பிரசாந்த் இப்பவும் ஒரு லவ்வர் பாய்!

‘அந்தகன்’ நாயகி ப்ரியா ஆனந்த் பேட்டி
ப்ரியா ஆனந்த்
ப்ரியா ஆனந்த்

தமிழில் அறிமுகமான ப்ரியா ஆனந்த், இப்போது ‘பான் இந்தியா ஹீரோயின்’ என்கிற அந்தஸ்த்துக்கு உயர்ந்திருக்கிறார. 12 ஆண்டுகளாக கதாநாயகியாக மட்டுமே நடித்துவரும் இவருக்கு, விலங்குகள் மீது அலாதிப் பிரியம். தற்போது தமிழில் பிரசாந்த் ஜோடியாக ‘அந்தகன்’ (‘அந்தாதூன்’ தமிழ் மறு ஆக்கம்), தமிழ் கிளாசிக் திரைப்படமான ‘காசேதான் கடவுளடா’ மறு ஆக்கம் ஆகிய படங்களில் ப்ரியா செம பிஸி. புதிதாக போட்டோ ஷூட் நடத்திக்கொண்டிருந்த ப்ரியாவை, ‘ஸ்டோரி டெல்லர்’ போட்டோ ஷூட் தளத்தில் காமதேனுவுக்காக பிரத்யேகமாகப் பிடித்தோம்.

அந்தாதூன் தமிழ் ரீமேக் எப்படி வந்திருக்கிறது?

அந்தகன் படத்தோட பெரிய பலம் கதைங்கிறது எல்லாருக்கும் தெரியும். ஏற்கெனவே இரண்டு மொழிகள்ல ரீமேக் ஆகி ஹிட் ஆகிருக்கு. தமிழிலும் அதை ரொம்ப பிரம்மாண்டமா கொடுக்கணும்னு முடிவு பண்ணி, பெரிய நட்சத்திரங்களைப் ஃபிக்ஸ் பண்ணி வேலை வாங்கிட்டார் டைரக்டர் தியாகராஜன் சார். பிரசாந்தும் நானும் லவ்வர்ஸ். கார்த்திக் சார், சிம்ரன் மேம், ஊர்வசி மேம், மனோபாலா சார், கே‌எஸ் ரவிகுமார் சார், சமுத்திரக்கனி சார், யோகி பாபு, வனிதா விஜயகுமார்ன்னு காஸ்ட் அள்ளுது பாருங்க. எல்லாரும் போட்டி போட்டு நடிச்சிருக்காங்க அப்படிங்றதைவிட, டைரக்டர் தியாகராஜன் சார், யார்கிட்ட என்ன மாதிரியான நடிப்பை வாங்கணும்னு தெரிஞ்சு வேலை வாங்கினார்.

‘அந்தாதூன்’ சினிமட்டோகிராஃபியும் ஒரு கேரக்டர் மாதிரி ரோல் பண்ணிச்சு இல்லையா! அதை ரவி யாதவ் சார் தமிழில் அட்டகாசப்படுத்தியிருக்கார். ஷூட்டிங் திருவிழா மாதிரியே நடந்தது. டப்பிங் பேசும்போதும் ஃபெஸ்டிவல் மூட்தான். இப்போ படத்துக்கு சந்தோஷ் நாராயண் பிஜிஎம் எல்லாம் போட்டு முடிச்சதும், படத்தைப் பார்த்து மிரண்டு போயிட்டோம். அவ்வளவு அட்டகாசமா அந்தகன் வந்திருக்கு.

பிரசாந்த் நம்பிக்கையோட இருக்காரா?

பிரசாந்த் இப்பவும் ஒரு லவ்வர் பாய். அவருக்கு வயசே ஆகாதுபோல இருக்கு. ‘கண்ணெதிரே தோன்றினாள்’ படத்துல பார்த்த மாதிரியே இப்பவும் இருக்கார். அந்தகனுக்குப் பிறகு பிரசாந்த் மறுபடியும் ஒரு ரவுண்ட் வருவார் பாருங்க. அவருக்கு இந்தப் படம் நல்ல எக்ஸ்பிரிமென்ட். அதை நல்லா பயன்படுத்தி இருக்கார். பிரசாந்த்துக்கு ஏற்ற கதை. ஆடியன்ஸோட அவருக்கு இருக்கிற கனெக்ட் திரும்பவும் அவருக்கு கிடைச்சுடும்னு நான் நம்புறேன்.

மிர்ச்சி சிவாவுடன் தொடர்ந்து பல படங்கள் பண்ணியிருக்கீங்க... இது இயல்பாவே அமைஞ்சதா?

