பாஸ்வேர்டு மறந்துபோச்சா செல்லம்..? - ஸ்ரீதிவ்யா ரிட்டர்ன்ஸ்

ஸ்ரீதிவ்யா
ஸ்ரீதிவ்யா

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் சிவகார்த்திகேயனின் ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஸ்ரீதிவ்யா. ஹோம்லி ப்யூட்டி, நடிப்பில் சுட்டி என ரசிகர்களின் மனதை வென்று, ஓவியாவுக்கு முன்பே ஸ்ரீதிவ்யா ஆர்மி தொடங்கக் காரணமாக இருந்தார்.

சிவகார்த்திகேயனுடன் மீண்டும் ‘காக்கிச் சட்டை’, விஷாலுடன் ‘மருது’, விக்ரம் பிரபுவுடன் ‘வெள்ளக்கார துரை’ என அரை டஜன் படங்களில் நடித்தார். இவரது இந்த வேகத்தைப் பார்த்துவிட்டு ஹீரோயின் ரேஸில் நயன்தாராவை முந்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென இடைவெளி எடுத்தார். தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டா பக்கத்தையும் ஸ்லீப்பிங் மோடுக்கு கொண்டுபோனார்.

துவண்டு போனார்கள் அவரது ரசிகர்கள். அவர்களை ஆறுதல் செய்வதுபோல், ஜீவா ஜோடியாக ‘சங்கிலி புங்கிலி கதவைத் திற’ படத்தில் திடீரெனத் தோன்றிய ஸ்ரீதிவ்யா, மீண்டும் மிஸ்ஸிங். இந்நிலையிதான் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக மீண்டும் ‘ரெய்டு’ படத்தில் நடித்து முடித்து, அவருடைய ரசிகர்களின் மன வாட்டத்தைப் போக்கியிருக்கிறார். என்னதான் ஆச்சு ஸ்ரீதிவ்யாவுக்கு..? அவரிடமே பேசினோம்.

ஸ்ரீதிவ்யா
ஸ்ரீதிவ்யா

உண்மையில் உங்களுக்குத் தமிழ் பட வாய்ப்புகள் வரவில்லையா? அல்லது கோலிவுட் உங்களைப் புறக்கணிக்கிறதா?

நன்றாக கவனித்தீர்கள் என்றால் 2018 முதல் 2021 வரை 4 வருடங்கள் மட்டும் தான் நான் நடித்து தமிழ் படம் எதுவும் வரவில்லை. கோவிட் லாக்டவுனை மறந்து விட்டீர்கள். அப்போது பெரிய படங்கள் ஓடிடியில் கூட ரிலீஸ் ஆகவில்லையே... இத்தனைக்கும் 2020-ல் நான் 2 தமிழ் படங்களில் நடிக்கவே செய்தேன்.

ஆடியன்ஸ் மனதில் நிற்பதுபோல் ஹீரோயின் கேரக்டர்கள் எதிர்பார்க்கிறேன். நிறையக் கதைகள் வந்தன. ஆனால், அவை எதிலும் மனம் செல்லவில்லை. முடிவு என்னுடையதாகவே இருந்தது. அப்படியொரு முடிவில் உறுதியாக இருந்ததால்தான் இப்போது 3 தமிழ் படங்களில் மீண்டும் கமிட் ஆகி நடித்துக்கொண்டிருக்கிறேன்.

ஸ்ரீதிவ்யா
ஸ்ரீதிவ்யா

இந்த ‘ரெய்டு’ படத்தை ‘மருது’ பட இயக்குநர் முத்தையா சாருக்காக ஒப்புக்கொண்டேன். இந்தப் படத்தின் இயக்குநர் கார்த்திக் அவரது அசிஸ்டென்ட். ஏற்கெனவே கன்னடத்தில் வெற்றிபெற்ற கதை. “தமிழுக்கு ஏற்ப எனது அசிஸ்டென்ட் நன்றாக மாற்றியிருக்கிறார், எனக்காக நடித்துக்கொடுங்கள்” என்று முத்தையா சார் கேட்டார். அவர் சொல்லும் போது மறுக்க முடியவில்லை. தவிர, விக்ரம் பிரபு சாருடன் மீண்டும் நடிப்பதிலும் எனக்கு விருப்பம் இருந்தது.

ஒரு ஹீரோவுடன் இரண்டு படங்கள் என்று வேண்டுதல் ஏதும் வைத்திருக்கிறீர்களா?

அப்படியெல்லாம் எதுவுமில்லை. சிவகார்த்திகேயன் சாருடன் 3 படங்கள் செய்திருக்கிறேன். அவற்றில் ’ரெமோ’வில் கெஸ்ட் அப்பியரன்ஸில் வந்தேன். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘காக்கிச் சட்டை’ இரண்டுமே பிளாக்பஸ்டர் வெற்றி. ‘ரெமோ’ ஹாட் ரிக் ஹிட்.

