கதாநாயகிகளுக்கு கிளாமர் என்பதும் ஓர் அடையாளம் தான்!

’அர்த்தம்’ நாயகி ஷ்ரத்தா தாஸ் பேட்டி
 ஷ்ரத்தா தாஸ்
ஷ்ரத்தா தாஸ்

மும்பையில் பிறந்து வளர்ந்த பெங்காலிப் பெண் ஷ்ரத்தா தாஸ். தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி, தனது கிளாமர் நடிப்புக்காகவே இந்தி, கன்னடம், மலையாளம், வங்காளம் என பல இந்திய மொழிகளில் பிஸியாக இருப்பவர். ‘அர்த்தம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கும் வந்திருக்கிறார். இதன் டிரைலர் வெளியீட்டு விழாவுக்கு படு கிளாமரான ஆடையில் வந்திருந்தவரை காட்சி ஊடகத்தினர் மொய்த்துக்கொண்டு படம்பிடிக்க... அரைமணி நேர தள்ளு முள்ளுகளுக்குப் பிறகே நிகழ்ச்சி தொடங்கியது. அந்த நிகழ்ச்சிக்கு முன்பே நமக்கு ஷ்ரத்தா அளித்த பிரத்யேகப் பேட்டி இது.

மாதுபான விளம்பரத்தில் நடித்ததன் மூலம் சினிமாவுக்கு வந்தவர் நீங்கள் என்று உங்களைக் குறிப்பிட்டதை நீங்கள் எப்படி எடுத்துக்கொண்டீர்கள்?

அதில் உண்மை இல்லை. மதுபான விளம்பரத்தில் நடிக்கும் முன்பே நான் நாற்பதுக்கும் அதிகமான விளம்பரங்களில் நடித்துவிட்டேன். கல்லூரியில் படிக்கும்போதே தியேட்டர் ஆர்டிஸ்ட் ஆகவேண்டும் என்பது எனது லட்சியமாக இருந்தது. ஆனால், என் உடலமைப்பு ஒரு சூப்பர் மாடல் என்கிற அளவுக்கு உயர்த்தியது.

எனது அப்பா ஒரு தொழிலதிபர். பணத்துக்கோ வசதிக்கோ எந்தக் குறையும் இல்லை. எனக்கென்று ஒரு அடையாளம் வேண்டுமல்லவா? அதற்காக பியூஷ் மிஷ்ரா, சித்ரஞ்சன், சலீம் ஷா போன்ற புகழ்பெற்ற நாடக இயக்குநர்கள் நடத்திய பயிற்சிப் பட்டறைகளில் கலந்து கொண்டு தியேட்டர் ஆக்டிங்கை கற்றுக்கொண்டு சினிமாவில் நடிக்கவந்தேன். நடிப்புப் பயிற்சி எடுக்கும் முன்பே பிரபலமான மாடலாகிவிட்டேன்.

தெலுங்கில் பத்து ஆண்டுகளைக் கடந்து நடித்து வருகிறீர்கள். கதாநாயகிகளுக்கு இடையில் ‘நம்பர் 1’ ரேஸ் இருக்கும் அங்கே உங்களால் தொடர்ந்து எப்படி சர்வைவ் ஆக முடிகிறது?

எனக்கென்று அங்கே நிரந்தமான ரசிகர்களை சம்பாதித்துக் கொண்டேன். 2010-ல் பி.வாசு சார் இயக்கத்தில் தெலுங்கில் ‘நாகவல்லி’யாக ரீமேக் ஆனது ‘சந்திரமுகி’ படம். அதில் கீதா என்கிற முக்கியமான கேரக்டரில் நடித்தேன். அப்போது தொடங்கி இப்போது ‘அர்த்தம்’ வரை 14 வருடங்களில் நான் நடித்துள்ள 60 படங்களில் 35 படங்கள் தெலுங்குப் படங்கள்தான். அங்கே நடிப்பு, கிளாமர் இரண்டையுமே ரசிப்பார்கள். ஆபாசமாக நடித்தால் வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள். தெலுங்கு சினிமாவில் என்றில்லை; இந்தியாவில் எந்த மொழி சினிமாவிலும் இதுதான் யதார்த்தம்.