நிச்சயமா. எனக்கு சிவா ராசியான ஹீரோவும்தான். ‘வணக்கம் சென்னை’யில் தொடங்கினது. அப்புறம் ‘சுமோ’, இப்போ ‘காசேதான்’ கடவுளடா’. சிவாகிட்ட எனக்கு ரொம்பப் பிடிச்ச விஷயம் அவரோட ‘க்ளீன் காமெடி’. சினிமாங்கிறது குடும்பத்தோட பார்க்கிற ஆர்ட் ஃபார்மா இருக்கணும். அதனால ‘அடல்ட் காமெடி’ய சினிமால பயன்படுத்துறது தப்புன்னு சொல்லுவார் சிவா. சொன்ன மாதிரியே அவரோட படங்களுக்கு அவரே க்ளீன் காமெடி எழுதிடுவார்.

டைரக்டரே அடல்ட் கன்டென்ட் எழுதியிருந்தாலும் நான் நடிக்கமாட்டேன்னு அன்பா சொல்லிடுவார். ஷூட்டிங் பிரேக்ல ரொம்ப ஸ்பிரிச்சுவலா நிறைய சொல்வார். அவர்கிட்ட ஹ்யூமர் மட்டும் கிடையாது, இன்னொரு ஸ்பிரிச்சுவல் சைடும் இருக்கு. அது, என்னை மாதிரி ஒருசிலருக்கு மட்டும்தான் தெரியும். வெரி நைஸ்மேன்.

கன்னடத்தில் புனித் ராஜ்குமார்கூட அடுத்தடுத்து படம் பண்ணிட்டீங்களே..?

(சட்டென்று குரல் கம்மிப் பேசுகிறார்) புனித் பத்தி நினைச்சாலே கஷ்டமா இருக்கு. என் வாழ்க்கையில் நான் சந்தித்த சிறந்த மனிதர் அவர்தான். அவரை கன்னட சினிமாவில் ஒரு மாஸ் ஹீரோவாத்தான் எல்லாருக்கும் தெரியும். ஆனா, சைலன்ட்டா அவர் செஞ்சுட்டுவந்த சோஷியல் சர்வீஸ் பத்தி அவர் இறந்த பிறகுதான் வெளியுலகத்துக்கே தெரிய வந்திருக்கு. புனித் என்ற பேருக்கு ரொம்ப மீனிங்ஃபுல்லா அவர் வாழ்ந்திருக்கார்.

கடைசியா அவர்கூட நான் ஜோடியா நடிச்ச ‘ஜேம்ஸ்’. மார்ச் 17-ம் தேதி அவரோட பிறந்த நாளில் ரிலீஸ் பண்றதுக்கு பிரம்மாண்ட ஏற்பாடுகள் செஞ்சுட்டு இருக்காங்க. மூணு விஷயங்களை என்னோட வாழ்க்கையில மறக்கவே முடியாது. அதில ஒண்ணு... புனித் சார்கூட நான் நடிச்ச ‘ஜேம்ஸ்’ திரைப்படம்.

‘சுமோ’ படத்துக்காக ஜப்பான் சென்றீர்களா?

எனக்கு அந்த அதிர்ஷ்டம் கிடைக்கவில்லை. சிவாவுடன் மற்ற அனைவரும் ஜப்பான் சென்று வந்தனர். என்னுடைய காட்சிகள் அனைத்தையும் சென்னையிலேயே எடுத்துவிட்டார்கள். அசல் ஜப்பானி சுமோ வீரரான யோஷினோரி தஹிரோ நடித்திருக்கிறார். அவருக்கு ரஜினிகாந்த் என்கிற வார்த்தையைத் தவிர, தமிழில் வேறு எதுவுமே தெரியாது. டப்பிங் பேசுவதற்காகவும் என்னுடன் அவருக்கு உள்ள காட்சிகளுக்காகவும் சென்னை வந்திருந்தார். இனிமையான மனிதர்.

இத்தனை ஆண்டுகளாக கதாநாயகி என்கிற இடத்தை தக்க வைத்திருக்கும் ரகசியம்..?

ஒரு ரகசியமும் இல்லை. என்னுடைய பாட்டி எனக்கு சத்தான உணவை சமைத்துக் கொடுக்கிறார். எந்த மாநிலத்தில் நடித்துக்கொண்டிருந்தாலும் பாட்டியின் உணவுக்காக ஏங்குவேன். 12 ஆண்டுகளைக் கடந்தும் கதாநாயகி என்பதை நான் ஆச்சரியமாப் பார்க்கல. காரணம், ரொம்ப சிம்பிள். ஹீரோக்கள் மாதிரி ஹீரோயின்களும் உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வச்சுக்கிட்டா, ரசிகர்கள் ஏத்துக்குவாங்க. கல்யாணம் ஆச்சா ஆகலையா அப்படிங்கிறதையெல்லாம் அவங்க இப்ப கன்சிடர் பண்றதே கிடையாது.

தமிழ் சினிமாவில் ஹீரோயின் விஷயத்துல மாற வேண்டியது ஒண்ணே ஒண்ணுதான். இங்கயே தமிழ்ப் பெண்கள் இவ்வளவு அழகா இருக்கும்போது, நீங்க எதுக்கு நாயகிகளைத் தேடி நார்த் இண்டியாவுக்கு ஓடுறீங்க... அதை மொதல்ல நிறுத்துங்கன்னு சொல்றேன்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in