காஷ்மீர் ஷூட்டிங் மறக்கமுடியாத அனுபவம்!

‘ரங்கா’ நாயகி நிகிலா விமல் பேட்டி
நிகிலா விமல்
நிகிலா விமல்

கடந்த வாரம் கேரளத்தில் வெளியான மலையாளப் படம் ‘ஜோ அண்ட் ஜோ’. அதில் ‘ஜோமோள்’ என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிகிலா விமலுக்கு அவருடைய சிறந்த நடிப்புக்காக விமர்சகர்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்துள்ளன. இன்னொரு பக்கம், அந்தப் பட வெளியீட்டுக்கு முன் நிகிலா அளித்த வீடியோ பேட்டி ஒன்றில், பசு வதை பற்றிய கேள்விக்கு அவருடைய துணிச்சலான பதில் இணையத்தில் வைரலானது. தமிழில் சிபிராஜ் ஜோடியாக நிகிலா நடித்துள்ள ‘ரங்கா’ படம் திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் காமதேனு மின்னிதழுக்காக நிகிலா அளித்த பிரத்யேகப் பேட்டி இது.

‘ரங்கா’ படத்துக்காக காஷ்மீரில் படப்பிடிப்பு அனுபவம் எப்படியிருந்தது... பனி ஒத்துக்கொண்டதா?

கிட்டத்தட்ட ‘ரோஜா’ படத்தின் கதை போன்றது. உறைபனி ஒத்துக்கொள்ளாமல் படக்குழுவினருக்கு முகமெல்லாம் தோல் உரியத் தொடங்கிவிட்டது. பலருக்கு கால் நகங்களில் புண் வந்து கஷ்டப்பட்டார்கள். உறைந்த ஏரியில் வேறு படப்பிடிப்பு நடத்தினார் இயக்குநர். மாஃபியா கும்பலிடமிருந்து தப்பித்துச் செல்லும் என்னையும் சிபியையும் கழுத்தில் ஜி.பி.ஆர்.எஸ் பொருத்தப்பட்ட வில்லனுடைய நாய் துரத்திக்கொண்டு வருவதுபோல காட்சி. அதற்காக பஞ்சாபிலிருந்து ஒரு நாயை அழைத்து வந்திருந்தார்கள். எங்கே அது என்னை கடித்துவிடுமோ என்கிற பயம் கடைசி வரை இருந்துகொண்டே இருந்தது. மறக்கமுடியாத அனுபவம்.

‘வெற்றிவேல்’, ‘கிடாரி’ என உங்கள் அறிமுகப் படங்கள் வெற்றிபெற்றன. அதன்பிறகு உங்களது தமிழ்ப் படங்கள் பலவும் அவ்வளவாக கவனம் பெறாமல் போனதற்கு என்ன காரணம்?

‘பஞ்சு மிட்டாய்’, ‘ஒன்பது குழி சம்பத்’ இரண்டையுமே கதைக்காகத்தான் தேர்வு செய்தேன். ஆனால், ஓடவில்லை. அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். நிச்சயமாக நான் காரணமாக இருக்கமாட்டேன். ஒரு அறிமுக நடிகையாக நுழைந்தே இன்று நட்சத்திரமாக உயர்ந்திருக்கிறேன். அதனால், இப்போதுவரை கண்டென்ட் என்ன, எந்த டீம் என்பதை மட்டும் பார்க்கிறேனே தவிர, காஸ்டிங் பற்றி கவலைப்பட்டதில்லை. அதனால்தானோ என்னவோ தமிழில் தொடக்கம் முதலே பல மூத்த நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பும் எனக்கு அமைந்தது. கார்த்தி சாருடன் நடித்த ‘தம்பி’ வெற்றிப்படம்தான். ஜித்து ஜோசப் சேட்டன் படத்தில் அவ்வளவு சீக்கிரம் நடிப்பேன் என நினைக்கவில்லை.

தமிழில் இப்போதுவரை எனக்கு படங்கள் வந்துகொண்டிருப்பதற்கு அதுபோன்ற மாஸ் படங்கள்தான் காரணம். இன்னொரு பக்கம், மலையாளத்தில் ‘அரவிந்தனிண்டே அதிதிகள்’, ‘நிஜன் பிரகாஷன்’ இரண்டும் 100 நாள் ஓடிய படங்கள். மம்முக்காவுடன் (மம்மூட்டி) மஞ்சு சேச்சி (மஞ்சு வாரியர்) இருவருடனும் நடித்த ‘தி பிரிஸ்ட்’, ஜோஜு ஜார்ஜுடன் நடித்த ‘மருதம்’ போன்ற படங்கள் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.

ஹீரோயின் பார்ட் என்றாலும் கேரக்டர் ரோல் என்றாலும் கேரக்டராகத் தெரியும்படி நடிக்க முடிகிறதே எப்படி?

