எதுவொன்றையும் தவறவிட விரும்பவில்லை..! - மானசா சௌத்ரி பேட்டி

மானசா சௌத்ரி
மானசா சௌத்ரி

மாடலிங் துறையிலிருந்து சினிமாவுக்கு வந்தவர் மானசா சௌத்ரி. 2022-ல் ஓடிடியில் வெளியான ‘எமோஜி’ தமிழ் வெப் சீரீஸில் இவர் நாயகியாக அறிமுகமானபோது, ‘யார்ரா... இந்த ஜென் நெக்ஸ்ட் பியூட்டி?’ என இளசுகளை கூகுளில் தேட வைத்தார். அப்படியே புரமோஷனாகி ரவிகாந்த் பெரும்பு இயக்கத்தில் தெலுங்கில் வெளியான ‘பபுள்கம்’ படத்தில் அறிமுகாகி அசத்தியிருக்கிறார்.

இந்தப் படத்தில் ரோஷன் கனகலாவுடன் இணைந்து ‘லிப்லாக்’ காட்சிகளில் மானசா காட்டியிருக்கும் தாராளம் காட்சித் துணுக்குகளாக இணையமெங்கும் வைரலாகிக் கிடக்கிறது. படம் வெளியாகி ஒரு மாதத்தைக் கடந்த பின்னும் தெலுங்கு ரசிகர்கள், ‘மானசா... மானசா’ எனப் புலம்பிக்கொண்டிருப்பதாக தகவல். சென்னையில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் சரளமாக தமிழ் பேசும் மானசா, காமதேனு டிஜிட்டலுக்காக அளித்த பிரத்யேகப் பேட்டி இது.

மானசா சௌத்ரி
மானசா சௌத்ரி

நடிக்க வரும் யாருமே முதலில் சினிமாவைத்தான் விரும்புவார்கள். நீங்கள் ‘வெப் சீரீஸ்’ தேர்ந்தெடுக்க என்ன காரணம்?

வாழ்க்கையில் நமது பாதை எது என முடிவு செய்த பிறகு வாய்ப்புக்காகக் காத்திருக்கிறோம். அப்போது, நல்ல வாய்ப்பு, மிக நல்ல வாய்ப்பு என இரண்டு சாய்ஸ்கள்தான் நம் முன்னே இருக்கும். என்னளவில் இரண்டில் எதுவொன்றையும் தவறவிட விரும்பவில்லை.

‘எமோஜி’ தொடரை அப்படித்தான் நல்ல வாய்ப்பாகப் பார்த்தேன். இதுவரை 5 மில்லியன் பேர் பார்த்திருக்கிறார்கள். மகத் ராகவேந்திரா ஹீரோ. அவருக்கும் எனக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக வந்ததால்தான் இந்த வெற்றி என்று தொடரின் இயக்குநர் சென்.எஸ்.ரங்கசாமி சொன்னார். முதல் முயற்சியிலேயே எனது உழைப்புக்குக் கிடைத்த வெற்றி இது.

டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொண்டு திரும்பிய என்சிசி மாணவி நீங்கள் என்று கேள்விப்பட்டோம்... உண்மையா?

ஆமாம்... அடிப்படையில் நான் ஒரு அத்தலட்! சிறுவயதிலிருந்தே ஸ்கேட்டிங் என்றால் உயிர். ஸ்கேட்டிங் ஷூ அணிந்து கொண்டதும் கால்களுக்குச் சிறகு முளைத்ததுபோல் காற்றில் பறப்பேன். பத்து வயதிலேயே மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் சாம்பியன் போட்டியில் வென்றேன். அந்த வெற்றிக்குக் கிடைத்த கைத்தட்டல்களும் பாராட்டுகளும் எனக்கு ஊக்கமும் உற்சாகமும் கொடுத்தது. அதுதான் என்னை பள்ளியில் எல்லா எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டியிலும் பங்கெடுக்க வைத்தது.

பபுள்கம் படத்தில்...
பபுள்கம் படத்தில்...

