கே.ஜி.எஃப் 2 வெளியானதும் அடுத்த உயரத்தைத் தொடுவேன்!

‘கோப்ரா’ ஸ்ரீநிதி ஷெட்டி பேட்டி
ஸ்ரீநிதி ஷெட்டி
ஸ்ரீநிதி ஷெட்டி

’கே.ஜி.எஃப்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான ஸ்ரீநிதி ஷெட்டி, ஒரு சூப்பர் மாடல். சர்வதேச அளவில் நடத்தப்படும் ‘மிஸ் சூப்ராநேஷனல்’ அழகிப் போட்டியில் 2016-ல் இந்தியா சார்பில் பங்குபெற்றவர். அதற்காக இந்தியாவில் நடத்தப்பட்ட ‘மிஸ் திவ்யா’ போட்டியில் பட்டம் வென்றவர். தற்போது ‘கே.ஜி.எஃப் 2’ திரைப்படம் வெளியாகவிருக்கும் நிலையில் காமதேனுவுக்காக அவர் அளித்த பிரத்யேகப் பேட்டியிலிருந்து…

’கே.ஜி.எஃப்’ முதல் பாகத்தில் சில காட்சிகளில் மட்டுமே வந்தீர்கள். இப்போது விக்ரமுடன் ’கோப்ரா’ தவிர வேறு பட வாய்ப்புகள் வரவில்லையா?

என் இடத்தில் வேறொரு பெண் இந்தக் கேள்வியை எதிர்கொண்டிருந்தால், மனம் அழுத்தம் அவரைத் தாக்கலாம். ஆனால், நான் கூலான பெண். மேலும், ‘கே.ஜி.எஃப்’ எனக்குக் கொடுத்திருக்கும் நம்பிக்கையும், புகழும் மிகப்பெரியது! நீங்கள் மட்டுமல்ல, உறவினர்களும் நண்பர்களும்கூட என்னை இப்படித்தான் டென்ஷன் ஆக்கப் பார்க்கிறார்கள். “வயது ஆகிக்கொண்டே போகிறது. 6 வருடத்தில் ரெண்டே படம்தான் செய்திருக்கிறாய்.. என்னதான் ஐடியா வைத்திருக்கிறாய்?” என்று வீட்டில் கேட்டார்கள்.

என்னைச் சார்ந்தவர்கள் நான் இன்னும் அதிக படங்களில் நடிக்க வேண்டும் என்று நினைப்பது தவறில்லை. 2016-ல் என்னுடன் சினிமா பயணத்தை தொடங்கிய பலர் 10 படங்களைத் தாண்டிவிட்டார்கள். அதையெல்லாம் பார்த்து எனக்கும் கொஞ்சம் கவலை தாக்கியது உண்மைதான். தவிர, கரோனா பெருந்தொற்றும் இரண்டு வருடங்களை விழுங்கிவிட்டது இல்லையா? ‘கே.ஜி.எஃப்’ முதல் பாகம் வெளியானதும் எனக்கு சில வாய்ப்புகள் வந்தன. ஆனால், அவை ‘டைப் காஸ்ட்’ ஆக இருக்குமோ என்ற சந்தேகத்தால் தவிர்த்தேன். என்ன ஆனாலும் பரவாயில்லை; ‘கே.ஜி.எஃப் 2’ வந்த பிறகே புதிய படங்களை ஒப்புக்கொள்வது என்று தீர்மானமாக இருந்தேன். ‘கே.ஜி.எஃப் 2’ வெளியானதும் எனது நிலைமை அடுத்த உயரத்துக்குப் போகும்.

அப்படியானால் ‘கோப்ரா’ படத்தை மட்டும் ஒப்புக்கொண்டு நடித்தது ஏன்?

விக்ரமும், இயக்குநர் அஜய் ஞானமுத்துவும்தான் காரணம். பள்ளியில் படிக்கும்போதிருந்தே விக்ரம் சாரின் படங்களைப் பார்த்து வருபவள் நான். அவருக்கு இணை என்றபோது கதைகூட கேட்கவில்லை. தவிர அஜய் ஞானமுத்து அவர் இயக்கிய இரண்டு படங்களையும் கொடுத்துப் பார்க்கச் சொன்னார். ஒரேநாளில் பார்த்தேன். கேரக்டரைசேஷன், ஆக்‌ஷன் இரண்டிலும் அவர் திறமைமிக்க இயக்குநர் என்பதை உணர்ந்து கொண்டேன்.

