வேண்டாம் என்று ஒதுக்கமுடியாத வாய்ப்பு இது!

‘வதந்தி’ வலைத்தொடர் நாயகி சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி பேட்டி
சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி
சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி

சஞ்சனா சிங், சஞ்சனா நடராஜன் என ஏற்கெனவே பல சஞ்சனாக்கள் இருக்க... சாய் பல்லவியைப் போல, ஊட்டியிலிருந்து இளம் புயலாகக் கிளம்பியிருக்கிறார் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி. யூடியூப் தொடர்களின் வழியாக புகழ்பெற்று, ‘யார் இந்தப் பெண்?’ எனக் கேட்க வைத்தவர். தற்போது புஷ்கர் - காயத்ரி தயாரிப்பில், ஆண்ட்ரூ லூயீஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘வதந்தி’ வலைத் தொடரின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியிருக்கிறார். காமதேனுவுக்காக அவரிடம் உரையாடியதிலிருந்து...

வாசகர்கள் அறிந்துகொள்ள உங்களைப் பற்றி ஒரு சிறு அறிமுகம் தாருங்கள்...

எனது சொந்த ஊர் ஊட்டி படுகா பெண். இப்போது வசிப்பது சென்னையில்தான். எடுத்ததுமே என்னிடம் எல்லோரும் கேட்கிற கேள்வி, “உங்களுக்கு தமிழ் தெரியுமா?” என்றுதான். எனக்கு நன்றாகவே தமிழ் தெரியும். நான் ஒரு தமிழ்ப் பெண் தான். தற்போது சென்னையில்தான் வசிக்கிறேன். சென்னை எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரியில் விஸ்காம் படித்தேன். படிப்பு முடியும் நேரத்தில்தான் ‘வதந்தி’ தொடரில் நடிக்கும் வாய்ப்பு அமைந்தது. புஷ்கர் - காயத்ரி தயாரிக்கிறார்கள், நான் இயக்குகிறேன் என்று இயக்குநர் லூயீஸ் போன் செய்து சொன்னார். அவர் போன் செய்த அன்றே அவரைச் சந்தித்து அந்த வாய்ப்பைத் தக்கவைத்துக் கொண்டேன். இதைவிட சிறந்த அறிமுகம் கிடைக்காது.

யூடியூப் வழியே பிரபலமாக முடியும் என்பதை நிரூபித்தீர்கள்... இப்போதும் ‘ஆசம் மச்சி’ குழுவுடன் தொடர்பில் இருக்கிறீர்களா?

இல்லை. நான் படித்துக்கொண்டிருந்தபோது யூடியூப் தொடர்களில் ஒரு பரிட்சாத்த முயற்சியாகத்தான் நடித்தேன். அதற்கு இன்று வரை நல்ல வரவேற்பு கிடைத்துக் கொண்டிருக்கிறது. அந்த சமயத்தில் நடிப்பில் முழுவீச்சில் இறங்க வேண்டும் என்கிற எந்த திட்டமும் எனக்குள் இல்லை. படித்துக்கொண்டே டிசைன் வேலைகளும் செய்து கொண்டிருந்தேன். உண்மையில், சினிமா இயக்க வேண்டும் என்பது தான் அப்போது எனக்கான விருப்பமாக இருந்தது.

அதற்காக உதவி இயக்குநராகப் பயிற்சி பெறும் வாய்ப்பைத் தேடிக்கொண்டிருந்த நேரத்தில்தான் ‘வதந்தி’ வலைத் தொடருக்கான வாய்ப்பு அமைந்தது. நடிப்பதுகூட இயக்குநர் ஆவதற்கான பயிற்சியின் ஒரு பகுதிதான் என்று நான் நினைக்கிறேன். இயக்கம் சார்ந்து நடைமுறையில் நிறையக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது எனது விருப்பம். ‘வதந்தி’ படப்பிடிப்பில் நான் நடிக்காத காட்சிகளின்போது படப்பிடிப்புத் தளத்தில் இருந்து எல்லாவற்றையும் நுணுக்கமாகக் கவனித்தேன். அங்கே, ஒரு விஸ்காம் மாணவி என்ற உணர்வுடன் எல்லோருடமிருந்தும் நிறையக் கற்றுக்கொண்டேன்.

உங்களைக் கவர்ந்த இயக்குநர் என்று யாரைச் சொல்வீர்கள்?

சுதா கொங்கரா மேடம் என்று யோசிக்காமல் சொல்வேன். எனக்குப் பிடித்த போல்டான கதாபாத்திரம் எது என்று கேட்பீர்கள் என்றால் ‘இறுதிச் சுற்று’ படத்தின் கதாநாயகி எழில் மதி என்பது எனது பதிலாக இருக்கும்.

‘வதந்தி’ வலைத் தொடரில் ஏற்றுள்ள கதாபாத்திரம் பற்றிக் கூறுங்கள்...

வெலோனி என்கிற ஆங்கிலோ இந்தியப் பெண்ணாக வருகிறேன். முதலில் எனது கதாபாத்திரம் பற்றி இயக்குநர் ஆண்ட்ரூ லூயீஸ் சுருக்கமாகத்தான் சொன்னார். படப்பிடிப்பு தொடங்கிய பிறகுதான் நான் ஏற்றிருப்பது எவ்வளவு பெரிய கதாபாத்திரம், அதன் வெயிட்டேஜ் என்ன என்பதையே புரிந்துகொண்டேன். அறிமுக நடிகராக இருக்கும் என்னை நம்பி இந்தக் கதாபாத்திரத்தைக் கொடுத்த புஷ்கர் - காயத்ரி, இயக்குநர் ஆண்ட்ரூ லூயீஸ் ஆகியோருக்கு என் நன்றி.

தொடரில் எனக்கு அம்மாவாக லைலா நடித்திருக்கிறார். அவருடன் மட்டுமல்ல... நாசர் சார், எஸ்.ஜே.சூர்யா சார் என்று சாதனையாளர்களுடன் நடிக்கும் வாய்ப்பு அமைந்தது என் அதிர்ஷ்டம். படப்பிடிப்பு நாட்களையும் மறக்க முடியாது. எனது கதாபாத்திரத்துக்கு ஒவ்வொரு கட்டத்திலும் அதற்கான தயாரிப்பு இருந்தது. அதற்காக நிறையவே உழைத்து என்னுடைய பெஸ்ட்டைக் கொடுத்துள்ளேன்.

ஊடகத் துறைக்குப் பெண்கள் வருவதற்கு பெற்றோரின் ஆதரவுதான் முதலில் தேவைப்படுகிறது. உங்களுக்கு வீட்டில் ஆதரவு எப்படி?

மொத்தக் குடும்பமும் ஆதரவு கொடுக்கிறார்கள். ஆரம்பத்தில் யூடியூபில் நடிப்பு என்று இறங்கியபோது அப்பா- அம்மா விரும்பவில்லைதான். “முதலில் படிப்பை முடி, பிறகு பார்க்கலாம்” என்றார்கள். ஆனால், ‘வதந்தி’ வலைத் தொடருக்கான வாய்ப்பு வந்தபோது, கதையையும் எனது கதாபாத்திரத்தையும் அவர்களுக்குச் சொன்னேன். இது வேண்டாம் என்று சொல்லிவிட்டுப்போகிற சாதாரண வாய்ப்பு இல்லை என்பதால் ஓகே சொல்லிவிட்டார்கள். அவர்களின் ஆசீர்வாதத்துடன் நடிக்க வந்திருக்கிறேன்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in