, “நீயெல்லாம் எதற்கு டைரக்டர் ஆகணும்” என்று அவர் கேட்கவில்லை. “டைரக்டர் ஆகவேண்டும் என்று முடிவுசெய்துவிட்டாய் என்றால் நீ இதையெல்லாம் கற்றுக்கொள்” என்று வழிகாட்டினார்.

வாசிக்க வேண்டிய புத்தகங்கள், பார்க்க வேண்டிய படங்கள் பற்றி எனக்கு ஒரு பெரிய பட்டியலே கொடுத்தார். ‘பேராண்மை’ படத்துக்கு, ஒரு பத்திரிகையின் அட்டையில் வெளியாகிருந்த எனது படத்தைப் பார்த்துவிட்டு நடிக்கக் கூப்பிட்டார். “சார் ஸ்கிரீன் டெஸ்ட் உண்டா?” என்றேன். “அதெல்லாம் எதுக்கும்மா... நீ இந்தப் படத்துல நடிக்காதே... உன் கேரக்டர் என்ன செய்யுமோ அதை செய். நான் சொல்லித் தர்றேன். அதைச் செய் போதும். வலிஞ்சு நடிக்காதே” என்றார் ஜனா சார்.

“வில் வித்தை கத்துக்க. அது இந்தப் படத்துக்கு பயன்படுத்தோ இல்லையோ... உனக்கு நல்ல வலிமையைக் கொடுக்கும்” என்று சொல்லி அந்தக் கேரக்டருக்காக கற்றுக்கொள்ள வைத்தார். அவர் சொன்னது முற்றிலும் உண்மை. வில் வித்தைக் கற்றுகொண்ட பின், சிதறிய என் சிந்தனை ஒருமுகப்பட்டது. அவரைப் போல் ஒரு சிறந்த மனிதரையும் எதிர்காலத்துக்கான படங்களைக் கொடுத்த இயக்குநரையும் நாம் இழந்துவிட்டோம்.

இயக்குநர் சீனு.ராமசாமியின் முதல் படக் கதாநாயகி என்று பெருமைப்பட்டுக்கொண்டது உண்டா?

இல்லாமலா? நாயகனாக விஜய் சேதுபதி சாரின் முதல் படமும் அதுதான் இல்லையா? யதார்த்த நடிப்பை ஜனா சார் சொல்லிக் கொடுத்திருந்தது ‘தென்மேற்குப் பருவக் காற்றில்’ நடித்தபோது எனக்குக் கைகொடுத்தது. சீனு சாரும் நிறையக் கற்றுகொடுத்தார். கவிதையை வாசிக்கவும் கவிதை வாசிப்பதை ரசனையாக கேட்கவும் கற்றுக்கொடுத்தார்.

சென்னையிலிருந்து மதுரைக்கு விமானத்தில் போய், அங்கிருந்து தேனிக்கு ஜீன்ஸ் போட்டுக்கொண்டுபோய் இறங்கினேன். அன்றைக்கே சீனு ராமசாமி சார் கண்டாங்கி காட்டன் புடவையைக் கொடுத்து கட்டிக்கொள்ள வைத்தார். புடவையைக் கட்டிக்கொண்டதுமே நான் வேறொரு ஆளாக மாறிப்போனேன். சின்னச் சின்னக் கேரக்டர்களைக் கூட கவிதை மாதிரி எழுதுவார் சீனு.ராமசாமி சார். நான் கதாநாயகி என்றால் கேட்க வேண்டுமா? ‘தென்மேற்கு பருவக் காற்று’ என்னை இன்னும் நிறைய ரசிகர்களிடம் கொண்டுபோய் சேர்த்தது அப்படித்தான்.

மணி ரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ஒரு கதாபாத்திரத்துக்கு உங்களைத் தேர்ந்தெடுத்ததாக செய்திகள் எல்லாம் வெளியானதே..?

அந்த செய்தி எனது கவனத்துக்கும் வந்தது. எனது திரையுலக நண்பர்களும் இயக்குநர்களும் கூட நிச்சயமாக உனக்கு அந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு வரும் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால், வரவில்லை. இப்போதும்கூட ‘பொன்னியின் செல்வன்’ மாதிரியான வரலாற்றுப் படங்களில் நடிக்க மிகுந்த ஆவல் கொண்டிருக்கிறேன். நான் அதில் நடிக்காவிட்டாலும் ஜெயம் ரவியின் பக்குவப்பட்ட நடிப்பை அதில் ரசித்தேன்.

வசுந்தரா என்றாலே குடும்பப் பாங்கான தோற்றம் கொண்டவர், அதுபோன்ற வேடங்களுக்குத்தான் பொருத்தமானவர் என்று சொல்வதை ஏற்றுக்கொள்கிறீர்களா?

மறுக்கிறேன். குடும்பப்பாங்கான தோற்றம் கொண்ட ஒரு பெண்... மாடர்ன் கதாபாத்திரங்களில் நடிக்கக்கூடாது என்று எந்த ரூலும் இல்லையே! தற்போது உதயநிதி ஸ்டாலினுடன் ‘கண்ணை நம்பாதே’ படத்தில் மாடர்ன் பெண்ணாக நடித்திருக்கிறேன். மு.மாறன் இயக்கியுள்ளார். த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இதில் எனக்கு முற்றிலும் மாடர்னான கதாபாத்திரம். ரொம்ப நாளாக இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க ஏங்கிக் கொண்டிருந்தேன்.

