சமந்தாவின் கடினமான நாட்களை அறிந்து மிகவும் கஷ்டப்பட்டேன்!

ஜீ.வி.பிரகாஷ் படத்தின் நாயகி தேஜு அஸ்வினி பேட்டி
தேஜு அஸ்வினி
தேஜு அஸ்வினி

தொலைக்காட்சி வழியாக திரையுலகில் கதாநாயகியாக அடியெடுத்து வைப்பவர்களைப் பார்த்திருக்கிறோம். தேஜு அஸ்வினி யூடியூப் வழியாக நுழைந்திருக்கிறார். சக்சஸ் கொடுத்த ‘கல்யாண சமையல் சாதம்’ வலைத்தொடரில் கதாநாயகியாக அறிமுகமாகி யார் இந்தத் துறு துறு தேவதை என கூகுளில் தேடப்படும் தமிழ்ப் பெண்களில் ஒருவராக மாறியிருக்கிறார் தேஜு. அதற்குக் காரணம், ஜி.வி.பிரகாஷுடன் அவர் இணைந்து ஆடி, சமீபத்தில் இணையத்தில் வெளியாகி வைரலான ‘படாக் படாக்’ இசைக் காணொலி. காமதேனுவுக்காக தேஜு அஸ்வினியிடம் உரையாடியதிலிருந்து...

உங்களைப் பற்றி கொஞ்சம்..?

நான் சென்னைப் பெண். ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் எம்.ஏ. ஹுமன் ரிசோர்ஸ் படித்து முடித்துவிட்டு பி.வி.ஆர். குழுமத்தின் விற்பனைப் பிரிவில் முக்கிய பொறுப்பில் இணைந்து பணியாற்றி வந்தபோதுதான் வெப் சீரீஸில் நடிக்க வாய்ப்பு வந்தது. அப்பா சத்யநாராயணன் ஒரு இசைக் கலைஞர். தெலுங்குப் பட உலகில் மிகவும் பிரபலமான, மறைந்த இசையமைப்பாளர் கே.சக்கரவர்த்தி சாரிடம் பல படங்களுக்குப் பணிபுரிந்தவர்.

அடிப்படையில் நான் ஒரு டான்ஸர். அம்மா எனது குரு. அவரிடம் குச்சுப்புடி கற்றுக்கொண்டு நிகழ்ச்சிகள் கொடுத்து வந்தேன். கிளாசிக் நடனத்துடன் வெஸ்டர்ன் உட்பட பல பாணி நடனங்களையும் கற்றுக்கொண்டு, சென்னை அசோக் நகரில் சொந்தமாக ‘இண்டிபென்டன்ட் ஆர்டிஸ்ட்’ என்கிற ‘டான்ஸ் ஸ்டுடியோ’ நடத்தி வந்தேன். கோவிட் காரணமாகவும் முழு மூச்சாக நடிக்க வந்துவிட்டதாலும் நடனம் சொல்லிக்கொடுக்க நேரம் இல்லாமல் டான்ஸ் ஸ்டுடியோவை தற்காலிகமாக மூடிவிட்டேன். எனது எல்லா முயற்சிகளையும் ஊக்கப்படுத்துவது அம்மாவும் அப்பாவும்தான்.

ஒரேயொரு தொடர்... அதுவும் யூடியூபில்..! இவ்வளவு புகழ் கிடைக்கும் என்று நினைத்தீர்களா?

எதிர்பார்க்கவில்லை. ஆனால், அது இன்றைய தலைமுறைக்கு பிடித்த கண்டென்ட்டாக இருந்ததுதான் அதிர்ஷ்டம். ‘கல்யாண சமையல் சாதம்’ தொடரை எழுதி, இயக்கிய அன்புதாசனுக்கும் அதைத் தயாரித்த பிளாக் ஷிப் டீமுக்கும் ரொம்பவே கடன்பட்டிருக்கிறேன். அந்தத் தொடருக்குப் பிறகு பிரைவேட் ஆல்பங்களில் நடித்தேன். அவற்றில் ஹிட்டான பாடல்களில் ஒன்றுதான் ‘பாரிஸ் ஜெயராஜ்’ படத்தில் இடம்பெற்றது. ‘புளி மாங்கா புளி’ என்கிற அந்தப் பாடலில் சந்தானத்துடன் இணைந்து ஆடினேன். அதன்பிறகு கவினுடன் ஆடிய ‘அஸ்கு மாரோ’ மியூசிக் வீடியோவும் ஹிட்! இந்தப் பாடல்களுக்குப் பிறகே ‘என்ன சொல்லப் போகிறாய்’ படத்தில் ஹீரோயினான அறிமுகமானேன்.

