நானும் சூர்யாவைப் போல் சினிமாவை நேசிக்கிறேன்!

மனிஷா யாதவ் பேட்டி
மனிஷா யாதவ்
மனிஷா யாதவ்

பாலாஜி சக்திவேலின் ‘வழக்கு எண் 18/9’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் மனிஷா யாதவ். மாடலிங் துறையிலிருந்து சினிமாவுக்கு வந்த இவர், அறிமுகப்படத்தைப் போலவே, ‘ஒரு குப்பைக் கதை’ படத்திலும் ஏற்றிருந்த கதாநாயகி கதாபாத்திரத்துக்காகப் பாராட்டப்பட்டார். தற்போது ‘கருட சுற்று’ உள்ளிட்ட 2 தமிழ் படங்களில் நடித்துவரும் மனிஷா, காமதேனு மின்னிதழுக்கு அளித்த சிறப்புப் பேட்டி இது.

‘வழக்கு எண் 18/9’ படம் வெளியாகி 10 வருடங்கள் ஆகப்போகிறது. அந்தப் படத்துக்குத் தேர்வானது இப்போதும் நினைவில் இருக்கிறதா?

மறக்கவே முடியாது. என்னால் இயல்பாக நடிக்க முடியும் என்று சொல்லிக்கொடுத்தவர் பாலாஜி சார். மிக இனிமையான மனிதர். பெங்களூருவில் பிளஸ் 2 படிக்கும்போது மாடலிங் வாய்ப்புகள் வந்தன. லீவ் போட்டுவிட்டு ஒரு விளம்பரப் படத்தில் நடித்தேன். அங்கே, இயக்குநர் பாலாஜி சக்திவேல் சாரின் அசோசியேட் ஒருவர் பள்ளி மாணவி கேரக்டர் ஒன்றுக்கு ஆடிஷன் செய்ய வந்ததாகச் சொன்னர். அப்போது எனக்கு தமிழ் தெரியாது. வீட்டிலிருந்து ஸ்கூல் யூனிஃபார்ம் எடுத்துவரச் சொல்லி அதைப் போட்டுக்கொண்டு சொல்லிக்கொடுத்த வசனங்களைப் பேசினேன்.

மனிஷா யாதவ்
மனிஷா யாதவ்

அந்த ஆடிஷன் முடிந்து 5 மாதம் ஓடியிருக்கும். ஒருநாள் பாலாஜி சக்திவேல் சார் போன் செய்து, “தமிழ் சினிமாவில் அறிமுகமாக விருப்பமா?” என்றார். ஓகே என்றேன். அதன்பிறகு 2 வருடம் ஓடியிருக்கும். மீண்டும் பாலாஜி சக்திவேல் சார் அழைத்தார். “சார் நான் இப்ப கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கிறேன். இப்ப நான் பள்ளி மாணவி தோற்றத்தில் இருக்கிறேனா என்று எனக்குத் தெரியாது” என்றேன்.. “ஸ்கைப் வீடியோ காலில் வா” என்றார். வீடியோ காலில் என்னைப் பார்த்துவிட்டு, “இப்போதும் பள்ளி மாணவிபோலத்தான் இருகிறாய்... நீதான் அந்தக் கேரக்டருக்கு சரி” என்றார்.

அப்படித்தான் அந்தப் படத்தில் நடித்தேன். இரண்டரை வருடம் காத்திருந்தாலும் எனக்கு தமிழ் சினிமாவில் கிடைத்த சிறப்பான அறிமுகம் அது.

இப்போது நடித்து வரும் படங்களைப் பற்றிக் கூறுங்கள்?

ரமணி சங்கர் இயக்கும் ‘கருட சுற்று’ படத்தில் கதாநாயகியாக நடிக்கிறேன். அதுவொரு சோஷியோ த்ரில்லர் படம். கதைதான் அதில் ஹீரோ, ஹீரோயின் எல்லாம். இந்தப் படம் தவிர, ஒரு முன்னணி தயாரிப்பு நிறுவனத்துடைய படத்திலும் கமிட் ஆகியிருக்கிறேன். படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்குகிறது. மேற்கொண்டு விவரங்களை அவர்கள் அபீசியலாக அறிவிப்பதுதான் சரி. நான் சொல்வது நாகரிகம் அல்ல.

மனிஷா யாதவ்
மனிஷா யாதவ்

அறிமுகப் படத்துக்குப் பின் தமிழில் உங்களை ‘டைப் காஸ்ட்’ செய்துவிட்டார்கள் என்று சொல்லலாமா?