’கோப்ரா’வில் என்னை இன்னும் அழகாக, ஹோம்லியாகக் காட்டியிருக்கிறார். அதன் வெளியீட்டுக்காகவும் காத்திருக்கிறேன். அந்தப் படத்தையும் ஒரு ‘பான் இந்திய’ படமாக வெளியிடலாம். அவ்வளவு பிரம்மாண்டம். விக்ரம் சாரின் நடிப்பும் அவருடைய ‘கெட் அப்’களும் மிரட்டும். ஏ.ஆர்.ரஹ்மான் சாரின் இசையில் இந்த மிகச்சிறியவள் இவ்வளவு சீக்கிரம் நடிப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை. இவை எல்லாவற்றுக்காகவும் இயக்குநர் அஜய் ஞானமுத்துவுக்கும், தயாரிப்பாளர் லலித் குமார் சாருக்கும் என் நன்றி.

யாஷ், விக்ரம் இருவருடனும் நடித்த அனுபவம் பற்றி கொஞ்சம் சொல்லலாமா?

அது 2017-ம் வருடம். நானும் யாஷும் இணைந்து நடித்த காட்சிகளை இயக்குநர் பிரசாந்த் நீல் படமாக்கினார். அப்போது நான் மிகவும் பதற்றமாக இருந்தேன். ஏனென்றால் நான் தியேட்டரில் யாஷ் நடித்த படங்களைத் தோழிகளுடன் பார்த்து மகிழ்ந்தவள். அவருடன் நடிக்கிறேன் என்றபோது பிரமிப்பும், பயமும் என்னைக் கவ்விக்கொண்டன. ஆனால், யாஷ் மிகவும் நிதானமாகவும், கூலாகவும் வெகு இயல்பாகவும் நடித்தார். அதைப் பார்த்து எனக்கு ஆச்சரியமாகவும் கொஞ்சம் பொறாமையாக வும் இருந்தது.

நான் தடுமாறும்போதெல்லாம் எனக்கு டிப்ஸ் கொடுப்பார். நான் முழு வீச்சில் தயாராகும் வரை அவர் பொறுமையாகக் காத்திருப்பார். எனது அறிமுகப் படத்திலேயே அவருக்கு ஜோடியாக நடித்ததையும், தமிழில் விக்ரம் சாருக்கு ஜோடியாக நடித்ததையும் எனக்குக் கிடைத்த அதிர்ஷ்டமாக உணர்கிறேன். விக்ரம் சார் இன்னும் கூலான மனிதர். என்னை ஒரு செல்லக் குழந்தைபோல் நடத்தினார். அதற்கெல்லாம் பெரிய மனது வேண்டும்.

‘கே.ஜி.எஃப் 2’-ல் என்ன எதிர்பார்க்கலாம்?

எனக்கும் இந்தப் படத்தில் நடித்தவர்களுக்கும் மட்டுமல்ல... கன்னடத் திரையுலகத்துக்கே முகமாக மாறியிருக்கிறது ‘கே.ஜி.எஃப்’. ’ராக்கி’ என்கிற ஒரு நாயகன் எப்படி உருவானான் என்பதில் ஒரு தாயின் பங்கு எவ்வளவு இருக்கிறது என்பதை இரண்டாம் பாகத்தில் இன்னும் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார் பிரசாந்த் நீல் சார். திரையரங்குகளில் கொண்டாட்டத்துடன் ஏப்ரல் 14-ல் நானும் ரசிகர்களுடன் படத்தைக் காணும் எதிர்பார்ப்பில் இருக்கிறேன்.

‘மண் வளம் காப்போம்’ இயக்கத்துக்காக பிரச்சாரக் காணொலியெல்லாம் வெளியிட்டிருந்தீர்களே..?

ஆமாம்..! விவசாயம் செய்யப்படும் மண், தன்னுடைய வளத்தையும் அதன் இயல்பான தன்மையையும் இழந்துகொண்டே வருகிறது. நம் நாட்டில் மட்டுமல்ல... உலகின் பெரும்பாலான நாடுகள் இந்தப் பிரச்சினையைச் சந்திக்கின்றன. குளோபல் வார்மிங் உருவாக்கும் திடீர் வெள்ளம், மண் சரிவு என பல பிரச்சினைகள் மண்ணின் வளத்தை இன்னும் மோசமாக மாற்றிக்கொண்டு வருகின்றன. மிக முக்கியமான இந்தப் பிரச்சினையை ‘சேவ் சாயில்’ என்கிற இயக்கமாக முன்னெடுத்திருக்கிறார் சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்கள். இதற்காக அவர் மோட்டார் சைக்கிளில் நீண்ட நெடிய உலகப் பயணமும் தொடங்கியிருக்கிறார். சத்குருவுக்கு மட்டும்தானா? நமக்கு பொறுப்பு வேண்டாமா? அதனால்தான் ‘சேவ் சாயில்’ இயக்கத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக காணொலி வெளியிட்டேன்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in