நடனம் படித்தது எந்த வகையில் உதவுகிறது?

அதுதான் என்னை இந்த அளவுக்கு வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தது என்று நினைக்கிறேன். நடனம் கற்றுக்கொண்டதால் நடிப்பதும் எளிதாக இருக்கிறது.

‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் சமந்தாவின் தோழியாக வந்தீர்களே..?

ஆமாம்! அந்தப் படத்தின் டீம் எல்லோரும் என்னுடைய நண்பர்கள்தான். சமந்தாவுக்கு தோழியாக ஒரு பாப்புலர் முகம் வேண்டும் என்று என்னை அழைத்தார்கள். உடனே ஒப்புக்கொண்டேன். ஏனென்றால், என்னை இன்ஸ்பயர் பண்ணிய திறமைகளில் ஒருவர் சமந்தா. அவர் இந்த இடத்தை அடைந்தது முழுக்க முழுக்க அவருடைய கடின உழைப்பால்தான். அது மட்டுமல்ல... அவர் என்னைப் போலவே சென்னைப் பெண் என்பதோடு, கல்லூரியில் எனது சீனியரும்கூட!

சமந்தாவின் கடினமான நாட்களைப் பற்றி அறிந்தபோது மிகவும் கஷ்டமாக இருந்தது. அவர் பட்ட கஷ்டங்களுக்கெல்லாம் ‘யசோதா’ படத்துக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு மருந்தாக அமைந்துவிட்டது. சமந்தா போலவே நயன்தாரா மேடமும் எனக்கு இன்ஸ்பிரேஷன்தான்.

உங்களுக்கு அசத்தலான அறிமுகப் படம் அமைந்தது. ஆனால், அடுத்த படம் பற்றி எந்தத் தகவலும் இல்லாமல் இருக்கிறதே..?

‘என்ன சொல்லப் போகிறாய்’ படம் வெளியான பிறகு நிறைய கதைகள் வந்தபடியே இருக்கின்றன. ஆனால், அடுத்து நடிக்கும் படம் ஆடியன்ஸுக்கு எவ்வளவு பிடிக்கும், அதில் நான் என்னவாக இருக்கப்போகிறேன் என பொறுமையாகவும் புத்திசாலித்தனமாகவும் படங்களைத் தேர்வு செய்ய நினைக்கிறேன். அப்படித் தேர்வு செய்துள்ள எனது அடுத்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஹீரோ. நான் ஹீரோயின். லிங்குசாமி சாரின் அசோசியேட்டான கார்த்திக் தான் படத்தை இயக்குகிறார்.

அந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் முன்னரே ஜி.வி.பிரகாஷுடன் மியூசிக் வீடியோவில் நடித்துவிட்டீர்கள்... வெள்ளோட்டமா?

அப்படியும் வைத்துக்கொள்ளலாம். ஜீ.வி.பி. தேசிய விருது வாங்கிவிட்டார். அவருடன் நடிப்பதைப் பெரிய அங்கீகாரமாக நினைக்கிறேன்.

‘என்ன சொல்லப் போகிறாய்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தின் நாயகன் அஸ்வின் பேசிய பேச்சு பெரிய அளவில் சர்ச்சையானது. அஸ்வின் பேசியதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

அஸ்வின் ஒரு ஜென்டில் பர்சன். நாங்கள் அனைவருமே புதுமுகம் என்பதால், முதல் முறையாக பிரஸ்மீட்டில் பேச அழைத்தபோது நானும் பயந்துகொண்டேதான் பேசினேன். அஸ்வினும் புதியவர். அவர் ஒன்று சொல்ல வந்து அது வேறு விதமாக புரிந்துகொள்ளப்பட்டு, அவரை ‘ட்ரோல்’ செய்து வறுத்துவிட்டார்கள்.

புதியவர்கள் ஒரு வாய்ப்பைப் பெறுவதற்கு முன் எவ்வளவு உழைத்து, போராட்டங்களைச் சந்தித்து வந்திருக்கிறார்கள் என்பதை புரிந்துகொண்டாலே போதும், மற்றவர்களை நாம் அவ்வளவு எளிதாக கிண்டல் செய்யமாட்டோம் என்று நினைக்கிறேன். அஸ்வினும் அப்படிக் கஷ்டப்பட்டு மேலே வந்துகொண்டிருக்கும் ஒருவர்தான். அந்த மேடையில் அவர் கொஞ்சம் எக்ஸைட் ஆகிக்கூடப் பேசியிருக்கலாம். அதை இத்தனை சர்ச்சை ஆக்கியிருக்கத் தேவையில்லை என்பதுதான் எனது கருத்து.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in