அதைவிட பெரிய அதிர்ச்சியை ரெஜினா கொடுக்கலாம்!

‘லத்தி’ சுனைனா பேட்டி
சுனைனா
சுனைனா

அழகும் திறமையும் ஒருங்கே அமையப்பெற்ற நடிகர்களில் சுனைனாவுக்கு ரசிகர்கள் மத்தியில் தனியிடம் உண்டு. தமிழில் அறிமுகமாகி 17 ஆண்டுகளைக் கடந்துவிட்டாலும் இன்னும் கதாநாயகியாக நடித்துக்கொண்டிருக்கும் வெகுசிலரில் சுனைனா வெற்றிகரமாகத் தொடர்கிறார். தற்போது பெண் இயக்குநர்களின் தெரிவாகவும் மாறியிருக்கும் அவர், விஷால் ஜோடியாக நடித்துள்ள ‘லத்தி’ திரைப்படம் விரைவில் தியேட்டர்களுக்கு வரவிருக்கிறது. அதையொட்டி, காமதேனுவுக்காக அவருடன் பிரத்யேகமாக உரையாடியதிலிருந்து...

‘சில்லுக் கருப்பட்டி’ ஆந்தாலஜி படத்தில் அமுதினியாக வந்த சுனைனா கம்பீரமாக அனைவரது நினைவிலும் இருக்கிறார். ஹலிதா ஷமீம் போன்ற ஒரு இயக்குநரின் எழுத்தில் நடிக்கும்போதுதான் இந்த மாதிரி சுனைனாவைப் பார்க்க முடியுமா?

சிறந்த கதாபாத்திரங்கள் இயக்குநர்களின் சிந்தனையில் பிறப்பவை. எழுதிய பின்பு இந்தக் கேரக்டருக்கு சுனைனா சரியாக இருப்பார் என்று முடிவு செய்து, நம்மை நம்பிக் கொடுக்கும்போது அதை மிகப்பெரிய அங்கீகாரமாகப் பார்க்கிறேன். ‘சில்லுக் கருப்பட்டி’ அமுதினி கேரக்டரை ஹலிதா ஷமீம் எனக்குச் சொன்னபோது தயக்கத்துடன் அவரிடம் கேட்டேன். “எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஒரு குழந்தைக்குக் கூட தாயில்லை; ஆனால், மூன்று குழந்தைகளுக்கு அம்மாவாக நடிக்கச் சொல்கிறீர்களே... எனக்குப் பொருந்துமா?” என்று. அதற்கு அவர் சொன்னார். “ஏனென்றால் நீங்கள் சிறந்த நடிகர். உங்களால் முடியும்” அந்த வார்த்தைகள்தான் என்னை அமுதினியாக மாற்றின.

அதேபோல் ‘ஃபிங்கர் டிப்’ ஆந்தாலஜியில் அமுதினிக்கு நேர் மாறான ரேகாவைப் பார்த்தபோது கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. சோஷியல் மீடியா இன்ஃபுளுவென்சர் ஆக எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருக்கும் ரேகா மாதிரியான பெண்களை நிஜ வாழ்க்கையில் பார்த்திருக்கிறீர்களா?

ரேகா மாதிரி பெண்கள் மட்டுமில்ல... ஸ்மார்ட் போன் வைத்திருந்து, சோஷியல் மீடியாக்களைப் பயன்படுத்தும் எல்லார்கிட்டயுமே, “நம்மள மத்தவங்க கவனிக்க வேண்டும்” என்கிற சிக்கல் இருக்கு. அதையே போதையாக உணர்ந்து அதுதான் உலகம்ன்னு நினைக்கிற ரேகா மாதிரியான ஆட்களும் இருக்காங்க. அது தீவிரமாகும்போது மன நலம் பாதிக்கப்படுது. ஆனால், இப்போ நிலமை மாறிக்கொண்டு வருகிறது. சோஷியல் மீடியாவில் நிறைய நேரம் செலவு செய்வது, அங்கீகாரம் எதிர்பார்ப்பது, அது வழியாக பணம் பண்ணிடலாம் என நினைப்பது... இது எல்லாமே இப்போ தேய்மானத்தை நோக்கிப் போகிறது.

