என்னை எப்படி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அழைப்பார்கள்?

ரைசா வில்சன் பேட்டி
ரைசா வில்சன்
ரைசா வில்சன்

‘பியார் பிரேமா காதல்’ படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் நாயகியாக தடம் பதித்தவர் ரைசா வில்சன். பாலாவின் ‘வர்மா’ படத்துக்கு தேர்வாகி கோலிவுட்டின் ஹாட் சென்சேஷன் ஆனார். பிக் பாஸ் வீட்டுக்குள்ளும் விருந்தாளியாகச் சென்று வந்தார். அந்த ராசியோ என்னவோ, கடந்த 2 ஆண்டுகளாக கரோனா அலையில் சிக்கி, ரைசாவின் ஆக்டிங் கேரியர் கவிழ்ந்துபோனது. அந்தச் சூழல் கொஞ்சம் மாறி தற்போது ரைசாவின் படங்கள் வரிசையாக ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. அதில் முதலாவதாக வெளிவரவிருக்கும் படம் விஷ்ணு விஷாலின் ‘எஃப்.ஐ.ஆர்’. இதில் 3 கதாநாயகிகளில் ஒருவராக வரும் ரைசா, காமதேனு மின்னிதழுக்கு அளித்த பேட்டியிலிருந்து...

‘பிக் பாஸ் அல்டிமேட்’ நிகழ்ச்சியில் பங்கேற்க உங்களுக்கும் அழைப்பு வந்ததா?

அதற்கு வாய்ப்பே இல்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியை அதிகமாகத் திட்டித் தீர்த்தவள் நான். என்னை எப்படி அழைப்பார்கள்? ஆனாலும், பிக் பாஸ் டீமில் இருந்த எனது நண்பர் ஒருவருக்கு, ‘நான் வரலாமா’ என்று கேட்டு சும்மா ஒரு மேசேஜ் போட்டேன்.. உடனே அவர் டீமில் பேசிவிட்டு ‘வெல்கம் சொல்லிவிட்டார்கள்’ என்றார். ‘அடப்போய்யா... சும்மா விளையாட்டுக்குக் கேட்டேன்’ என்று சொன்னேன். அவர் செம கடுப்பாகிவிட்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் உங்களுக்கு எந்தப் பலனும் இல்லையா?

சத்தியமாக இல்லை. ஒரே நல்ல விஷயம்.. அந்த நிகழ்ச்சியில் இயக்குநர் சேரன் சாரிடம் தமிழை நன்றாகப் பேசக் கற்றுக்கொண்டேன். அது இப்போது படங்களில் நடிக்கும்போது பயன்படுகிறது. இது சேரன் சார் எனக்குக் கற்றுக்கொடுத்ததுதானே தவிர, பிக் பாஸ் நிகழ்ச்சி அல்ல.

உங்களைப் பற்றியும் உங்களுடைய பெங்களூரு நாட்களைப் பற்றியும் கொஞ்சம் சொல்லுங்களேன்...

அப்பா மலையாளி. டெல்லியில் பிறந்து வளர்ந்தவர். என்றாலும் அப்பச்சனும் அம்மச்சியும் அவருக்கு மலையாளத்தை ஊட்டிவிட்டார்கள். அம்மா டெல்லியைச் சேர்ந்தவர். அவருக்குத் தாய்மொழி இந்தி. நானும் டெல்லியில் பிறந்து வளர்ந்தவள். மலையாளத்தை ஊட்டவேண்டும் என்பதற்காகவே, என்னை ஊட்டியில் பள்ளிப்படிப்பை முடிக்க வைத்தார் அப்பா. கோடை விடுமுறைக்கும் அப்பச்சன் அம்மச்சியுடன் கேரளத்தில் இருப்பேன். சின்ன வயதில் எந்த மொழியையும் நன்றாகக் கற்றுக்கொள்ளலாம். மலையாளம் நன்றாகவேப் பேசுவேன். இந்தி அம்மாவின் மொழி என்பதால் இன்னும் நன்றாகப் பேசுவேன்.

பள்ளிப் படிப்பை முடித்தபிறகு, பெங்களூரு ஜெயின் கல்லூரியில் பி.காம் சேர்ந்தேன். முதலாண்டு முடிவதற்குள்ளாகவே மாடலிங் வாய்ப்புகள் அதிகமாக வரத் தொடங்கியதால், படிப்பை பாதியில் விடவேண்டிய நிலை. இன்னும்கூட எனது பட்டப் படிப்பை முடிக்க முடியவில்லை.

