
சீரியல் வழியாக சினிமாவுக்குள் நுழைந்து ஆர்பாட்டம் இல்லாமல் அமைதியாகப் பயணித்துக் கொண்டிருப்பவர் வாணி போஜன். சமீபத்தில் வெளியான ‘மிரள்’ படத்தில் பரத் ஜோடியாக நடித்திருந்த இவர், தற்போது ‘லவ்’ படத்தில் மீண்டும் அவருடன் இணைந்து நடித்திருக்கிறார். அதுபற்றியும் அவரது சினிமா பயணம் குறித்தும் காமதேனுவுக்காக உரையாடியதிலிருந்து ஒரு பகுதி...
நீங்கள் நடித்து வெளியாகும் ஒவ்வொரு படத்தின்போதும் ஏதாவதொரு சர்ச்சை உங்களைச் சுற்றி வட்டமிடுகிறதே?
அதெல்லாமே இன்றைய ரீல்ஸ், ஷார்ட்ஸ் போன்ற வீடியோ தேவைகளுக்காக பரபரப்புக்காக தலைப்பு வைத்து உருவாக்கப்படுபவை. தனிப்பட்ட முறையில் என்னைத் தாக்காதவரை அவற்றை நான் மௌனமாகக் கடந்து சென்றுவிடுகிறேன்.
பரத்துடன் மீண்டும் நடித்தது எதிர்பாராமல் அமைந்ததா?
ஆமாம்! 24 ஏ.எம். பட நிறுவனம் தயாரித்த ‘ஓ மை கடவுளே’ படத்தின் மூலம்தான் நான் சினிமாவில் அறிமுகமானேன். அதே நிறுவனம் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக ‘பேச்சிலர்’ படத்தில் கதாநாயகியாக நடிக்க அழைத்தார்கள். அந்தப் படத்தின் கதையையும் எனது கதாபாத்திரத்தையும் கேட்டபோது எனக்கு செட்டாகும் என்று தோன்றவில்லை. அதனால், அதில் நான் நடிக்க விரும்பவில்லை என்று கூறிவிட்டேன்.
நான் அப்படிச் சொல்லிவிட்டதால் இனி, 24 ஏ.எம். நிறுவனத்தின் படங்கள் எதிலும் நடிக்க என்னை அழைக்கமாட்டார்கள் என்றுதான் நினைத்தேன். ஆனால், தயாரிப்பாளர் டெல்லி பாபு சார், ‘மிரள்’ படத்தின் கதை நிச்சயமாக எனக்குப் பிடிக்கும் என்று சொல்லி என்னிடம் கதையைக் கூறும்படி இயக்குநரை அனுப்பி வைத்தார். அது அவரின் நல்லெண்ணத்துக்கு எடுத்துக்காட்டு. அப்படித்தான் ‘மிரள்’ படத்தில் பரத்துடன் நடித்தேன்.
அந்தப் படம் முழுவதும் 20 நாட்கள் இரவு நேரத்தில் படப்பிடிப்பு நடந்தது. கடினமான காட்சிகளில் நானும் பரத்தும் ஒருவருக்கொருவர் உற்சாகப்படுத்திக்கொண்டு நடித்தோம். ‘மிரள்’ படப்பிடிப்பின்போதுதான் ‘லவ்’ படத்தின் கதையைக் கேட்டேன். கேட்டதும் பிடித்தது. அப்போது அதில் யார் ஹீரோ என்றெல்லாம் நான் கேட்கவில்லை. பின்னர், பரத் தான் ஹீரோ என்றபோது சந்தோஷமாக இருந்தது. அவர் சிறந்த உழைப்பாளி.
'லவ்’ படத்தில் என்ன கதாபாத்திரம் ஏற்றிருக்கிறீர்கள்?
பரத்தின் மனைவியாக வருகிறேன். படத்தில் காதலும் இருக்கிறது அதற்கு எதிரான விஷயமும் இருக்கிறது. திருமணத்துக்குப் பிறகு கணவரிடம் எனக்கும், என்னால் கணவருக்கும் ஏற்படும் முரண்பாடுகளால் எங்கள் காதல் என்ன பாடுபடுகிறது என்பதுதான் கதை. இந்தக் காலத்தில் கணவன் - மனைவி உறவு எப்படி இருக்கிறது என்பதைக் குடும்பத் த்ரில்லர் பாடமாகக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஆ.பி.பாலா.
படத்தில் பரத்தை நீங்கள் அடிக்கிற காட்சிகள் உண்டு எனப் பேசியிருக்கிறீர்களே..?
