லாலேட்டன் கொடுத்த காம்ப்ளிமென்ட்..!

'பரோஸ்’ கோமல் ஷர்மா பரவசம்
கோமல் ஷர்மா
கோமல் ஷர்மா

‘சட்டப்படி குற்றம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கோமல் ஷர்மா. அதன்பிறகு ‘அமைதிப்படை 2’ படத்தில் சத்யராஜ் ஜோடியாக நடித்தார். தற்போது மோகன்லால் இயக்கி, தயாரித்து, நடிக்கும் ‘பரோஸ்’ பன்மொழிப் படத்தில் முக்கியக் கதாபாத்திரம் ஏற்றுள்ளார். தமிழில் சமுத்திரக்கனியுடன் ‘பப்ளிக்’ என்கிற படத்திலும் நடித்துவரும் கோமல் ஷர்மா காமதேனுவுக்காக அளித்த பிரத்யேகப் பேட்டி.

உங்களைக் கொஞ்சம் அறிமுகம் செய்துகொள்ளுங்கள்…

என்னுடைய பூர்விகம் ராஜஸ்தான். அப்பா ஏழு வயது சிறுவனாக இருக்கும்போதே அவரது பெற்றோருடன் இங்கே வந்து செட்டில் ஆகிவிட்டவர். நான் பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாமே சென்னைதான். இந்தியை எந்த அளவுக்குப் பேசுவேனோ, அதைவிட சிறப்பாக தமிழ் பேசுவேன். நானொரு தேசிய ‘ஸ்குவாஷ்’ விளையாட்டு வீராங்கனை. தடகளத்திலும் தடம் பதித்திருக்கிறேன். 21 கிலோ மீட்டர் மாரத்தான் ஓட்டங்களில், தென்னிந்திய அளவில் பலமுறை முதல் 25 வீரர்களில் ஒருத்தியாக வந்திருக்கிறேன். ஒரு இந்தித் திரைப்படம் உட்பட இதுவரை 14 படங்களில் நடித்து முடித்திருக்கிறேன்.

‘ஸ்குவாஷ்’ ஒரு பணக்கார விளையாட்டு என்பார்கள்! அதில் எந்த மட்டம் வரை சென்றீர்கள்?

ஒன்பது வயதில் ‘ஸ்குவாஷ்’ பயிற்சி பெறத் தொடங்கி 12 வயதிலிருந்து போட்டிகளில் கலந்துகொள்ள ஆரம்பித்தேன். 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான மாநில அளவிலான பல போட்டிகளில் தமிழ்நாட்டுக்கு தங்கம், வெள்ளிப் பதக்கங்களைப் பெற்றுக் கொடுத்திருக்கிறேன். அதனால் தமிழக ‘ஸ்குவாஷ்’ அணிக்கு கேப்டனாக இருக்கும் பொறுப்பு தேடி வந்தது. அதன்பிறகு, 19 வயதுக்கு உட்பட்ட பிரிவில் தேசிய அளவிலும் பல சாதனைகள் படைத்துள்ளேன். இந்த ‘ஸ்குவாஷ்’ விளையாட்டு ஒலிம்பிக்கில் இடம்பெறவில்லை. அதனால், இந்திய அளவில் விளையாண்டது போதும் என்கிற மனநிலை வந்துவிட்டதால் விளையாடுவதை 20 வயதில் நிறுத்திக்கொண்டேன்.

விளையாட்டிலிருந்து சினிமாவுக்கான கதவு எப்போது திறந்தது?

நான் இன்று சினிமாவில் ஒரு வெற்றிகரமான நடிகையாக இருப்பதற்கு பத்திரிகைகள்தான் காரணம். நான் பிஸியாக விளையாடிக்கொண்டிருந்தபோது எனது பேட்டிகளை வெளியிட்டு உற்சாகப்படுத்தினார்கள். என்னைப் பேட்டியெடுக்கும் பத்திரிகையாளர்கள், “நீங்கள் ஒரு மாடல், நடிகை போல இருக்கிறீர்கள்; ஏன் விளம்பரப் படங்கள், சினிமாவில் உங்கள் அதிர்ஷ்டத்தை முயற்சித்துப் பார்க்கக் கூடாது?” என்று கேட்பார்கள். அது எனக்கு மிகுந்த தன்னம்பிக்கையைக் கொடுத்தது.

பத்திரிகைகளில் வெளியான எனது பேட்டியையும், படங்களையும் பார்த்துவிட்டே விளம்பரப் பட வாய்ப்புகள் வந்தன. நான் ஃபிட்டாக இருப்பதைப் பார்த்து ‘சட்டப்படிக் குற்றம்’ படத்தில் நடிக்க வரும்படி எஸ்.ஏ.சந்திரசேகரன் சார் அழைத்தார். கதையும் எனது கதாபாத்திரத்தையும் கேட்டே அதில் நடித்தேன். சேகுவேராவைப் போன்ற சாயல் கொண்ட கேரக்டரில் அந்தப் படத்தில் சத்யராஜ் சார் நடித்திருந்தார்.