நிச்சயமாக இல்லை. சுசீந்திரன் சாரின் ‘ஆதலால் காதல் செய்வீர்’, ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’, ‘ஒரு குப்பைக் கதை’ போன்ற படங்களை மனதில் வைத்துக் கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன். சில படங்கள் என்னுடைய தவறான தேர்வாக இருந்திருக்கலாம். ஆனால், பாலாஜி சக்திவேல் சாரிடம் ஒரு மாணவியாக நான் கற்றுக்கொண்டது, யதார்த்தமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதைத்தான்.

இதனாலேயே பல வாய்ப்புகளை நான் ஏற்கவில்லை. கமர்ஷியல் கதாநாயகி வேடங்களை ஏற்க நான் தயங்கவில்லை. ஆனால், அதுபோன்ற வேடங்களுக்கு கதையில் போதிய பங்கு இருக்கவேண்டும். சமீபத்தில் படப்பிடிப்புக்காக சென்னை வந்திருந்தபோது பாலாஜி சக்திவேல் சாரைச் சந்தித்தேன். அவருக்கு மகிழ்ச்சி. “என்னை நினைவில் வைத்திருக்கிறாய்... ‘ஒரு குப்பைக் கதை’ பார்த்தேன் வாழ்த்துகள். இதுபோன்று துணிச்சலான கேரக்டர்களைத் தேர்ந்தெடு” என்றார்.

“எல்லாம் உங்களிடமிருந்து கற்றுக்கொண்டது சார்” என்றேன். ‘ஒரு குப்பைக் கதை’ படத்தின் கதையைக் கேட்டு நிறைய நடிகைகள் அதில் நடிக்கவரவில்லை என்று அறிந்தேன். அந்தக் கதையை நான் கேட்டதுமே, எனக்கான படம் என்று தோன்றியது. அந்தப் படத்தின் வெற்றியால்தான் கதைசொல்ல பெங்களூருவுக்கு என்னைத் தேடி வருகிறார்கள். மகிழ்ச்சியாக இருக்கிறது.

பெங்களூரு வாழ்க்கை எப்படியிருக்கிறது?

பிறந்து வளர்ந்த ஊரில் வாழ்வது எப்போதுமே பாதுகாப்பான உணர்வைக் கொடுக்கும். இங்கே தமிழ் மக்கள் அதிகமாக வசிக்கிறார்கள். அவர்கள் அனைவருமே இனிமையானவர்கள் எனத் தோன்றும். பெங்களூருவில் ஷாப்பிங் செய்யவும் தியேட்டருக்குச் சென்று படம் பார்க்கவும் ரொம்பவே பிடிக்கும். இப்போதெல்லாம் அம்மா என்னை தனியாக ஷாப்பிங் அனுப்பிவிடுகிறார்.

மனிஷா யாதவ்
மனிஷா யாதவ்

யாருடைய இயக்கத்தில் யாருடன் நடிக்க விரும்புகிறீர்கள்?

மணிரத்னம் சார் இயக்கத்தில் சூர்யா சாருடன் நடிக்க விரும்புகிறேன். சமீபத்தில் ‘ஜெய் பீம்’ படத்தை 2 முறை பார்த்தேன். எங்களுடைய ‘வழக்கு எண் 18/9’ நாட்கள் நினைவுக்கு வந்துவிட்டன. சூர்யா சார் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் சினிமாவை எவ்வளவு நேசிக்கிறார். நானும் அப்படித்தான் சினிமாவை நேசிக்க விரும்புகிறேன்.

உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள என்ன செய்கிறீர்கள்?

சாப்பிடுவது, உறங்குவது போலவே உடற்பயிற்சியையும் அவசியமான ஒன்றாக மாற்றிக் கொண்டிருக்கிறேன். தினசரி 30 நிமிடம் ஃப்ளோர் எக்சர்சைஸ். 30 நிமிடம் யோகா. குறிப்பாக, பெல்விக் ஃப்ளோர் எக்சர்சைஸ் செய்கிறேன். யோகாவில் 25 சூரிய நமஸ்காரம், 25 சர்வாங்காசனம் செய்ததும் இடது வலது என 30 முறை மூச்சுப் பயிற்சி. பசி கடுமையாக இருக்கும். ஆனால், நம் உயரத்துக்கு ஏற்ற அளவுக்கு மட்டுமே சாப்பிடுவேன். பசியை சமாளிக்க முடியாது என்றால், இருக்கவே இருக்கு வெள்ளரிக்காய். அதை ஃபில்லராகச் சாப்பிடுவேன்.

படங்கள் உதவி: தீரன்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in