சிவகார்த்திகேயனுடன் நடிக்கும்போது அவர் செய்யும் வேடிக்கைகளால் மனம் லேசாகிவிடும். நான் அவருடன் சேர்ந்து நடிக்கும் காட்சி என்றாலும் சரி, மற்றவர்களுடன் நடிக்கும் காட்சி என்றாலும் சரி, ஒவ்வொரு ஷாட்டிலும் “இப்படிச் செய்யலாம்... அப்படிச் செய்யலாம்...” என்று நிறைய டிஸ்கஸ் செய்வார். அதை சரியாக எக்ஸிகியூட் செய்வார். நன்றாக வரும்வரை திருப்தி அடையமாட்டார். அந்த டெடிக்கேஷன் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

ஸ்ரீதிவ்யா
ஸ்ரீதிவ்யா

அவரும் சூரி அண்ணாவும் சேர்ந்துவிட்டால் அவ்வளவுதான் செட் செம்ம ஃபன்னாக மாறிவிடும். கார்த்தி சாரும் ரொம்பவே ஃபன். எப்போதும் ஏதாவது சொல்லி கிண்டல் செய்துகொண்டே இருப்பார். நான் அதிகம் பேசமாட்டேன். ஆனால், யாராவது ஃபன் செய்தால் என்னால் சிரிக்காமல் இருக்க முடியாது.

விக்ரம் பிரபு எப்படி?

‘வெள்ளக்கார துரை’ படத்தில் நடிக்கும்போது விக்ரம் பிரபு சார் ரொம்ப ரிசர்வ்டு டைப். ரொம்ப பேசமாட்டார். ஆனால், இப்போது ‘ரெய்டு’ படத்தில் நடிக்கும்போது நன்றாகப் பேசினார். சினிமா பற்றி பேசுவது அவருக்குப் பிடிக்கும். நான் அவரது தாத்தா நடித்த ‘முதல் மரியாதை’ படத்தை 2 முறை பார்த்தேன் என்று சொன்னேன். அவருக்கு ஆச்சரியமாகிவிட்டது.

‘முதல் மரியாதை’யை எப்போது பார்த்தீர்கள்?

ஸ்கூலில் படிக்கும் போதிலிருந்து எங்கள் வீட்டில் தமிழ் சேனல்கள் சப்ஸ்கிரைப் செய்து வைத்திருந்தார் அம்மா. நான் தமிழ் பேசக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதால் நல்ல கிராமத்துப் படம் ஓடினால் லீவு நாட்களில் என்னையும் அக்காவையும் உட்காரவைத்துப் பார்க்கச் சொல்வார்.

ஸ்ரீதிவ்யா
ஸ்ரீதிவ்யா

அப்படித்தான் ‘முதல் மரியாதை’ பார்த்தேன். 50 கிராமத்துப் படங்களாவது பார்த்திருப்பேன். அந்தப் படங்களைப் பார்த்து தமிழ் நன்றாக புரியத் தொடங்கியது. ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் நடித்தபோது தமிழ் பேசி நடிக்க கொஞ்சம் சிரமமாக இருந்தது. ஆனால் ‘காக்கிச் சட்டை’ நடித்து முடிக்கும்போது நன்றாகவே தமிழ்பேசத் தொடங்கிவிட்டேன்.

கிராமத்துப் பின்னணியில் அமைந்த தமிழ்ப் படங்களைப் பார்த்தது எனக்கு நன்றாகப் பயன்பட்டது. விஷால் நடித்த ‘மருது’ படத்தில் ராஜபாளையத்துப் பெண்ணாக அந்த ஏரியாவின் பேச்சு வழக்கை இயக்குநர் முத்தையா சார் சொல்லிக் கொடுத்தார். படப்பிடிப்பிலேயே அந்தப் பகுதியின் ஸ்லாங்கில் பேசித்தான் நடித்தேன்.

முதலில் நடிக்க வந்தது உங்கள் அக்காதானா?

அக்கா ஸ்ரீரம்யாவுக்கு முன்பு நான் குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்துவிட்டேன். ஆனால், ஹீரோயினாக அக்காதான் முதலில் அறிமுகமானார்.

ஸ்ரீதிவ்யா
ஸ்ரீதிவ்யா

'அவன் இவன்' படத்துக்காக விஷாலுக்கு தேசிய விருது கிடைக்கவில்லை என அப்போது வருந்தினீர்கள் இல்லையா?

அதை நீங்கள் இன்னும் மறக்கவில்லையா? மாறுகண் உள்ள கேரக்டர் எனக்குத் தெரிந்து அந்தப் படத்தில் அவர் நடித்ததுதான். அவர் நடனமாடி நவரசம் காட்டும் காட்சியில் அருமையாக மாறுகண்ணுடன் நடிப்பில் அசத்தியிருப்பார்.

