நானும் உருவ கேலியை எதிர்கொண்டிருக்கிறேன்!

‘காம்ப்ளெக்ஸ்’ கதாநாயகி இவானா பேட்டி
காம்ளெக்ஸ் படத்தில்...
காம்ளெக்ஸ் படத்தில்...Kowshik Vasudevan

பாலா இயக்கத்தில் வெளியான ‘நாச்சியார்’ படத்தின் மூலம் ‘கோட்டை அரசி’யாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் இவானா. மலையாள தேசத்தின் மகளான இவர், தற்போது பாலாவின் உதவியாளர் மந்த்ரா வீரபாண்டியன் இயக்கத்தில் ‘காம்ப்ளெக்ஸ்’ என்கிற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து ஜெயம் ரவியின் ‘கோமாளி’ படத்தின் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கு நாயகனாக நடிக்கும் படத்திலும் கதாநாயகியாக நடிக்கும் இவானாவிடம் காமதேனுவுக்காக உரையாடியதிலிருந்து...

‘நாச்சியார்’, ‘ஹீரோ’ படங்களுக்குப் பிறகு இரண்டு வருட இடைவெளி எடுத்துக் கொண்டுவிட்டீர்களே..?

இந்த இரண்டு வருடத்தில் கல்லூரிப் படிப்பையும் பார்த்துக்கொண்டு, ‘காம்ப்ளெக்ஸ்’, ‘லவ் டுடே’ என இரண்டு படங்களில் நடித்துவிட்டேன். ‘சினிமா வாய்ப்புகள் எப்போதுமே நிலையானது கிடையாது. அதனால் டிகிரியை முடித்துவிடு’ என்று அப்பா சொன்னார். அதனால், பி.காம்., முடித்து, தற்போது எம்.காம்., இறுதி வருடம் படித்துக்கொண்டிருக்கிறேன்.

இவானா
இவானா

‘காம்ப்ளெக்ஸ்’ படத்தில் என்ன கேரக்டர்?

‘நாச்சியார்’ படத்தில் நடித்தபோது அந்தப் படத்தின் அசோசியேட் டைரக்டர் மந்திரா வீரபாண்டியன் அண்ணாதான் எனக்கு தமிழ் சொல்லிக்கொடுத்தார். அவர் திருவல்லாவைச் சேர்ந்தவர். நன்றாக மலையாளம் பேசுவார். அதனால், எனது அம்மா - அப்பாவுக்கு நல்ல ஃபிரெண்டாக ஆகிவிட்டார். அவர்தான் ‘காம்ப்ளெக்ஸ்’ படத்தின் இயக்குநர்.

கரோனா உச்சத்தில், போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தபோது ரிஸ்க் எடுத்து மந்திரா அண்ணா எங்களைப் பார்க்க கேரளத்துக்கு வந்துவிட்டார். தன்னுடைய முதல் படத்தில் எனக்கு முக்கியமான கேரக்டர் இருக்கிறது என்று சொன்னதும் உடனே அம்மாவும் அப்பாவும் என்ன கதை என்றுகூட கேட்காமல் அவருக்காக ஒப்புக்கொண்டார்கள். அப்படியொரு அற்புதமான கேரக்டர் அவர். நல்ல கிரியேர்ட்டர். ‘காம்ளெக்ஸ்’ படத்தில் நான் எம்.எஸ்.பாஸ்கர் சாரின் மகளாக வருகிறேன். படத்தின் கதைப்படி நானும் எனது சகோதரனும் இரட்டைப் பிறவிகள். அவர் என்னைவிட உயரம் குறைவானவராகப் பிறந்துவிடுவார். அதனால் அவர் சந்திக்கும் ’உருவ கேலி’யும் அதிலிருந்து அவர் எப்படி மீண்டு வருகிறார் என்பதும்தான் கதை.

Kowshik Vasudevan

நான் எனது சகோதரனுக்கும் வீட்டுக்கும் சப்போர்டிவாக இருக்கும் கேரக்டர். உண்மையில் நிஜ வாழ்க்கையில் நானும் எனது சகோதரனும் இரட்டைப் பிறவிகள்தான். 10 வயதாக இருக்கும்போது நாங்கள் இருவருமே உயரம் குறைவாக இருந்தோம். அதனால் இருவருமே உருவ கேலிக்கு ஆளாகியிருக்கிறோம். இதுவொரு கமர்ஷியல் படம்தான். ஆனால், அதில் உருவ கேலியை மந்திரா அண்ணா சுவாரசியமாகக் கையாண்டிருக்கிறார்.

சினிமாவுக்கு எந்தப் பின்னணியிலிருந்து வந்தீர்கள்... தமிழில் அறிமுகப் படமே பாலா இயக்கத்தில் எப்படி அமைந்தது?

