ஃபகத் ஏற்று நடித்த வில்லன் ரோல்கள் எனக்கு ரொம்பவே பிடிக்கும்!
கேரளத்திலிருந்து தமிழ் சினிமாவுக்கு வந்தக் கதாநாயகிகளில் ‘நடிப்புக்கொரு நஸ்ரியா’ என்று பெயரெடுத்தவர் நஸ்ரியா. ‘திருமணம் என்னும் நிக்காஹ்’ படத்துக்குப் பிறகு மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான ஃபகத் ஃபாசிலைத் திருமணம் செய்துகொண்டவர். 8 வருட இடைவெளி எடுத்துக்கொண்டு ‘அடடே சுந்தரா’ தெலுங்குப் படத்தின் மூலம் மீண்டும் கதாநாயகியாக நடிக்கத் தொடங்கியிருக்கிறார். ‘அடடே சுந்தரா’ தமிழிலும் வெளியாகியிருக்கும் நிலையில், அந்தப் படத்தின் புரமோஷனுக்காக சென்னைக்கு வந்திருந்த நஸ்ரியா காமதேனுவுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டி இது.
எவ்வளவு புகழ்பெற்ற கதாநாயகியாக இருந்தாலும் திருமணத்துக்குப் பிறகு ஒரு இறக்கத்தைச் சந்திப்பார்கள். உங்கள் அனுபவம்..?

எனக்கு அப்படியொரு நிலை வரவில்லை. முதல் காரணம், எனது கணவர் ஃபகத் ஃபாசில் ஒரு முன்னணி நடிகர். திருமணம் முடிந்தாலும், “இடைவெளி விடாமல் தொடர்ந்து நடி” என்றார். எனக்கும் வாய்ப்புகள் வந்துகொண்டேதான் இருந்தன. ஆனால், நான்கு ஆண்டுகளுக்கு நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்தேன். திருமண வாழ்க்கையின் தொடக்க ஆண்டுகள் ஒரு வரம். அதன் அற்புதமான தருணங்களை நான் இழக்க விரும்பவில்லை. கணவருடன் பல நாடுகளுக்குப் பயணம் செய்தேன். அவரும் எனக்காக நிறைய நாட்களை முழுவதுமாகக் கொடுத்தார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகே, நான் மீண்டும் முழு வீச்சில் நடிக்க விரும்புவதை இயக்குநர்களிடம் சொன்னார். அதன்பிறகே எனக்குப் பிடித்த கதைகளில் மலையாளத்தில் மீண்டும் நடிக்கத் தொடங்கினேன்.
தமிழ் சினிமாவிலிருந்து அழைப்பு இருந்ததா?
தமிழைப் பொறுத்தவரை எனக்குக் கதைகள் ஏதும் வரவில்லை. ஆனால், இங்குள்ள ரசிகர்கள் என்னை மறக்கத் தயாராக இல்லை. எனது சமூகவலைதளப் பக்கங்களுக்கு வந்து அவர்கள் வாழ்த்துவதையும் பாராட்டுவதையும் வைத்து இதைக் கூறமுடியும். ஒவ்வொரு வருடமும் கேரள ரசிகர்களை விட, தமிழ், தெலுங்கு ரசிகர்கள்தான் எனது பிறந்த நாளை அத்தனை கொண்டாடுகிறார்கள்.

