நடிப்பு மாஸ்டர் தனுஷ்!

மனம் திறக்கும் ‘மாறன்’ மாளவிகா மோகனன்
நடிப்பு மாஸ்டர் தனுஷ்!
மாளவிகா மோகனன்

ரஜினியுடன் ‘பேட்ட’, விஜய்யுடன் ‘மாஸ்டர்’, தற்போது தனுஷுடன் ‘மாறன்’ என தமிழில் மூன்று படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து ரசிகர்களை கவனிக்க வைத்திருக்கிறார் மாளவிகா மோகனன். மலையாளம் மற்றும் இந்தி படவுலகில் வெற்றிகரமான ஒளிப்பதிவாளராக வலம் வரும் மோகனனின் மகள். ‘மாறன்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகியிருக்கும் நிலையில், காமதேனுவுக்காக மாளவிகா அளித்த பிரத்யேகப் பேட்டி.

இத்தனை குறுகிய காலத்தில் முன்னணிக் கதாநாயகர்களுடன் நடிக்கும் வாய்ப்புகள் எப்படி அமைந்தன?

இரானிய திரைப்பட இயக்குநர் மஜித் மஜிதி இயக்கிய ‘பியாண்ட் த கிளவுட்ஸ்’ படத்தில் நான் ‘தாரா’ என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். அதில் எனது நடிப்பைப் பார்த்துவிட்டுத்தான் ‘பேட்ட’ படத்தில் வாய்ப்புக்கொடுத்தார் கார்த்திக் சுப்பாராஜ். வயது வித்தியாசம் காரணமாக ரஜினி சாருக்கு தங்கையாக ‘பூங்கொடி’ கேரக்டரில் நடித்தேன். ரஜினி சார் என்பதால் சின்ன கதாபாத்திரம் எனறாலும் என் மீது நிறைய கவனம் கிடைக்கும் என்றே ஒப்புக்கொண்டேன். அப்படிக் கிடைத்த கவனம்தான் ‘மாஸ்டர்’ மற்றும் ‘மாறன்’ படங்கள். தற்போது தமிழில் இன்னும் இரண்டு படங்களை ஒப்புக்கொள்ள விருக்கிறேன். தெலுங்கில் முன்னணி ஹீரோவுக்கு ஜோடியாகவும் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறேன். இதுபற்றி எல்லாம் சீக்கிரமே தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து அறிவிப்புகள் வரும்.

உங்களது இன்ஸ்டா பதிவுகளை வைத்து, நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை அறியமுடியாது எனத் தெரிகிறது. உங்களைப் பற்றி வாசகர்களுக்கு கொஞ்சம் சொல்லிவிடுங்கள்...

குடும்பம் தான் எனக்கு எல்லாம். அம்மா, அச்சன், என்னைவிட ஐந்து வயது குறைவான எனது தம்பி ஆகியோருடன் வசிக்கிறேன். அம்மா பக்கத்து ஊருக்குச் சென்றுவிட்டால்கூட நான் ஹோம் சிக் ஆகிவிடுவேன். அந்த அளவுக்கு நான் அம்மா செல்லம். சினிமா உலகம் ஏற்ற, இறக்கங்கள் நிறைந்தது. அதுபோன்ற ஒரு துறையில் ஈடுபடுவதற்கு குடும்பத்தின் ஆதரவு மிகவும் முக்கியம். குடும்பம் மட்டும்தான் நம்மை எல்லா நிலையிலும் சப்போர்ட் செய்யும். மற்றபடி சாகசங்கள் செய்ய எனக்குப் பிடிக்கும். நிறையப் பயணம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். புதுப் புதுக் கலாச்சாரங்கள் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும், புதிய நண்பர்களை உருவாக்கிக்கொள்ளவேண்டும் என்று நினைக்கிறேன். இதெல்லாம் சினிமாவில் நமது நடிப்பை மேம்ப்படுத்திக்கொள்ள பெரிதும் உதவும் என்பது எனது நம்பிக்கை.

திரையுலகில் பிரபலமாக இருப்பவர்களின் வாரிசுகள் நடிக்க வருவதன் மூலம், முதல் தலைமுறையாக நடிக்க வரும் புதுமுகங்களின் இடம் பறிபோகிறது அல்லவா?