5-ம் வகுப்பில் ஆரம்பித்து கப்ஸ், புல்புல்ஸ், ஸ்கவுட்ஸ், கைட்ஸ், ஆர்எஸ்பி, என்எஸ்எஸ் மற்றும் என்சிசி என எந்த அமைப்பையும் நான் விடவில்லை. எல்லாவற்றிலும் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன். என்சிசி-யில் டிஎஸ்சி டெல்லி ரிட்டர்ன் கேடட்டாக, துப்பாக்கிச் சூடுதலில் தங்கப் பதக்கத்தைப் பெற்றேன். எதை எடுத்தாலும் என்னால் அதில் வெற்றிபெற முடியும் என்று காட்டினேன்.

எங்கே படித்தீர்கள்... சினிமாவுக்குள் எப்படி வந்தீர்கள்?

எத்திராஜ் மகளிர் கல்லூரியில் எம்ஏ ஆங்கில இலக்கியம் முடித்தேன். பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும்போதே மாடலிங் உலகில் நுழைந்தேன். அதில் கிடைத்த தன்னம்பிக்கை என்னை சினிமாவை நோக்கி நகர்த்தியது.

மானசா சௌத்ரி
மானசா சௌத்ரி

சினிமாவுக்காக நடனம் கற்றுக்கொண்டேன். ‘எமோஜி’ தொடருக்குப் பின் தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்த்தேன். ஏனோ வரவில்லை. அந்த சமயத்தில் தான் தெலுங்கு இயக்குநர் ரவிகாந்த் பெரும்புவின் அறிமுகம் கிடைத்தது.

அவர் ‘பபுள்கம்’ படத்தின் டெஸ்ட் ஷூட்டுக்கு வரச்சொன்னார். எனது புகைப்படங்கள், ஸ்கிரீன் டெஸ்ட் ஆகிவற்றைப் பார்த்த அவர். “நான் தேடிக்கொண்டிருந்த அந்தச் சுட்டிப் பெண் நீதான்” என்றார். ‘பபுள்கம்’ படம் இப்போது என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது. லட்சக்கணக்கான தெலுங்கு ரசிகர்களை முதல் படத்திலேயே பெற்றுவிட்டேன்.

மானசா சௌத்ரி
மானசா சௌத்ரி

‘எமோஜி’ மூலம் தமிழ் ரசிகர்கள் எனக்குக் கிடைத்திருந்தாலும், ‘பபுள்கம்’ படத்தின் வெற்றியைப் பார்த்துவிட்டு இப்போது தமிழ் சினிமாவிலிருந்து வரிசையாக அழைப்புகள் வருகின்றன. திரைக்கதைகளை வாசிக்கும்படியும் எனது இன்பாக்ஸை நிறைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

துப்பாக்கி சுடும் திறமை வேறு... கேமரா முன்னாள் நின்று நடிப்பது வேறு. நடிப்புத் திறனை மேம்படுத்திக்கொள்ளும் எண்ணம் இருக்கிறதா?

புதுச்சேரி ஆதிசக்தி தியேட்டர் நடத்திய நடிப்புப் பட்டறைகளில் தொடர்ந்து பங்கேற்று, எனது நடிப்புத் திறமையை வளர்த்துக்கொண்டேன். முதலில் தென்னிந்திய சினிமாவில் சாதிக்க வேண்டும். நான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் ஏற்கும் கதாபாத்திரங்களுக்கு ஒரு புதிய கண்ணோட்டத்தையும் தனித்துவமான பாணியையும் கொண்டு வரவேண்டும் என்று விரும்புகிறேன்.

மானசா சௌத்ரி
மானசா சௌத்ரி

குடும்பத்தினர் சப்போர்ட் எப்படி?

அப்பா, அம்மா, அண்ணன் அனைவருமே எனது சினிமா கனவுக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். அப்பா எக்ஸ்போர்ட் பிசினஸில் இருக்கிறார். அண்ணன் ஃபுட் டெக்னாலஜி தொழிலில் இருக்கிறார். எனது வழியில் அண்ணனும் சினிமாவுக்குள் வந்தாலும் ஆச்சரியமில்லை. ஆனால், நடிகராக அல்ல... திரைப்பட தயாரிப்பாளராக!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in