அஜித்திடம் நான் கற்றுக்கொண்டது..!

மனம்திறந்து பேசும் மஞ்சு வாரியர்
துணிவு படப்பிடிப்புத் தளத்தில்...
துணிவு படப்பிடிப்புத் தளத்தில்...

‘அசுரன்’ படத்தில் தனுஷின் மனைவி பச்சையம்மாவாக நடித்துக் கவர்ந்தார் மலையாள சினிமாவின் மூத்த கதாநாயகி மஞ்சு வாரியர். தற்போது ‘துணிவு’ படத்தில் ‘கண்மணி’ என்கிற கதாபாத்திரத்தில் அஜித்துடன் இணைந்து ஆக்‌ஷனில் கலக்கியிருக்கிறார். அவருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி...

‘அசுரன்’ படத்துக்குப் பிறகு என்ன மாதிரியான பட வாய்ப்புகள் தமிழில் வந்தன?

நிறையச் சொல்லலாம். ஆனால், நான் ஒரு நல்ல வாய்ப்புக்காக காத்திருந்தேன். அதுதான் ‘துணிவு’.

‘துணிவு’ படத்தில் நடித்த அனுபவம் எப்படியிருந்தது?

பல விதங்களில் எனக்குப் புது அனுபவமாக அமைந்துவிட்டது. ஏனென்றால் அஜித் சாருடன் வினோத் இயக்கத்தில் முதல் முறையாக நடித்திருக்கிறேன். அதுவும் ஒரு சீரியஸ் ஆக்‌ஷன் படத்தில் இவர்களுடன் இணைந்தது எனக்கு முற்றிலும் புது அனுபவம். ஏனென்றால் இதுபோன்ற ஆக்‌ஷன் படம் எதுவும் இதற்கு முன்பு நடித்ததில்லை. ‘துணிவு’ படத்தில் நடித்ததை ஒரு கற்றுக்கொள்ளும் அனுபவமாகவே பார்க்கிறேன்.

தனிப்பட்ட முறையிலும் தொழில் ரீதியாகவும் இப்படத்தில் நடித்ததை அணுவணுவாக ரசித்துச் செய்தேன். இதையெல்லாம் விட இன்னொரு ‘முதல் முறை’ என்கிற அனுபவத்தையும் ‘துணிவு’ எனக்குக் கொடுத்துள்ளது. அது என்னவென்றால்... இவ்வளவு எதிர்பார்ப்புகளை உருவாக்கியிருக்கும் படத்தில் நான் நிஜமாகவே முதல் முறையாக நடித்திருக்கிறேன்.

நீங்கள் ஏற்று நடித்துள்ள ‘கண்மணி’ கதாபாத்திரம் பற்றி..?

துப்பாக்கிகளை நுணுக்கமாகக் கையாளுவதில் தேர்ச்சி பெற்ற ஒரு பெண் கதாபாத்திரம். சினிமாவில் பார்த்து துப்பாக்கிகளை எப்படிப் பிடிக்கவேண்டும் என்று தெரியும். ஆனால், துப்பாக்கிகளை நுணுக்கமாகக் கையாளும் ஒரு பெண் என்று வரும்போது அதில் தனித்துவம் இருக்க வேண்டும் அல்லவா? அதுதான் எனக்குச் சவாலாகிவிட்டது. அந்த இடத்தில் அஜித் சார்தான் எனக்கு மிகப் பொறுமையாகக் கற்றுக் கொடுத்தார்.

அவர் இனிமையான மனிதர் என்பதை அறிவேன். அதேபோல், ஆக்‌ஷன் படங்களில் எப்படி ஸ்டைல் காட்ட முடியும் என்பதில் அஜித் சார் வேறு மாதிரி என்பதையும் இந்தப் படத்தின் மூலம் தெரிந்து கொண்டேன். ஆக்‌ஷன் காட்சிகளைப் பொறுத்தவரை சுப்ரீம் சுந்தர் மாஸ்டர் இருந்தாலும் பாங்காக் படப்பிடிப்பின்போது அந்த நாட்டைச் சேர்ந்த ஆக்‌ஷன் டைரக்டர்களும் உடன் இருந்து உதவி செய்தார்கள்.

பணம் பற்றிய கருத்துடன் உருவாகியிருக்கும் படத்தில் நடித்திருக்கிறீர்கள். ‘பணம்’ பற்றிய உங்கள் பார்வை என்ன?