ஆமாம்! பரத்தை அடிக்க வேண்டிய காட்சியில் நான் மிகவும் தயங்கினேன். ஆனால், “படம் நன்றாக வரவேண்டும் என்றால் என்னைத் தயங்காமல் அடி! அது நிஜமான அடியாக இருக்கட்டும். அப்போதுதான் ரியலாக இருக்கும்” என்று பரத் சொன்னார். நானும் கூட பரத்திடம் நிஜ அடிகள் வாங்கித் தான் நடித்தேன்.
படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்குப் போனபோது ஒருநாள் அம்மா கேட்டார்: “நீ என்ன ஷூட்டிங் போறியா... இல்ல யாரோடயும் சண்டைக்குப் போய்ட்டு வர்றியா? முகமெல்லாம் இப்படி வீங்கிக் கிடக்கு” என்றார். ‘லவ்’ நான் அடிவாங்கி அடிவாங்கி நடித்த படம்.
காதலைப் பற்றி உங்களது தனிப்பட்ட கருத்து என்ன?
என்னைப் பொறுத்தவரை காதல் என்பது நம்பிக்கை. அப்பா - அம்மாவின் அழகான காதலின் தயாரிப்புகள்தான் நாம். அதேபோல், ஒரு ஆணுக்கு பெண்ணிடமும் பெண்ணுக்கு ஆணிடமும் இருப்பது மட்டுமே காதல் அல்ல; குடும்பம், தொழில், நாம் நேசிக்கும் உயிர்கள், சக மனிதர்கள், இந்த உலகில் உள்ள அழகான, நேர்மையான விஷயங்கள் அத்தனையின் மீதும் நமக்கு ஒரு பற்றும் நம்பிக்கையும் இருக்குமானால் அதுதான் காதல்.
உங்களிடம் தைரியமாக காதலைச் சொன்னவர்கள் உண்டா?
இப்போது இன்ஸ்டாகிராமில் வந்து காதலைச் சொல்பவர்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள். அவர்கள் யார் என்னவென்றே தெரியாதே... அதனால் புன்னகையுடன் கடந்து சென்றுவிடுகிறேன்.
‘தெய்வத் திருமகள்’ தொடரின் நாயகி சத்யா என்றால் இன்றைக்கும் தொலைக்காட்சி ரசிகர்கள் நினைவில் வைத்திருக்கிறார்கள். ஆனால், சினிமாவில் பல படங்களில் நடித்தும் கூட இன்னும் உங்களை நினைவில் வைத்துக்கொள்கிற மாதிரி எதுவும் அமையவில்லையே? அதில் ஏதும் வருத்தம் இருக்கிறதா?
நிச்சயமாக இல்லை. ஏதோ நடித்தோம், நடனமாடினோம் என்பது மாதிரியான ஹீரோயின் ரோல் எதுவும் நான் சினிமாவில் செய்யவில்லை. அதுபோன்ற ரோல்கள் செய்யும் எண்ணமும் எனக்கு இல்லை. சில படங்கள் நன்றாகப் போகின்றன. சில படங்கள் சுமாராகப் போயிருக்கின்றன. ஒரு படம் பெரிய வெற்றியைப் பெரும்போது வாணியும் அந்த வெற்றியில் பேசப்படுவாள் என்று நினைக்கிறேன்.
சின்னச் சின்ன கதாநாயகிகள் எல்லாம் ‘பெண் மையப் படங்க’ளில் நடிக்கிறார்கள். நீங்கள் அதற்குத் தயாராக இல்லையா?
நடித்தால் ‘கங்குபாய்’ மாதிரி ஒரு பெண் மையப் படத்தில் நடிக்க வேண்டும். ஏனோ தானோ பெண் மையப் படங்களில் நடிக்க விரும்பவில்லை.
ஒரு நட்சத்திரமாக இருப்பது, ஒரு சிறந்த நடிகராக இருப்பது, இரண்டில் எதை விரும்புகிறீர்கள்?
‘ஸ்டார்டம்’மில் எப்போதுமே எனக்கு நம்பிக்கை இருந்ததில்லை. “வாணி போஜனைக் கூப்பிடுங்கப்பா... அந்த பொண்ணு நல்லா நடிப்பாங்க” என்று என் நடிப்பின் மீது நம்பிக்கை வைத்துத்தானே என்னை அழைக்கிறார்கள். அப்படி அறியப்படவே நான் விரும்புகிறேன்.
அடுத்து நடிக்கவிருக்கும் படங்கள்..?
விஷ்ணு விஷாலுடன் ஒரு படம் ஒப்பந்தமாகியிருக்கிறேன். புதிய இயக்குநர் இயக்குகிறார். விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது. அடுத்து ஒரு பெரிய பேனர் படத்தில் நடிக்கிறேன். அதை அவர்களே அறிவிப்பார்கள்.