விளையாட்டுத் துறையிலிருந்து பேரும் புகழும் கிடைக்கக்கூடிய சினிமாவுக்குள் நுழைந்திருப்பது எப்படியிருக்கிறது?

விளையாட்டுத் துறையிலேயே எனக்குப் பெரிய அளவில் புகழ் கிடைத்துவிட்டது. சினிமாவில் கிடைக்கும் புகழோ ரசிகர்களாலும், மக்களாலும் ஆராதனைக்கு உரியதாக இருக்கிறது. இதனால் என்னைப் போன்றவர்களுக்கு பொறுப்புணர்வு அதிகமாகிவிடுகிறது. சினிமா வழியாகக் கிடைக்கும் புகழும் பணமும் எல்லோருக்கும் கிடைத்துவிடாது. அப்படியிருக்கும்போது, அதை அனுபவிக்கும் என்னைப்போன்ற நட்சத்திரங்கள் இந்த சமூகத்துக்கு உருப்படியாக பல நல்ல விஷயங்களைத் திரும்பச் செய்ய வேண்டும். நான் அப்படி பலவற்றில் என்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறேன்.

மற்றவர்களுக்கு நான் நல்ல முன்மாதிரியாக இருக்க விரும்புகிறேன். எனது புகழையும் எனது பணத்தில் ஒரு பகுதியையும் நல்ல காரியங்களுக்குப் பயன்படுத்த விரும்புகிறேன். அதேபோல், கேன்சர் விழிப்புணர்வு, சுகாதார விழிப்புணர்வு, ஊட்டச்சத்து குறைப்பாடு பற்றிய விழிப்புணர்வு என பலவற்றில் என்னைப் போன்றவர்கள் ஈடுபடும்போது அது நிறையப் பேரை எளிதில் சென்றடையும். இதை நன்றாகப் புரிந்துகொண்டிருப்பதால் அவற்றில் ஈடுபட்டு வருகிறேன். தொடர்ந்து ஈடுபடுவேன். அதில் எனக்கு ஆத்ம திருப்தி கிடைக்கிறது.

மோகன்லாலின் ‘பரோஸ்’ படத்தில் உங்களுக்கு என்ன கதாபாத்திரம்?

பரோஸ்தான் நாயகன். அவருடன் ஒரு குழந்தை கதாபாத்திரம் படம் முழுவதும் வருகிறது. இவர்களுடன் 9 முக்கிய கதாபாத்திரங்கள் படத்தில் இடம்பெற்றுள்ளன. லாலேட்டன் அந்த ஒன்பதில் ஒரு கதாபாத்திரத்தை என்னை அழைத்து ”நீங்கள்தான் இதற்குப் பொருத்தமாக இருப்பீர்கள்” என்று எனக்குக் கொடுத்திருக்கிறார். இது எவ்வளவு பெரிய அதிர்ஷ்டம். அவருடன் ஏற்கெனவே இரண்டு படங்களில் நடித்திருந்தேன். அப்போது என்னிடம் உள்ள டேலன்ட் என்ன என்பதை தெரிந்து வைத்து இந்தக் கதாபாத்திரத்தைக் கொடுத்துள்ளார்.

“உங்களுக்கு சர்வதேசத் தோற்றம் இருக்கிறது” என்கிற காம்ப்ளிமென்ட்டும் லாலேட்டனிடமிருந்து கிடைத்தது. 400 படங்களில் நடித்து சூப்பர் ஸ்டாராக இருக்கும் அவர் என்னைத் தேர்வு செய்தது எனக்கான அங்கீகாரம். ‘பரோஸ்’ படத்தில் இந்தியாவிலிருந்து, குறிப்பாக, நமது தமிழ்நாட்டிலிருந்து நடித்துள்ள ஒரே நடிகை நான் மட்டும்தான். இந்தப் படத்துக்கு லிடியன் நாதஸ்வரம் இசையமைக்கிறார் என்பது ஏற்கெனவே உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

தற்போது நடித்துக்கொண்டிருக்கும் தமிழ்ப் படங்கள்?

தற்போது அருணாசலம் வைத்தியநாதன் இயக்கும் ‘சாட் பூட் த்ரி’ படத்தில் வெங்கட் பிரபு சாருடன் நடிக்கிறேன். சமுத்திரக்கனி சாருடன் ‘பப்ளிக்’ படத்திலும் நடித்து வருகிறேன். இன்னும் சில கதைகள் கேட்டுகொண்டிருக்கிறேன். வந்தவரை லாபம் என்று எல்லவாற்றையும் ஏற்பதில்லை.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in