அப்படியொரு கதை கிடைச்சா கண்டிப்பா மிஸ்பண்ண மாட்டேன்!

‘பேட்ட காளி’ ஷீலா ராஜ்குமார் பேட்டி
ஷீலா ராஜ்குமார்
ஷீலா ராஜ்குமார்

‘டு லெட்’, ‘திரெளபதி’, ‘மண்டேலா’ படங்களின் மூலம் கவனிக்கப்பட்ட நடிகை ஷீலா ராஜ்குமார், இப்போது சினிமா, வெப் சீரிஸ் என பிஸியாக இருக்கிறார். தமிழ், மலையாளம் என இரு மொழிகளிலும் நடித்து வரும் அவர், அடுத்து தெலுங்கு சினிமாவுக்குள்ளும் தனது எல்லையை விரிவுபடுத்துகிறார். இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகும் ‘பேட்ட காளி’ வெப் சீரிஸ் படப்பிடிப்புக்கு தயாராகிக் கொண்டிருந்த அவரிடம் காமதேனு மின்னிதழுக்காகப் பேசினோம்.

பொதுவா, தமிழ்ப் பெண்கள் நடிக்க முன் வருவதில்லை என்று சொல்லப்படும் நிலையில் எங்கோ ஒரு கிராமத்தில் இருந்து வந்து உங்களது லட்சியக் கனவை அடைந்திருக்கிறீர்கள்... எப்படி இருக்கிறது உங்களது சினிமா பயணம்?

ஜெயம்கொண்டம் பக்கம் ரொம்பச் சின்னக் கிராமம்தான் என் ஊர். அங்க பெண்களைப் படிக்க வைக்கிறதே பெரிய விஷயம். பிளஸ் டூ முடிச்சுட்டாங்கன்னா உடனே கல்யாணம் பண்ணிக் கொடுக்க மாப்பிள்ளைத் தேட ஆரம்பிச்சுடுவாங்க. அவங்களுக்கு அவங்களோட கடமையை நிறைவேத்தணுங்கிற அவசரம். அதைத் தாண்டி பெண்களோட கனவுகளுக்கு பொதுவாகவே அங்கே எந்த மரியாதையும் இருக்காது. எனக்கு சின்ன வயசுலயே நடிப்பு ஆசை இருந்தது. இதுதான் வேணும்னு ரொம்ப போராடி வந்த இடம் இது. நடிப்புல நல்ல பெயர் சம்பாதிக்கணுங்கிற ஏக்கம் இருந்தது. அந்த ஃபயரோடயே போராடியதால, இப்பவரைக்கும் நல்ல பெயரை உருவாக்கி இருக்கேன்னு நம்பறேன். இந்தப் பயணம் எனக்கு சுகமாவே இருக்கு.

நீங்கள் பரதநாட்டிய கலைஞர். இதுவரை அதை வெளிப்படுத்தும் விதமான கதைகள் ஏதும் வந்திருக்கிறதா?

அப்படியொரு கதை கிடைச்சா கண்டிப்பா மிஸ் பண்ணமாட்டேன். எனக்கும் ஆசைதான். இப்ப நான் நடிச்சிருக்கிற ’ஜோதி’ படத்துல கிளாசிக்கல் டான்சரா நடிச்சிருக்கேன். கிருஷ்ணா அண்ணாமலை இயக்கி இருக்கிற இந்தப் படத்துல வெற்றி ஹீரோவா நடிச்சிருக்காரு. மருத்துவமனைகள்ல குழந்தைகளைக் கடத்தும் சம்பவங்கள் இப்ப அதிகமா நடந்துட்டு இருக்கு. அந்தப் பின்னணியில நடக்கிற கதை. இதுல, ’ஜோதி’ நான் தான். குழந்தையைத் தொலைச்சுட்டு தவிக்கிற தாய். கதையில நடனத்துக்கு அதிக முக்கியத்துவம் இல்லைனாலும் கொஞ்சம் இருக்கு. ஜூலை மாசம் படம் ரிலீஸ் ஆகுது.

பேயா நடிச்சிருக்கீங்களாமே?

ஆமா. ‘மாயத்திரை’ படத்துல பேயாக நடிச்சிருக்கேன். காஷ்ட்யூமர் சாய் தயாரிக்கிற படம் இது. ஒரு தியேட்டர்ல, 42 பேய்கள் இருக்கும். அதில் ஒரு பேயா நானும் இருப்பேன். எல்லோரும் எப்படி பேயா மாறினோம்னு ஒவ்வொருத்தருக்கும் ஒரு கதை இருக்கும். அதுல எனக்கும் ஒரு கதை இருக்கு. சுவாரஸ்யமான பேயா இருக்குமான்னு தெரியாது. ஆனா, படம் சுவாரஸ்யமா இருக்கும்.