ஹீரோயின், கேரக்டர் ரோல் என மாறி மாறி நடித்து வருகிறீர்கள். கோலிவுட்டில் போட்டி அதிகமாக இருப்பதுதான் இதற்குக் காரணமா?

போட்டி இல்லாத ஃபீல்ட் என்று எதுவுமே இல்லை. ஹீரோயினாக, ஃபீமேல் லீட் நடிப்பதற்கும் மல்டி ஸ்டார் படத்தில் ஒரு கேரக்டர் நடிப்பதற்கும் நிறைய வேறுபாட்டை உணர்ந்திருக்கிறேன். இரண்டில் எது பெட்டர் என்று கேட்டால், ‘ஸ்ட்ராங் கேரக்டர்’ தான் நமக்கு நல்ல ஆக்டர் என்ற பெயரைப் பெற்றுக்கொடுக்கும். ஹீரோயின் ரோல் ஒரு ‘ஷோகேஸ் அய்ட்டம்’ மாதிரி. கமர்ஷியல் படத்தில் ஹீரோயின் ரோல் செய்வது என்னைக் கேட்டால் ரொம்பவும் ஈஸி. இரண்டிலும் மாறி மாறி நடித்திருப்பதால் இப்போது ஃபீமேல் செண்ட்ரிக் படம் பண்ணவும் நான் ரெடி.

எந்தமாதிரி கேரக்டர் என்றாலும் சரி... அது கடவுள் எனக்கு இப்போது கொடுக்கும் பரிசாக நினைத்து அந்த வாய்ப்புகளை ஏற்றுக் கொள்கிறேன். இன்னும் ஐந்து வருடம் கழித்து, அப்போ கேட்டாங்களே... நாம முடியாதுன்னு சொல்லிட்டமே என்று நான் புலம்பக்கூடாது. நல்ல படங்களில் சிறிய, பெரிய கேரக்டர் என்றெல்லாம் பார்க்காமல் நடிக்கவே நான் விரும்புகிறேன்.

‘எஃப்.ஐ.ஆர்’ படத்தில் முக்காடு போட்டு முஸ்லிம் பெண்ணாக நடிப்பதற்கு முன்னால், அந்தக் கலாச்சாரத்தை தெரிந்துகொண்டீர்களா?

அதற்கு அவசிமே இல்லை. எனக்கு நிறைய முஸ்லிம் தோழிகள் இருக்கிறார்கள். சின்ன வயதிலிருந்து அவங்க கல்சரைப் பார்த்துத்தான் நான் வளர்ந்திருக்கிறேன். ‘எஃப்.ஐ.ஆர்’ படத்தில் அனிஷா குரேஷி என்ற கேரக்டரில் வருகிறேன். வெரி ஸ்ட்ராங் முஸ்லிம் வுமன் கேரக்டர். அவள் விரும்பி முக்காடு அணிபவள். அது தனக்கு அழகு; கம்பீரம் என்று நினைப்பவள். நிஜ வாழ்க்கையில் எனது முஸ்லிம் தோழிகளும் அப்படிப்பட்ட கம்பீரமான பெண்கள்தான். படத்தில் அனிஷா குரேஷிக்கும் ஹீரோவுக்கும் ஆக்‌ஷன் காட்சிகள் உண்டு. நானே ஆக்‌ஷனும் செய்திருக்கிறேன். படத்தைப் பார்த்தபின்பு நீங்கள் கொஞ்சம் அரண்டுதான் போவீர்கள்.

விஷ்ணு விஷால் - கௌதம் மேனன் ஆகியோருடன் நடித்த அனுபவம் எப்படியிருந்தது?

விஷ்ணு விஷால் நல்ல திறமைசாலி. இயக்குநருக்கு முழுச் சுதந்திரம் கொடுக்கும் தயாரிப்பாளர். சக நடிகர்களை அவ்வளவு பத்திரமாக, அக்கறையாகப் பார்த்துகொள்ளும் ரியல் லைஃப் ஹீரோ. கௌதம் மேனன் போலீஸ் அதிகாரியாக வருகிறார். அவருக்கும் எனக்கும் காட்சிகள் ஏதுமில்லை. ஆனால், செட்டில் பார்த்துக்கொள்வோம். இடைவேளையில் பேசியும் இருக்கிறோம். ரெபா மோனிக்கா, மஞ்சிமா என்று இரண்டு அழகான பெண்களின் நட்பும் இந்தப் படத்தின் மூலம் கிடைத்தது. அதற்கு விஷ்ணு விஷாலுக்கும் படத்தின் இயக்குநர் மனு ஆனந்துக்கும் நன்றி சொல்கிறேன்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in