‘பேராண்மை’யில் நடித்தது போன்று இதில் முரட்டுத்தனமாக நடந்து கொள்ளும் ஒரு கதாபாத்திரம். இதில் உதயநிதிக்கும் எனக்கும் விறுவிறுப்பான ஆக்‌ஷன் காட்சிகள் இருக்கின்றன. ‘கண்ணே கலைமானே’ படத்தில் அவருடன் முதலில் இணைந்து நடித்தேன். அதில் பார்த்ததுபோலத்தான் எந்த பந்தாவும் இல்லாமல் பழகினார். சண்டைக்காட்சிகளின்போது யாருக்கும் அடிபட்டுவிடக்கூடாது என உதயநிதி கவனம் எடுத்துக்கொண்டதை மறக்க முடியாது. தற்போது தமிழ்நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் ஆகிவிட்ட அவருக்கு என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சமுத்திரக்கனியின் இயக்கத்தில் ‘போராளி’ படத்தில் நடித்தீர்கள். இப்போது அவருடன் இணைந்து ‘தலைக்கூத்தல்’ படத்தில் நடித்திருக்கிறீர்கள். சமுத்திரக்கனி பற்றி கூறுங்கள்...

’லென்ஸ்’ படத்தை இயக்கிய ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் படம்தான் ‘தலைக்கூத்தல்’. அதில் சமுத்திரக்கனி, கதிர் என இரண்டு ஹீரோக்கள். நான் சமுத்திரக்கனியின் ஜோடியாக நடித்துள்ளேன். சில கிராமங்களில் உடல்நலம் பாதிக்கப்பட்ட முதியவர்களைத் தலைக்கூத்தல் என்கிற முறையில் கருணைக்கொலை செய்வதை களமாகக் கொண்ட படம். சமுத்திரக்கனி சென்டிமென்டான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டபோது சமுத்திரக்கனியின் நடிப்பைப் பார்த்து நான் உட்பட செட்டில் பலரும் அழுதோம்.

இப்படி சென்டிமென்டான காட்சிகளை படமாக்கிக்கொண்டு இருக்கும்போது, பக்கத்து வீட்டில் ஓடும் ஒரு மிக்சி சத்தமோ, வெளியே ஐஸ் விற்பவர் போடும் சத்தமோ திடீரென உள்ளே நுழைந்து அந்தச் சூழலின் சீரியஸ் தன்மையையே மாற்றி காமெடி ஆக்கிவிடும். அந்தக் கலகலப்பான சூழலிலிருந்து மீண்டும் இறுக்கமான மனநிலைக்கு மாறி அந்த காட்சிகளில் நடிப்பது எங்கள் அனைவருக்குமே சவாலான விஷயமாக இருந்தது. அந்தப் படத்தின் காட்சிகள் அனைத்தும் லைவ் சவுண்ட் முறையில் படமாக்கப்பட்டதால் அப்படி பேசி நடிப்பது எனக்குப் புதுவித அனுபவமாக இருந்தது.

தற்போது வேறு என்ன படங்களில் நடிக்கிறீர்கள்?

‘பப்கோவா’ என்கிற வெப்சீரிஸை இயக்கிய லட்சுமி நாராயணன் இயக்கத்தில் த்ரில்லர் ஜானரில் உருவாகும் ஒரு படத்தில் நடிக்கிறேன். ஓடிடியிலும் ஒரு படத்தில் நடிக்கிறேன். ஒரு புது முயற்சியைச் செய்துபார்க்க வேண்டும் என்றால் அதற்கு ஓடிடி தான் சரியாக இருக்கும்.

ஓடிடி தளத்துக்கு புதுப் புது கன்டென்டுகளோடு புது இயக்குநர்கள் நிறைய வருகிறார்கள். ஓடிடி புகழ்பெற்ற பிறகு சினிமா என்ன ஆகுமோ என்று பலரும் கவலைப்பட்டார்கள். ஆனால், எப்போதுமே சினிமாதான் ராஜா என்பதை காட்டிவிட்டது. விக்ரமும் பொன்னியின் செல்வனும் 400, 500 கோடி வசூல் செய்திருக்கின்றன. இது ஓடிடியில் சாத்தியமில்லை. ஆனால், ஓடிடியில் கிடைப்பதுபோன்ற படைப்புகளை எதிர்பார்த்து தியேட்டர்களுக்குச் செல்ல முடியாது. அதுதான் ஓடிடியின் தனித்துவம். 2023-ல் இன்னும் நிறைய ஓடிடி படைப்புகளில் நடிக்க வேண்டும். குறிப்பாக, அதிகமான மாடர்ன் கதாபாத்திரங்களில் நடித்து, என் மீது படிந்துள்ள குடும்பப் பெண் இமேஜை மாற்றவேண்டும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in