நானும் விஜய்யும் இணைந்து நடிப்போம் என நம்புகிறேன்!

’ராங்கி’ த்ரிஷா பேட்டி
த்ரிஷா
த்ரிஷா

குந்தவையாக மணி ரத்னத்தால் வார்க்கப்பட்டிருந்த த்ரிஷாவின் நளினமும் தோற்றமும் பொன்னியின் செல்வனின் மூத்த ரசிகர்களையே கவர்ந்துகொண்டது. தற்போது வரலாற்றிலிருந்து நிகழ்காலத்துக்கு வந்திருக்கிறார் த்ரிஷா. ஏ.ஆர்.முருகதாஸ் கதை எழுத, த்ரில்லர் படங்களை இயக்கிப் பெயர்பெற்ற சரவணனின் திரைக்கதை, இயக்கத்தில் உருவாகி வெளிவந்திருக்கும் ‘ராங்கி’ படத்தில் முதல் முறையாக ஆக்‌ஷன் களத்தில் அதிரடி காட்டி நடித்திருக்கிறார் த்ரிஷா. அந்தப் படத்துக்காக பத்திரிகையாளர்களைச் சந்திக்க வந்திருந்த த்ரிஷா காமதேனுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டி இது:

கதாநாயகியாக கடந்து வந்துள்ள இந்த இருபது வருடங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?

எனது வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே சினிமா மாறிப்போய்விட்டது. நிறையவே எனக்குக் கொடுத்திருக்கிறது. இன்னமும் கொடுத்துக்கொண்டு இருக்கிறது. 20 வருடங்கள் கடந்து போனதே தெரியவில்லை. நீங்கள் சொல்லும்போதுதான் இத்தனை வருடங்களா என்றே எண்ணிப் பார்க்கிறேன். என்றாலும் இப்போதும் எந்தவொரு படமென்றாலும் ஒரு அறிமுக நடிகரைப் போல்தான் படப்பிடிப்புக்குச் செல்வேன். எல்லா படங்களில் இருந்தும் நிறையக் கற்றுக்கொண்டிருக்கிறேன். அதனால் படப்பிடிப்பின் ஒவ்வொரு நாளும் எனக்குப் புதிய நாள் போலத்தான் இப்போது வரை உணர்கிறேன்.

புதிய இயக்குநர்களுடன் பணியாற்றும்போது அதை இன்னும் அதிகமாக உணர்கிறேன். இந்த இடத்தில், என்னைக் கொண்டாடும் ரசிகர்களை நினைவில் நிறுத்த விரும்புகிறேன். கரோனா காலத்தில் எனது படங்கள் எதுவும் வெளியாகவில்லை என்றாலும் என்னை அவர்கள் நிபந்தனை ஏதுமின்றி சப்போர்ட் செய்திருக்கிறார்கள். இது பெரும் அன்பின் நிமித்தமானது. இதை கொடுப்பினை என நினைக்கிறேன்.

‘சவுத் குயின்’ என்று உங்களை ரசிகர்கள் அழைப்பதை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்?

எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த டைட்டிலையும் நான் கொடுத்துக்கொள்வதில்லை. அதுபோன்ற டேக் லைன்களில் எனக்கு நம்பிக்கையும் இல்லை. ஆனால், நீங்கள் குறிப்பிடும் ‘சவுத் குயின்’ எனக்குப் பிரியத்துடன் எனது ரசிகர்கள் கொடுத்தது. எனது ரசிகர்கள் என்று சொல்லும்போது ஆண்கள் எந்த அளவுக்கு இருக்கிறார்களோ அதே அளவுக்கு பெண்களும் இருக்கிறார்கள்.

என்னைப் பொது இடங்களிலும் நிகழ்ச்சிகளிலும் காணும்போது “ஹேய்.. எஸ்.ஜி...” என்று அழைத்தார்கள். நான் கூடத் தொடக்கத்தில் என்ன இது நம்மைப் பார்த்து ‘எஸ்.ஜி’ என்று கூப்பிடுகிறார்கள் என்று குழம்பினேன். பிறகுதான் தெரிந்தது.. அது ‘சவுத் குயின்’ என்பதன் சுருக்கம் என்று. இத்தனை தீவிரமாகப் பயன்படுத்தும் அந்தப் பட்டம் அவர்கள் இதயத்திலிருந்து எனக்குத் தரப்பட்டிருக்கிறது. அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன்.

நட்சத்திரம் - நடிகர் ஆகிய இரண்டில் எது உங்கள் தெரிவு?

நட்சத்திரமாக இருந்து கொண்டே சிறந்த நடிகராகவும் இருக்க முடியும் என்பதை ‘ராங்கி’யில் நான் ஏற்றுள்ள தையல் நாயகி போன்ற கதாபாத்திரங்கள் வழியாக நீங்கள் காண முடியும். ஆனால், நட்சத்திரமாக இருக்க அளவான கிளாமரில் நடிக்க வேண்டும். நடிகராகவும் தொடர நல்ல கேரக்டர் ரோல்கள் செய்ய வேண்டும். இரண்டையுமே நான் கடினமாகத்தான் உணர்கிறேன். இரண்டையுமே எளிதாகக் கையாள முடியாது.