’பெங்களூரு டேய்ஸ்' படத்தின் தமிழ் ரீமேக் சரியாகப் போகவில்லை என்கிற வருத்தம் உங்களுக்கு உண்டா?

இல்லாமல் இருக்குமா? அந்தப் படத்தில் நடித்த நாங்கள் அத்தனை பேரும் எங்களுடைய 100 சதவீத உழைப்பைக் கொடுத்தோம். கதையும் கேரக்டர்களும் நன்றாக இருந்தாலும் ஒரு படம் ஆடியன்ஸுக்குப் பிடிக்க வேண்டும் என்கிற எந்த அவசியமும் இல்லை. இப்போது அந்தப் படத்தை ஓடிடியில் பார்க்கும் ரசிகர்கள் எனது ட்விட்டரில் வந்து போஸ்டர் போட்டு பாராட்டுகிறார்கள். மகிழ்ச்சியாக இருக்கிறது.

ட்விட்டரில் ஆக்டீவாக இருந்தவர் நீங்கள். 4 வருடம் உங்கள் அக்கவுண்டில் எந்தச் சலனமும் இல்லை. திடீரென்று வந்து உங்களது சில படங்களைப் போட்டதும் உங்கள் ரசிகர்கள் ஓடோடி வந்து விட்டார்கள். சோஷியல் மீடியாவில் உங்களுக்கு ஆர்வமில்லையா?

அப்படியில்லை. ஏனோ அப்போது ஆர்வம் குறைந்திருந்தது. ஒரு ரசிகர் ”பாஸ்வேர்டு மறந்து போச்சா செல்லம்?” என்று கேட்டிருந்தார். ஸ்மைலியுடன் அவருக்கு “ஆமாம்!” என்று ரிப்ளை கொடுத்தேன். இப்போது எனது ட்விட்டரை கவனித்திருப்பீர்கள். சுற்றுச் சூழல் பிரச்சினை, உயிர்களை அச்சுறுத்தல் ஆகியவற்றுக்கு எதிராக எனது ஒவ்வொரு போஸ்ட்டும், ரீடுவிட்டும் இருக்கும். நாம் பிரபலமாக இருப்பதால் நிறையப் பேருக்கு இந்தச் செய்திகளை கொண்டு செல்ல முடிகிறது.

ஸ்ரீதிவ்யா
ஸ்ரீதிவ்யா

2015-ல் சென்னை வெள்ள நிவாரண உதவி, ராஜபாளையம் மக்களுக்கு உதவி என்று அசத்தினீர்களே..?

அதற்கு அம்மாவின் மனசுதான் காரணம். நான் கொடுக்கலாம் என்றாலும் என் குடும்பம் அதற்கு ஒத்துழைக்க வேண்டும். சென்னை பெரு வெள்ளம் சமயத்தில் நான் ராஜபாளையத்தில் 'மருது' படப்பிடிப்பில் இருந்தேன். அப்போது, இந்த உலகமே அழிந்து போனால் எப்படியிருக்குமோ அந்த மனநிலையில்தான் இருந்தேன். சென்னை என்ன ஆனது, என்ன நடக்கிறது என்று என் மனது நினைத்துக்கொண்டே இருந்தது. ராஜபாளையத்தில் ஒரு கிராமத்தில் டாய்லெட் இல்லாமல் கஷ்டப்பட்டார்கள். விஷால், “உதவலாம்” என்றார் உடனே பண்ணினேன்.

ஸ்ரீதிவ்யா
ஸ்ரீதிவ்யா

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பற்றிய செய்திகளைப் படிக்கும்போதெல்லாம் என்ன நினைப்பீர்கள்?

பெண்களுக்கு எல்லாச் சூழ்நிலையிலும் குடும்பமும் நண்பர்களும்தான் பாதுகாப்பு கொடுப்பார்கள். பெண்கள் இரவு நேரத்தில் தனியாகப் போகக் கூடாது. அதேசமயம் நமக்கு அதிக சுதந்திரம் இருக்கிறது என்றோ, அல்லது நமக்கு சுதந்திரமே இல்லை என்றோ மனதில் குழப்பமான எண்ணத்தில் இருக்கத் தேவையில்லை. நீங்கள் நீங்களாக இருங்கள். அதற்காக ஆண்களை வெறுக்கத் தேவையில்லை. பெண்கள் பிரச்சினைகளை சந்திக்கும்போது அவர்களை விட அவர்களுடைய குடும்பத்துக்குத்தான் வலி அதிகம். அந்த வலியை அவர்களுக்குக் கொடுத்துவிடாதீர்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in