எனது சொந்த ஊர், கோட்டயம் மாவட்டத்தில், மடப்பள்ளி தாலுக்காவில் உள்ள நாலுகோடி என்கிற சின்ன கிராமம். சினிமாவுக்கும் எங்கள் குடும்பத்துக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. அம்மா, அப்பாவுடன் தியேட்டருக்குப் போய் படம் பார்ப்பது மட்டும்தான் சினிமாவுக்கும் எனக்குமான தொடர்பு. 2012-ல் ஜானி ஆண்டனி இயக்கத்தில், பிருத்விராஜ் ஹீரோவாக நடித்த ‘மாஸ்டர்ஸ்’ படத்தில் 12 வயதில் நடித்தேன். இயக்குநர் ஜானி ஆண்டனி எனது பெரியப்பாவின் நண்பர் என்று எங்களுக்குத் தெரியாது. அவர் ஒருநாள் வந்து ‘படத்தில் ஒரு சிறுமி கேரக்டர் இருக்கிறது அலீனாவை நடிக்க வை’ என்று சொன்னார். நான் சிறுமியாக இருந்தாலும் அப்பா அப்போது எனது விருப்பத்தைக் கேட்டார். நான் நடிக்கிறேன் என்றதும்தான் ஓகே சொன்னார்.

அதன்பிறகு 4 வருடம் கழித்து பிஜு மேனனும் ஆஷா சரத்தும் நடித்த ‘அனுராக கரிக்கின் வெள்ளம்’ படத்தில் அவர்களுடைய மகளாக நடித்தேன். அதில் எனக்கு முக்கியமான ரோல். அந்தப் படம் பற்றி மலையாள நாளிதழில் வெளியான எனது புகைப்படத்தைப் பார்த்துவிட்டு பாலா சார், ‘நாச்சியார்’ படத்தின் ஆடிசனுக்கு அழைத்தார். அப்படித்தான் பாலா சார் இயக்கத்தில் அறிமுகமானேன்.

சிவகார்த்திகேயன் அண்ணாவின் ‘ஹீரோ’ படத்தில் நடித்து, அந்தப் படம் வெளியான அடுத்த நாளே என்னை ஒரு லட்சம் பேர் ட்விட்டரில் ஃபாலோ செய்யத் தொடங்கினார்கள். அந்தப் படத்தில் நான் நடித்திருந்த கேரக்டர் பெயராலேயே என்னை ‘மதி... மதி...’ என்று கூப்பிடத் தொடங்கிவிட்டார்கள்.

சின்னப் பெண் என்பதால் பாலா உங்களை மிரட்டி வேலை வாங்கினாரா?

இல்லவே இல்லை. ‘பாலா படமா? நன்றாக சாப்பிட்டு உடம்பை தேற்றிக்கொண்டு போ... அப்போதான் அடி தாங்குவாய்’ என்று நண்பர்கள், உறவினர்கள் சைடிலிருந்து பயமுறுத்தினார்கள். ஆனால், அது எதுவும் உண்மையில்லை. பாலா சார் கொஞ்சம் கோபப்படுவார் என்பதை படப்பிடிப்பில் பார்த்தேன். ஆனால், அவர் எனக்கு அவ்வளவு கேர் கொடுத்தார்.

Kowshik Vasudevan

எனக்கு தமிழ் சொல்லிக்கொடுக்க தன்னுடைய உதவியாளரை அமர்த்தினார். என்னை அதட்டி சத்தம் கூடப்போடவில்லை. அவ்வளவு அழகாக சொல்லிக்கொடுத்து வேலை வாங்கினார். இப்போது நான் இவ்வளவு நன்றாகத் தமிழ் பேசுகிறேன் என்றால் அதற்கு பாலா சார்தான் காரணம். அதேபோல், நான் ‘கோட்டை அரசி’யாக நன்றாக நடித்தேன் என்று தமிழ் பத்திரிகை, ஊடகங்களில் என்னை எல்லோரும் பாராட்டி எழுதியிருந்தார்கள். இதையெல்லாம் நான் எதிர்பார்க்கவில்லை.

‘கோமாளி’ பட இயக்குநருடன் ஜோடியாக நடித்த அனுபவம் எப்படியிருந்தது?

நல்ல கதையும் கதாபாத்திரமும் எனக்கு அடுத்தடுத்து அமைவது அதிர்ஷ்டம். ‘கோமாளி’ படத்தின் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ள ‘லவ் டுடே’ படத்தில் ‘நெக்ஸ்ட் டோர் கேர்ள்’ ஆக வருகிறேன். பிரதீப் நல்ல நடிகர். இந்தக் காலத்தின் விளையாட்டுக் காதலை நகைச்சுவை கலந்து கொடுத்திருக்கிறார்.

அடுத்து..?

ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக மீண்டும் ஒரு படத்தில் நடிக்கிறேன். விரைவில் அறிவிப்பு வரும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in