தொழில்முறை நெப்போட்டிசம் என்பது எந்தத் துறையில்தான் இல்லை என்று நினைக்கிறீர்கள். டாக்டராக இருப்பவர்கள், தங்களது பிள்ளைகளை டாக்டர் ஆக்கிவிடத் துடிக்கிறார்கள். அரசியலில் வாரிசுகள் இல்லாத மாநிலம் என்று இந்தியாவில் ஒன்றிரண்டு இருக்கலாம். எம்.பி.ஏ., படித்திருந்தாலும், ஐஐடியில் படித்தாலுமேகூட அப்பாவின் அல்லது அம்மாவின் பிஸினஸை செய்யாதவர்கள் வெகு குறைவு. சினிமா என்று வரும்போது உள்ளே நுழைய ஒரு சிறு பாதை திறந்திருக்கும் அவ்வளவுதான். மற்றபடி நீங்கள்தான் அங்கே சர்க்கஸ் கலைஞராக இருப்பீர்கள். திறமை இருந்தால் மட்டுமே கைத்தட்டல் விழும்.

அப்பா வழியில் ஒளிப்பதிவு மற்றும் புகைப்படக் கலையில் சாதிக்க வேண்டும் என்றெல்லாம் நினைக்கவில்லையா?

புகைப்படக் கலையில் நன்கு பயிற்சி பெற்றிருக்கிறேன். ‘வைல்ட் போட்டோகிராபி’யிலும் எனது ஆர்வத்தைச் செலுத்தியிருக்கிறேன். நேரம் அமையும்போது அதைத் தொடர வேண்டும் என்கிற எண்ணம் இருக்கிறது. அதற்கு நேரமும் காத்திருத்தலும் அவசியம். ஒளிப்பதிவு குறித்து அப்பா நிறையவே சொல்லிக்கொடுப்பார். ஆனால், தொழில்முறை ஒளிப்பதிவாளர் ஆகும் எண்ணம் இல்லை. ஒருவேளை, நிறையப் படங்களில் நடித்து முடித்தபிறகு படங்களை இயக்கும் எண்ணம் வரலாம்.

’மாறன்’ படத்தில் தனுஷுடன் நடித்த அனுபவம் எப்படியிருந்தது?

நல்ல நகைச்சுவை உணர்வு கொண்டவர். ஓபன் ஹார்ட்டெட். ஹாலிவுட் வரை சென்றுவிட்ட ஒரு வெற்றிகரமான இண்டியன் ஸ்டார். தன்னுடன் நடிக்கும் சக நடிகர்களும் சிறப்பாக நடிக்கவேண்டும் என்பதற்காக நடிப்பு மற்றும் டயலாக் டெலிவரி சொல்லிக்கொடுப்பார். எங்களுடன் ஒத்திகையில் ஈடுபடுவார். படம் முழுவதும் ஒரு நடிப்பு மாஸ்டர் கிளாஸில் கலந்துகொண்டதுபோல் ஒரு அனுபவம். ‘மாறன்’ படத்தில் போட்டோ ஜர்னலிஸ்டாக நடித்துள்ளேன். மாஸ் கம்யூனிகேஷன் முடித்த பட்டதாரி நான். போட்டோகிராபியும் தெரியும் என்பதால் எனது கேரக்டரைச் செய்வது எளிதாக இருந்தது.

தமிழில் இதுவரை இணைந்து நடித்த ஹீரோக்களில் யாருடன் மீண்டும் நடிக்க விரும்புகிறீர்கள்?

ரஜினி சாருடன் நடிக்க விரும்புகிறேன். அது அவருக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்பது இல்லை. ‘பேட்ட’ படத்தில் நடித்தபோது படப்பிடிப்பு இடைவேளையில அவரிடம் நிறையப் பேச வேண்டும் கேட்க வேண்டும் என்று அருகில் செல்வேன். அன்பாக, “சொல்றா கண்ணா...” என்பார். அத்தோடு எனக்கு எல்லாம் மறந்து போய்விடும். நான் சிறுவயது முதலே யோகா செய்து வருகிறேன். 'க்ரியா யோகா' பற்றி ஒருமுறை ரஜினி சாரிடம் கேட்டேன். அவ்வளவு அருமையாக, ஒரு தேர்ந்த யோகா மாஸ்டரைப்போல சொல்லிக்கொடுத்தார். அவரைச் சுற்றி எப்போதும் ஒரு ஆரா எனர்ஜி இருப்பதாக உணர்கிறேன்.

உங்களுடைய இன்ஸ்டாகிராமில் பல சமயங்களில் கிளாமர் படங்களை வெளியிட்டு விடுகிறீர்களே… வீட்டில் கண்டிக்க மாட்டார்களா?

கண்டிக்காமலா… ஆனால், நான் இப்போதுதானே இதுபோன்ற படங்களைப் பதிவிட முடியும். பாட்டி ஆனபிறகு பதிவிட்டால் நன்றாக இருக்காதே..!

Related Stories

No stories found.