சோஷியல் மீடியாவால் பட்டதுபோதும் என்று எல்லோரும் அளவாக ஆஃப் மோடில் இருக்காங்க. இடைவேளை எடுத்துக்கிறாங்க. புதுசா வர்றவங்ககிட்ட எப்போதும் கொஞ்சம் தீவிரம் இருக்கும். அவங்களும் ஒரு கட்டத்தில் இது போதும் என்கிற முடிவுக்கு வந்துவிடுவார்கள்.

சோஷியல் மீடியாவில் போட்டோ ஷூட் படங்களைப் போட்டு லைக்குகளையும் ஃபாலோயர்களையும் சேர்க்க விரும்பும் சினிமா பிரபலங்கள்போல் நீங்கள் இல்லையே ஏன்?

என்னோட ஆரோக்கியத்துக்குத்தான் நான் முன்னுரிமை கொடுப்பேன். என்னுடைய ரசிகர்களுடன் சோஷியல் மீடியா வழியாக தொடர்பில் இருப்பது எனக்கு மிகவும் முக்கியம்தான். சில நேரம், சில விஷயங்களை உடனுக்குடன் அவர்களோடு பகிர்ந்துகொள்ள சோஷியல் மீடியா ரொம்பவே உதவியாக இருக்கிறது. சில விஷயங்களை அப்படிப் பகிர்வது இன்னும் உண்மைத்தன்மையுடன் இருக்கிறது. அதற்கு மட்டும் சோசியல் மீடியாவைப் பயன்படுத்துவது என்னைப் போன்ற நடிகர்களுக்கு மிகவும் முக்கியமானது. என் தோற்றங்களை காண திரைக்கு வரட்டும். அதற்கு சோஷியல் மீடியா ஒரு பிளாட்ஃபார்ம் கிடையாது.

ஓடிடி படைப்புகளுக்கு அதிகமாக உங்கள் நாட்களைக் கொடுப்பதால் உங்களால் பெரிய திரையில் நடிக்க முடியவில்லை என்று சொல்லலாமா?

நான் உணர்வுபூர்வமான ஒரு நடிகர். திரைக்கதை பிடிக்கவில்லை என்றால் நாசுக்காக தவிர்த்து விடுவேன். நான் திரைக்கதை என்று குறிப்பிடுவது ஏனென்றால், ஒரு கதையில் எனது கதாபாத்திரம் மட்டும் நன்றாக இருந்து பயனில்லை. எல்லா கதாபாத்திரங்களுமே சரியாக அமைக்கப்பட்டிருந்தால் தான் நான் ஏற்கும் கதாபாத்திரமும் பார்வையாளர்களின் மனதைத் தைக்கும்.

எனக்குள் நிறைய சக்தி இருக்கிறது. அதை நடிப்பாக இதுவரை நான் வெளிக்காட்டியிருப்பது கொஞ்சம்தான். நடிப்புக்கான எனது சக்தியை நான் சரியான கதாபாத்திரங்களுக்குச் செலவிட வேண்டும் என்று நினைக்கிறேன். வரும் எல்லாவற்றிலும் நடித்து புகழ் வெளிச்சத்திலேயே இருக்க வேண்டும் என்றோ, கிடைத்தவரை லாபம் என்று கருதியோ நான் இந்தத் துறைக்கு வரவில்லை.

நான் நிறையப் படங்களை பிடிக்காமல் மறுத்திருக்கிறேன். சினிமாவை நான் மிகவும் நேசிப்பதால்தான் இந்த முடிவு. மற்றபடி ஓடிடி - பெரிய திரை என்றெல்லாம் நான் பிரித்துப் பார்ப்பதில்லை. படப்பிடிப்பு முடிந்தபிறகுதான் இதை ஓடிடிக்கு கொடுக்கலாமா... அல்லது தியேட்டரில் முதலில் வெளியிடலாமே என்பதை தயாரிப்பாளர்கள் முடிவு செய்கிறார்கள். நாம் நடிப்பது எந்த பிளாட் ஃபார்மில் வரவேண்டும் என்பதை நடிகர் முடிவு செய்ய முடியாது.