கதையம்சம் கொண்ட படங்கள்லயே நடிச்சுட்டு வர்றீங்க... கமர்ஷியல் ஆசை இல்லையா?

கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கிற படங்கள்ல நடிக்கிறதுதான் எனக்கு சௌகரியமா இருக்கு. அதுக்காக கமர்ஷியல் படங்கள் பண்ணமாட்டேன் அப்படின்னு இல்லை. எல்லாவிதமான படங்கள்லயும் நடிக்கணுங்கிறதுதான் ஒரு நடிகையா எனக்கு முக்கியம். வாய்ப்பு வந்தா நடிப்பேன். இப்பதான் சிறந்த கதைகள் கொண்ட படங்களை பெரிய நிறுவனங்கள் வாங்கி விநியோகிக்கும் நிலைமை இங்க உருவாகி இருக்கு. அப்படி என் படங்களும் விநியோகிக்கப்பட்டால் மகிழ்ச்சிதான். இது என் தனிப்பட்ட கருத்து.

ஜல்லிக்கட்டு காளை ஒன்றை நீங்கள் வளர்க்கிறீர்களாமே..?

வெற்றிமாறன் தயாரிக்கிற தொடர் ’பேட்ட காளி’. இது ஜல்லிக்கட்டை மையப்படுத்திய கதை. ‘அண்ணனுக்கு ஜே’ படத்தை இயக்கிய ராஜ்குமார் இயக்குகிறார். ’மேற்கு தொடர்ச்சி மலை’ ஆண்டனி ஹீரோ. கலையரசன், கிஷோர், வேல ராமமூர்த்தி முக்கிய வேடங்கள்ல நடிக்கிறாங்க. வேல்ராஜ் ஒளிப்பதிவு, சந்தோஷ் நாராயணன் இசைன்னு ஒரு சினிமாவுக்கு இணையா எடுக்கப்படற வெப்சீரிஸ் இது.

இதுல ஜல்லிக்கட்டுக் காளையை வளர்க்கிற பெண்ணா நடிக்கிறேன். அந்த காளையோட எனக்கு நிறைய காட்சிகள் இருக்கு. அதனால அந்த மாடுகூட 15 நாள் பழகினேன். தினமும் அதுக்கிட்ட உட்கார்த்து, கதை பேசி, அதுக்கு நெருக்கமா என்னை மாற்றினேன். உண்மையிலேயே அது என்கூட ரொம்பவே அட்டாச் ஆயிடுச்சு. இப்ப நான் சொல்றது கூட உங்களுக்கு என்னவோ மாதிரி இருக்கலாம். ஆனா, அந்த தொடர் வந்ததும் பாருங்க. நான் சொன்னது புரியும். நான் உட்காருன்னா, அந்த மாடு உட்காருமளவுக்குப் பழகிடுச்சுன்னா பாருங்களேன்.

மலையாளத்திலும் நடிச்சுட்டு இருக்கீங்கதானே..?

இப்பவும் நடிக்கிறேன். ’கும்பளாங்கி நைட்ஸ்’ படத்துல தமிழ்ப் பெண்ணா நடிச்சிருந்தேன். தமிழ்லயே பேசி நடிச்சதால பெரிய வித்தியாசம் தெரியலை. அந்த கேரக்டருக்கு வரவேற்பு கிடைச்சது. இப்ப ’பெர்முடா’ன்னு ஒரு படத்துல நடிச்சிருக்கேன். இதுலயும் தமிழ்ப் பேசி நடிக்கிற கேரக்டர். ராஜீவ் குமார் இயக்குகிறார். இதிலும் எனக்கு நல்ல கேரக்டர். இன்னும் இரண்டு படங்கள்ல நடிக்கிறேன். முழு மலையாளப் பெண்ணா அந்தப் படங்கள்ல நடிக்க இருக்கிறேன். அது பற்றிய அறிவிப்பு விரைவில் வரும். நடிப்புக்கு, மொழி தடையில்லைங்கிறதுதான் என் பாலிசியும். அடுத்ததா தெலுங்கிலும் நடிக்கப் போறேன்.

சின்னத்திரைக்கு குட்பை சொல்லியாச்சா?

’அழகிய தமிழ் மகள்’ தொடர் எனக்கு நல்ல பெயரைக் கொடுத்தது. அதன் மூலமா அதிகமான பேரை என்னால ரீச் பண்ண முடிஞ்சுது. தொடர்ந்து டெலி சீரியல் வாய்ப்பு வருது. இப்போதைக்கு என்னால அதுக்கு நேரம் ஒதுக்கமுடியலை. படங்களில் நடிச்சிட்டு இருக்கிறதால் அதுக்கே நேரம் சரியா இருக்குது. அதனால சீரியலுக்குக் கொஞ்சம் பிரேக் கொடுத்திருக்கேன்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in