‘அர்த்தம்’ படத்தில் நீங்கள்தான் கதாநாயகியா? உங்கள் கேரக்டர் பற்றிச் சொல்லுங்கள்.

ராதிகா சீனிவாஸ் தயாரிப்பில் மணிகாந்த் இயக்கியுள்ள படம்தான் ‘அர்த்தம்’. சென்னையின் கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள ஒரு பங்களா வீட்டுக்குள் மாட்டிக்கொள்ளும் ஒருவருக்கு மனநல சிகிச்சை அளிப்பதற்காகச் செல்கிறேன். எதிர்பாராத விதமாக மாலை 6 மணி ஆனதும் அந்த வீட்டின் கதவுகள் பூட்டிக்கொள்கின்றன. அங்கிருந்து வெளியேற முடியவில்லை. என்னைத் தேடி நாயகன் மாஸ்டர் மகேந்திரன் வருகிறார். அவரால் அந்த வீட்டின் அமானுஷ்யத்திலிருந்து என்னைக் காப்பாற்ற முடிந்ததா இல்லையா என்பதுதான் கதை.

இளங்கலையில் சைக்காலஜி படித்தவள் நான். 2010-ல் நான் நடித்த ‘லாகூர்’ என்கிற இந்திப் படத்திலும் மனநல சிகிச்சையாளராக நடித்தேன். ஆனால், ‘அர்த்தம்’ படத்தில் வேறொரு சூழலில் நடித்தது சவாலாக இருந்தது. இந்தப் படத்தில் நடிகர் நந்தாவின் காதலியாக வருகிறேன். மாஸ்டர் மகேந்திரனின் நடிப்பைப் பார்த்து வியந்துபோனேன். அவ்வளவு திறமையான நடிகரை தமிழ் ரசிகர்கள் இன்னும் சரிவர அங்கீகரிக்கவில்லை என்று நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது.

மனநல சிகிச்சையாளர் என்றாலும் இதிலும் கிளாமர் காட்டி நடித்திருக்கிறீர்கள் என்பது படத்தின் ட்ரைலர் மூலம் தெரிகிறதே..?

மீண்டும் சொல்கிறேன். கதாநாயகியாக நடிப்பவர்களுக்கு கிளாமர் என்பதும் ஓர் அடையாளம்தான். அதை அளவாக வெளிப்படுத்தினால் தவறில்லை. அதேபோல் எல்லோராலும் கிளாமராக நடித்துவிட முடியாது. அதற்கென்று ஒரு ஈர்ப்பான தோற்றமும் அளவான உடலமைப்பும் தேவை. ‘அர்த்தம்’ படம் தெலுங்கு, தமிழ் ஆகிய இரண்டு மொழிகளில் தயாராகி இருப்பதால், தெலுங்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்ய வேண்டும் என்பதற்காகவும் அளவான கிளாமரில் இந்தக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.

உங்கள் தாய்மொழியான பெங்காலி சினிமாவில் வாய்ப்புகள் அமைந்ததா?

இதுவரை நான்கு பெங்காலி படங்களில் நடித்திருக்கிறேன். நான்குமே ஹிட். தெலுங்கு, தமிழ், இந்தியில் என்னமாதிரியான போக்கு இருக்கிறதோ அதுதான் அங்கேயும். நீங்கள் வேண்டுமானால் பொறுத்திருந்து பாருங்கள்... இன்னும் சில வருடங்களில் பான் இந்தியா மார்க்கெட்டில் வங்காள மொழியும் சேர்ந்துவிடும்.

படங்கள்: தீரன்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in