‘சில்லுக் கருப்பட்டி’க்குப் பிறகு ‘ராஜா ராஜா சோரா’ என்கிற தெலுங்குப் படத்தில் நடித்தேன். அது மிகப்பெரிய ஹிட். இவை இரண்டுமே தியேட்டரில் ரிலீஸ் ஆன படங்கள். அதன்பிறகு வரிசையாக ஓடிடி படைப்புகள். இப்போது விஷாலுடன் ‘லத்தி’ ரிலீஸ் ஆகிறது. இப்போது 6 படைப்புகளில் நடித்துக் கொண்டிருக்கிறேன். அதில் ‘லத்தி’யைத் தொடர்ந்து ‘தொடுவானம்’ தியேட்டர்களில் ரிலீஸ் ஆக இருக்கிறது.

‘ரெஜினா’ படத்தின் முதல் தோற்றத்தைப் பார்க்கும்போது அதில் வில்லியாக நடித்திருப்பீர்கள் போல் தெரிகிறதே..?

இல்லை. ஆனால், அதைவிட பெரிய அதிர்ச்சியை ரெஜினா கொடுக்கலாம். எனது சக்தியை அதிகம் கோரும் கதாபாத்திரம் அது. இதுபோன்ற சவால்கள் சக்தியுள்ள ஒரு நடிகருக்கு அவசியமானவை.

‘வம்சம்’ படத்தின் கிராமத்து சுனைனாவை ரசிகர்களுக்கு ரொம்பவே பிடிக்கும். அந்தப் படத்துக்குப் பிறகு கிராமத்துக் கதையோ... கதாபாத்திரமோ வேண்டாம் என முடிவுசெய்துவிட்டீர்களா?

இப்போதும்கூட கிராமத்துக் கதைகள் கேட்கிறேன். கதை சொல்ல வந்த பலரும் “இந்தக் கேரக்டர் அப்படியே ‘வம்சம்’ படத்தோட மலர்க்கொடி மாதிரியே இருக்கும்” என்பார்கள். மீண்டும் ஒரு மலர்க்கொடி எதற்கு என்பதுதான் என் கேள்வி. நிச்சயமாக கிராமத்துக் கதைகளில் நடிப்பேன். அது கிராமம் என்றாலும் நகரம் என்றாலும் சிறு நகரம் என்றாலும் நிஜ வாழ்க்கையில் சந்திப்பதுபோன்ற கேரக்டர்கள் என்றால் நான் ரெடி.

தமிழ் சினிமாவில் உங்களுக்கு நெருக்கமான நண்பர்கள் என்று சமுத்திரகனி, விஷால் இரண்டு பேரையும் சொல்லலமா?

இல்லை மறுக்கிறேன். சினிமாவில் நான் பணியாற்றிய இயக்குநர்கள், நடிகர்கள் என எல்லோருமே எனது நலன் விரும்பிகள்தான். நான் யாரையும் அப்படிப் பிரித்துப் பார்ப்பதில்லை.

‘லத்தி’ படத்தில் என்ன மாதிரியான கதாபாத்திரம் ஏற்றுள்ளீர்கள்?

ஒரு போலீஸ் கான்ஸ்டபிளின் மனைவியாக நடித்திருக்கிறேன். ஆனால், இது வழக்கமான ஒரு போலீஸ்காரரின் மனைவி போன்ற ரோல் இல்லை. மிகவும் வெள்ளந்தியான பெண் அவள். அவனைப் பேசவே விடமாட்டாள். இவளே பேசிக்கொண்டிருப்பாள். வெளியே அவன் போலீஸாக இருக்கலாம். ஆனால், இவளது வெள்ளந்தித் தனத்தின் முன்னால் அவன் அப்படியே பனிக்கட்டிபோல் உருகிக்கிடப்பான். அப்படிப்பட்ட ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் தன்னுடைய மகனை மீட்பதற்காக சிந்தும் ரத்தம்தான் ‘லத்தி’ படம். முழுவதும் மலையாள சினிமாவிலிருந்து வந்துள்ள டீம் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறது.

15 வருடம் கழித்து மறுபடியும் நகுல் உடன் ‘எரியும் கண்ணாடி’ படத்தில் நடித்தீர்கள். என்ன ஆனது அந்தப் படம்?

டீசர் எல்லாம் படம் பிடித்தார்கள். அதன்பிறகு கரோனா வந்தது. பின்னர் அந்தப் படக் குழுவிடமிருந்து எந்த அப்டேட்டும் இல்லை. சில பட முயற்சிகள் அப்படித்தான்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in