முதல் முறையாக இதில் ஆக்‌ஷன் கதாபாத்திரம் ஏற்றிருக்கிறீர்கள் அல்லவா..?

இதற்கு முன் சில படங்களில் கொஞ்சமாக ஆக்‌ஷன் செய்திருக்கிறேன் என்றாலும் இதில் மிக இயல்பாக ஆக்‌ஷன் காட்சிகள் அமைந்துள்ளன. கதாநாயகியான ஒரு ஜர்னலிஸ்ட்டை வலுக்கட்டாயமாக ஆக்‌ஷனில் இழுத்துவிடும் சூழ்நிலை இரண்டாம் பாதிப் படத்தில் இடம்பெற்றுள்ளது.

யோசிக்காமல், பயமில்லாமல் சில விஷயங்களைச் செய்துவிடும் கேரக்டர். நிஜ வாழ்க்கையிலும் கூட நான் அப்படித்தான். இக்கதையில் எதிர்பாராமல் ஒரு சீரியஸான இடத்தில் மாட்டிக்கொள்வாள் நாயகி. அதிலிருந்து அவள் எப்படி வெளியே வருகிறாள் என்பதுதான் கதை. ஆக்‌ஷன் காட்சிகளில் ‘ரோப்’ ஷாட்கள் இருந்தன. என்றாலும் எனக்கு ‘பாடி டபுள்’ கலைஞரும் பல ஷாட்களில் நடித்துக் கொடுத்திருக்கிறார்.

படங்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் கொண்டுவிட்டீர்களா?

ஆமாம்! ஒரு நேரத்தில் ஒரு படத்துக்கு மட்டும் கால்ஷீட் கொடுத்து, அதில் மட்டும் கவனம் செலுத்தி அந்தப் படத்தை முடித்துக்கொடுத்துவிட்டு அடுத்த படத்துக்குப் போகலாம் என்கிற இடத்துக்கு வந்துவிட்டேன். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வருடத்துக்கு ஐந்து படங்களில் நடித்தேன். தற்போது மனதுக்குப் பிடித்த இரண்டு படங்கள் போதும் என்று முடிவெடுத்துவிட்டேன். என்னை நான் கவனித்துக் கொள்ள கிடைக்கும் நேரம் எனக்கு நிறையவே பிடித்திருக்கிறது.

விஜய் நடிக்கும் அவரது 67-வது படத்தில் நீங்கள்தான் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறீர்கள் என்று செய்திகள் வெளியானதே..?

அதைப் பற்றி 2023-ல் பேசுவோம். நானும் விஜய்யும் இணைந்து படம் நடித்து 15 வருடங்கள் ஆகிவிட்டது. நானும் கூட விஜய்யுடன் இணைந்து நடிப்பதை விரும்புகிறேன். இணைந்து நடிப்போம் என்று நம்புகிறேன்.

திருமணம் செய்துகொள்வதால் திரைப்பட வாய்ப்புகள் பாதிக்கும் என்று நினைக்கிறீர்களா?

இல்லவே இல்லை. தபு மேடமும் ஐஸ்வர்யா ராயும் இன்னும் பாலிவுட்டில் லீட் செய்துகொண்டிருக்கிறார்களே... அதுபோன்ற கற்பனைகள் எல்லாம் தற்போது ரசனையின் உயர்வால் மாறிவிட்டன. இன்னொன்றையும் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். நான் நடிக்க வந்த கால கட்டம் மாற்றங்கள் நிகழத் தொடங்கியிருந்த புத்தாயிரத்தின் தொடக்கம். மாற்றங்கள் தேங்கிவிடாமல் முழு வீச்சில் தொழில் நுட்பமும் நடிகர்களை, நட்சத்திரங்களை ரசிகர்கள் அணுகும்விதமும் முற்றாக மாறிக்கொண்டு வந்துவிட்டன.

சமூக வலைதளத்தில் நீண்ட காலமாக இருக்கிறீர்கள்.. அங்கே உங்களைப் பற்றி எதிர்மறை விமர்சனமும் கிண்டலும் செய்பவர்களை எப்படி எடுத்துக் கொள்வீர்கள்?

சமூக வலைதளம் என்றாலே நன்மையும் உண்டு தீமையும் உண்டு என்றாகிவிட்டது. அங்கே திமிர் பிடித்த சிலரும் இருக்கவே செய்வார்கள். அங்கே நம்மை எதிர்மறையாக விமர்சனம் செய்பவர்களை நான் கண்டுகொள்வதே இல்லை. ஏனென்றால் அவர்களுக்கு அதைத் தவிர வேறு வேலை இல்லை. நல்ல வார்த்தைகளைச் சொல்லத் தெரியாது என்றால் அமைதியாக இருந்துவிட்டுப் போய்விடுங்கள். அடுத்தவர்களை திட்டுவதன் மூலம் உங்களுடைய நேரத்தைத்தான் இழக்கிறீர்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in