தமிழ் ரசிகர்கள் உங்கள் மீது இவ்வளவு அன்பு வைத்திருந்தும் அவர்களுக்குக் கூடச் சொல்லாமல் உங்கள் திருமணத்தை காதும் காதும் வைத்தமாதிரி முடித்துவிட்டீர்களே?
(சிரிக்கிறார்). நானும் ஃபகத்தும் சில படங்களில் இணைந்து நடித்தபோது ஒருவருடைய திறமையை மற்றொருவர் பாராட்டிக்கொண்டோம். முதலில் நட்பு என்கிற அளவில்தான் இருந்தது எங்கள் பழக்கம். பிறகு ‘பெங்களூர் டேய்ஸ்’ படத்தில் நடித்தபோது போனில் பேசத் தொடங்கினோம். ஒருவரை ஒருவர் புரிந்துகொண்ட பிறகு காதலைப் பரிமாறிக் கொண்டோம். நாங்கள் காதலிப்பது தெரிந்ததும் இரண்டு தரப்பு பெற்றோருமே எங்களை அங்கீகரித்தார்கள். அதனால் திருமணத்தில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. சமூக வலைதளம் வழியாக என்னுடைய ரசிகர்களுக்கு என்னுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு நல்ல தருணங்களையும் நான் சொல்லியிருக்கிறேன். ரசிகர்கள் நல்ல புரிதல் கொண்டவர்கள்.
‘அடடே சுந்தரா’ தெலுங்குப் படத்தை ஒப்புக்கொள்ள என்ன காரணம்?
கதை கேட்கும்போது நான் மொழியை மனதில் வைத்துக் கேட்பதில்லை. கேட்ட கதை எனக்குப் பிடித்துவிட்டால் உடனடியாக அதை ஒப்புக்கொண்டு விடுகிறேன். அப்படித்தான் ‘அடடே சுந்தரா’ தெலுங்குப் படத்தை ஒப்புக்கொண்டேன். படத்தின் நாயகன் நானி என்பது ஒரு முக்கிய காரணம். அவருடைய கதைத் தேர்வுகளும் நடிப்பும் எனக்குப் பிடிக்கும். தெலுங்கு சினிமாவில் இருக்கும் ஒரு மலையாள நட்சத்திரம் என்று அவரை நான் நினைத்துக்கொள்வேன்.

நானியுடன் நடிக்கும்போது நம் வீட்டில் உள்ள ஒருவருடன் நடிப்பது போலவே உணர்ந்திருக்கிறேன். அவ்வளவு இளகிய இதயம் கொண்டவர். குழுவில் ஒவ்வொருவரையும் அவ்வளவு கௌரவமாக நடத்துகிறவர். இந்தப் படம் ஒரு ‘ரோம் காம்’ வகை. நானி ஒரு அர்த்தொடாக்ஸ் ஐயர் வீட்டுப் பையன். நான் ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவக் குடும்பத்தைச் சேர்ந்தவள். எங்கள் காதலைச் செரிமானம் செய்துகொள்ள இரண்டு தரப்புக் குடும்பங்களும் படும் பாடுதான் படம். காதல் காமெடிப் படம் என்பதைத் தாண்டி பல அட்டகாசமான விஷயங்கள் இதில் உள்ளன. குடும்பத்துடன் பார்த்து சிரித்து ரசிக்க ஒரு படம்.
உங்கள் கணவர் பெரும்பாலும் எதிர்மறைக் கதாபாத்திரங்கள் ஏற்று நடிப்பதை நீங்கள் எப்படி எடுத்துக்கொள்வீர்கள். இருவரும் படங்களில் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்கள் குறித்து, பார்த்த திரைப்படங்கள் குறித்து வீட்டில் விவாதிப்பது உண்டா?

இருவருமே நடிகர்கள் எனும்போது 12 முதல் 18 மணிநேரம் படப்பிடிப்பில் இருந்துவிட்டுத்தான் வீட்டுக்கு வருகிறோம். வீட்டிலும் வந்து சினிமாவைப் பற்றி பேசினால் அது சரியாக இருக்காது என்பதால், அதுபற்றியெல்லாம் அதிகம் பேசுவதில்லை. அவர், ஹீரோ, கேரக்டர் ரோல், வில்லன் என எதை ஏற்றுக்கொண்டாலும் அதை கேரக்டராக மட்டுதான் பார்ப்பார். வில்லன் ரோல் என்றால் அதில் நமது திறமையை வெவ்வேறு விதங்களில் காட்டுவதற்கு அதிக ஸ்கோப் இருப்பதாகச் சொல்வார். ஃபகத் ஏற்று நடித்த வில்லன் ரோல்கள் எனக்கு ரொம்பவே பிடிக்கும். என்றாலும் மற்றவர்களை அடிப்பது, கொல்வது போன்ற ரோல்களை கொஞ்சம் குறைத்துக் கொள்ளும்படி அவரிடம் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.