இந்தப் பாராட்டுகள் அனைத்துக்கும் எனக்கு முன்னர் நடித்துகொண்டிருக்கும் சீனியர்களையே போய் சேர வேண்டும். என்னைவிட சிறப்பாக நடிக்கும் பெண் நடிகர்கள் எல்லா சினிமாக்களிலும் இருக்கிறார்கள். நான் நன்றாக நடிக்கிறேன் என்பதை ரசிகர்களை விட விமர்சகர்கள் கூறும்போது பெருமையாக இருக்கிறது. இப்படிப் பாராட்டுப் பெரும்போதெல்லாம் அதை அம்மாவிடம் மறக்காமல் சொல்லிவிடுவேன். காரணம், நான் நன்றாக நடிப்பதற்கு அம்மாதான் காரணம்; அவர் சொல்லிக்கொடுத்த நடனம்தான் காரணம் என்று நினைக்கிறேன்.

மம்மூட்டியுடன் ‘தி பிரிஸ்ட்’ படத்தில் முழு நீளக் கதாபாத்திரத்தில் நடித்தீர்கள். எப்படி இருந்தது அனுபவம்?

எனக்கு அமைந்த சிறந்த வாய்ப்புகளில் ஒன்று அது. என்னை அந்தப் படத்தின் இயக்குநர் ஜோபின் தான் மம்முக்காவிடம் அறிமுகப்படுத்தினார். அவருடன் இணைந்து நடித்த முதல் நாள் படப்பிடிப்பில் அவருக்கு நமஸ்காரம் செய்துவிட்டு, “நான் நிகிலா விமல்... கண்ணூர்காரி” என்றேன். பதிலுக்கு அவர், “என் பெயர் மம்மூட்டி... சினிமாவில் நடிக்கிறேன்” என்றார். எனக்கு பகீரென்றது. காரணம், அவர் அதை அவ்வளவு இயல்பாகச் சொன்னார். தன்னைப் பற்றிய எந்த பெருமிதமும் அவரிடம் இல்லை. அதுதான் மம்மூக்கா. அதனால்தான் அவர் சூப்பர் ஸ்டார்.

“எல்லா உயிர்களும் ஒன்று தான். கொல்லக்கூடாது என்பதே சட்டம் என்றால் அது அனைத்து உயிர்களுக்கும் பொருந்தும்” என்று நீங்கள் ‘ஜோ அண்ட் ஜோ’ படத்துக்காகக் கொடுத்த பேட்டிக்கு வந்த ஆதரவு - எதிர்ப்பு இரண்டையும் எப்படி எடுத்துக்கொண்டீர்கள்?

எனது கருத்துக்கு ஆதரவுதான் அதிகமாக இருக்கிறது. என் மனநிலையில் இருப்பவர்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள் என்பதற்கு இதுவே சாட்சி. இதற்குமேல் பேசியதையே மீண்டும் பேச வேண்டாம் என நினைக்கிறேன்.

கரோனா பெருந்தொற்றின் முதல் அலையில் உங்கள் தந்தையை இழந்தீர்கள்... அதிலிருந்து மீண்டுவிட்டீர்களா?

மீண்டு வரக்கூடிய இழப்பல்ல அது. தந்தைக்கு நண்பர்கள் அதிகம். எங்கள் வீடு அப்பாவின் நண்பர்களால் எப்போதும் நிறைந்திருக்கும். அவர் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் பொறுப்பில் இருந்தார். அரசுப் பணி, பிறகு ஆசிரியப் பணியில் இருந்தபோதே எங்களை அப்படிப் பார்த்துக் கொண்டார். ஓய்வுபெற்ற பிறகும் எங்களைக் கொண்டாடினார். அவருக்கு உடலில் சில பிரச்சினைகள் இருந்ததால் அவரைக் கோவிட் தொற்றிவிடக் கூடாதே என்று அவ்வளவு கவனமாகப் பார்த்துக்கொண்டோம். நான் அப்பாவுக்காக சில பட வாய்ப்புகளை மறுத்தேன். ஆனாலும் பயனில்லை.

முதலில் அம்மாவுக்கும், தங்கைக்கும் பிறகு எனக்கும் கோவிட் தொற்றி கடந்துபோனது. அப்பா முதலில் தப்பித்துக் கொண்டாலும் சில மாதங்களில் அவருக்கும் தொற்று ஏற்பட்டபோது இடிந்து போனோம். மீண்டுவிடுவார் என்று நினைத்தபோது அவர் எங்களைவிட்டு சட்டென மறைந்துவிட்டார். அப்பாவின் இறப்பு பற்றி அனைவருக்கும் தகவல் கூறியது, அவரது உடலை மயானத்துக்கு எடுத்துச் சென்று இறுதிச் சடங்குகள் செய்தது என்று அனைத்தையும் தனியாகச் செய்தேன். பலரும் எங்கள் வீட்டுக்கு வரவே பயந்தார்கள். எனக்கு அழக்கூட நேரமில்லை. அப்பா மறைந்து ஒரு வாரம் கழித்தே அழத் தொடங்கினேன். வலிமிகுந்த அந்த நாட்களை இப்போது நினைத்தாலும் உடல் நடுங்குகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in