அமைதியான பிரசவ அனுபவத்தைக் கொடுத்த அம்மாவுக்கு நன்றி! - நெகிழும் நடிகை ப்ரணிதா

அமைதியான பிரசவ அனுபவத்தைக் கொடுத்த அம்மாவுக்கு நன்றி! - நெகிழும் நடிகை ப்ரணிதா

நடிகை ப்ரணிதா தமிழில் 'உதயன்' படம் மூலம் அறிமுகமாகி இருந்தாலும் நடிகர் கார்த்தியுடன் இணைந்து நடித்த 'சகுனி' படம் தான் இவருக்குப் பரவலான அறிமுகத்தைக் கொடுத்தது. பிறகு நடிகர் சூர்யாவுடன் 'மாஸ்' உள்ளிட்ட படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னட படங்களிலும் இவர் கவனம் செலுத்தி வந்தார்.

கடந்த வருடம் திருமண பந்தத்தில் இணைந்த இவருக்கு சமீபத்தில் பெண்குழந்தை பிறந்தது. இந்த செய்தியை சமூக வலைதளம் வழியாக மிகவும் மகிழ்ச்சியாக ப்ரணிதா பகிர்ந்துகொண்டார். குழந்தை பிறந்து சில தினங்களே ஆகும் நிலையில், தனக்கு மருத்துவராக பிரசவம் பார்த்தது தனது அம்மா என்பதையும் தனது சொந்த மகளுக்கு மருத்துவராக இருந்து அம்மா பிரசவம் பார்த்தபொழுது அவருக்கு எப்படியான ஒரு அனுபவமாக இருந்திருக்கும் என்பது பற்றியும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இப்போது பதிவிட்டுள்ளார் ப்ரணிதா. கூடவே, தனது அம்மா மற்றும் குழந்தையுடன் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்திருக்கிறார்.

ப்ரணிதா தனது பதிவில், ‘எனது அம்மா டாக்டர் ஜெயஸ்ரீயை பாராட்டும் விதமாகவும் எனது மகிழ்ச்சியை தெரிவிக்கும் விதமாகவும் இதைப் பகிர்கிறேன். எந்த ஒரு பெண்ணும் தனக்கு வேண்டிய சிறந்த ஒன்றாக நினைப்பது எதுவென்று என்னைக் கேட்டால் ஒரு பெண்ணுக்கு தனது அம்மாவே மகப்பேறு மருத்துவராக இருப்பது தான்.

ஆனால், ஒரு மகப்பேறு மருத்துவர் தனது சொந்த மகளின் பிரசவத்தை பார்ப்பது என்பது மிகவும் கடினமான மற்றும் உணர்ச்சிபூர்வமான ஒரு விஷயம் என்று தான் நான் சொல்வேன். ஏனென்றால், பிரசவத்தில் என்ன வேண்டுமானாலும் நிகழலாம், பல்வேறு விதமான ரிஸ்க் நிகழ வாய்ப்புள்ளது என்பதும் அவர்களுக்கு நன்றாகவே தெரியும்’ என்று கூறியுள்ளார்.

மேலும், தான் பகிர்ந்துள்ள அந்த புகைப்படத்தை குறிப்பிட்டு, ‘எனது அம்மா என்னுடைய குழந்தையைத் தூக்கும் பொழுது அவரது கைகள் எவ்வளவு நடுங்கியது, தனது சொந்த மகளுக்குப் பிரசவம் பார்க்கும் பொழுது அவர் எவ்வளவு பதற்றமாக இருந்தார் என்று சக மருத்துவர்கள் சொல்லி நான் கேட்டேன்.

பிரசவத்தில் எனக்கு இதுபோன்று அமைதியான ஒரு அனுபவத்தை கொடுத்ததற்கு எனது அம்மாவுக்கு நன்றி! அவர் எப்பொழுதும் ஏன் மருத்துவமனைக்கு விரைந்து போகிறார் அதற்கான முக்கியத்துவம் தருகிறார் என்பதை இப்பொழுது என்னால் முழுமையாக புரிந்துகொள்ள முடிகிறது. மருத்துவர்களை நம்பி வரும் ஒவ்வொரு நோயாளிக்கும் இவர்கள் தான் முழுப் பொறுப்பு என்பதை உணர முடிகிறது.

வீட்டில் ஏதாவது ஒரு விசேஷம் அல்லது நாங்கள் குடும்பமாக வெகேஷனுக்கு வெளியே செல்லலாம் என்று திட்டமிடும் பல சமயங்களில் அம்மா அதை தவிர்த்திருக்கிறார். அவர் சொந்த வாழ்க்கையை விட தன்னுடைய வேலைக்கு ஏன் அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பது எல்லாம் இப்பொழுது தான் என்னால் முழுமையாக ஏற்க முடிகிறது!' என்று நெகழ்ந்துள்ளார் ப்ரணிதா.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in