வாழ்க்கையை நடத்தப் பணம் தேவையான ஒன்றுதான். ஆனால், பணமே எல்லாமும் என்பது கிடையாது.

இயக்குநர் எச்.வினோத் பற்றி..?

அவரது எல்லா படங்களையும் நான் ரசித்துப் பார்த்திருக்கிறேன். குறிப்பாக, ‘துணிவு’ படத்தில் அவரை ஊன்றிக் கவனித்த வகையில், செட்டுக்கு வந்தபிறகு அவர் ‘துணிவு’ படத்தைப் பற்றி வேறு எதையுமே யோசிக்கவோ பேசவோ மாட்டாரோ என்றுதான் நமக்குத் தோன்றும். படம் இல்லாமல் வேறு டாபிக் அவரிடம் பேசினாலும் அவர் மீண்டும் ‘துணிவு’ படத்தை பற்றி மட்டுமே சம்மந்தப்படுத்திப் பேசுவார்.

தவிர, அவர் அதிகமாகப் பேசி நான் பார்த்ததில்லை. அதற்கு பதிலாக அவர் தனது படம் வழியாகப் பேச விரும்புகிறார் என்பதைப் புரிந்துகொண்டேன். இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும். ‘துணிவு’ படத்தில் எனது கேரக்டர் எந்த இடத்தில் வரும்? என்பது உட்பட பல கேள்விகளைத் துருவித் துருவி அவரிடம் கேட்டுக்கொண்டே இருந்தேன். எல்லாவற்றுக்கும் பொறுமையாகப் பதில் சொன்னார். அதை மறக்கவே முடியாது.

கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வருகிறீர்கள். நல்ல படங்களில் நடித்த திருப்தி இருக்கிறதா?

இல்லை... நான் சினிமாவில் பிஸியாக நடித்தது என்றால் 10 ஆண்டுகள்தான். எனக்கு கிடைத்த ஆசீர்வாதங்களில் ஒன்று நல்ல படங்கள் நிறையவே என்னைத் தேடி வந்திருக்கின்றன. அவற்றிலிருந்து மிக நல்ல படங்களை தேர்வு செய்வது மட்டும்தான் எனது வேலையாக இருந்திருக்கிறது.

எனக்காக நல்ல கதாபாத்திரங்களை உருவாக்குவதும் அவை அனைத்தும் நல்ல கதைகளில் அமைந்துவிடுவதும் உண்மையிலேயே திருப்தியைக் கொடுத்துள்ளது. என்னை வைத்து இப்படி யோசிக்கும் படைப்பாளிகளுக்கு நன்றி கூற விரும்புகிறேன். அதேபோல். நாம் மிகவும் விரும்பி நடித்த பல படங்கள் சரியாக ஓடாதபோது நமது முடிவுகளும் தவறிப்போவதை உணர்ந்திருக்கிறேன்.

மஞ்சு வாரியர் என்றாலே இனிமையானவர்’ என்று ரசிகர்கள் புகழ்வதைப் பார்க்க முடிகிறது. எப்படி எல்லோருக்கும் இனிமையானவராக இருக்க முடிகிறது?

மிக்க நன்றி. ஆனால். அஜித் என்கிற மனிதரைப் பார்த்த பிறகு நானெல்லாம் ஒன்றுமே இல்லை என்று ஆகிவிட்டது. அவர் அளவுக்கு இறங்கிப் பணிவாக நடந்து கொள்ளவும் இனிமையானவளாக நடந்துகொள்ளவும் நான் நிறைய இறங்கிவர வேண்டும். அஜித்திடமிருந்து கற்றுக்கொண்டதில் அவரது பணிவுக்கே முதலிடம் கொடுப்பேன்.

உங்கள் வாழ்க்கையில் முக்கியமான மூன்று பேர்..?

என்னுடைய அம்மா, அப்பா மற்றும் அண்ணன்.

அடுத்து என்ன படத்தில் நடிக்கிறீர்கள்?

மலையாளத்தில் தொடர்ந்து நடிக்கிறேன். ராஜேஷ் என்கிற புது இயக்குநரின் படத்தில் நடிக்க இருக்கிறேன். படத்துக்கு ‘பங்கு’ என தலைப்பு வைத்திருக்கிறார்கள். மலையாள சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளர் கிரீஸ் கங்காதரன் படத்தை ஒளிப்பதிவு செய்து தயாரிக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in