பெண் நடிகர்களுக்கு சசிகுமார் சார் தரும் கேர்..!

- நெகிழும் ‘நான் மிருகமாய் மாற’ ஹரிப்ரியா
பெண் நடிகர்களுக்கு சசிகுமார் சார் தரும் கேர்..!

2010-ல் வெளியான, ‘கனகவேல் காக்க’ படத்தின் மூலம் தமிழுக்கு தரிசனம் தந்தவர் ஹரிப்ரியா. கன்னட சினிமாவில் புதிது புதிதாக கதாநாயகிகள் வந்துகொண்டே இருந்தாலும் அங்கே ஆண்டுக்கு ஐந்து படங்களில் கதாநாயகியாக நடித்து கொண்டிருக்கும் ஹரிப்ரியாவை ‘சேண்டல்வுட் டார்லிங்’ என்று அழைக்கிறார்கள். அட்டகாசமான நடிப்பு, அளவான கிளாமர் என கலக்கிவரும் இவர், அறிமுகப்படத்துக்குப் பின் ‘வல்லக்கோட்டை’, ‘முரண்’, ‘வாராயோ வெண்ணிலாவே’ ஆகிய படங்களில் நடித்திருந்தார். 5 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு தற்போது சசிகுமாருக்குச் ஜோடியாக ‘நான் மிருகமாய் மாற’ படத்தில் நடித்திருக்கிறார். அந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்புக்காக சென்னை வந்திருந்த அவரிடம் காமதேனுவுக்காக உரையாடியதிலிருந்து ஒரு பகுதி...

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழுக்கு மீண்டும் வந்திருக்கிறீர்கள்... எப்படிச் சாத்தியமானது இந்த மறு பிரவேசம்?

ஜெயதீரா சார் இயக்கத்தில் நான் கதாநாயகியாக நடித்து வெளியான ‘பெல் பாட்டம்’ என்கிற படம் கன்னடத்தில் செம்ம ஹிட். ஆந்திராவிலும் நன்றாகப் போனது. இப்போது கன்னடப் படங்கள் வரிசையாக தமிழ்நாட்டில் வெளியாவது போன்ற சூழல் 2019-ல் இல்லை. இருந்திருந்தால் அதையும் தமிழில் டப் செய்து வெளியிட்டிருப்பார்கள். அந்தப் படத்தைப் பார்த்த இயக்குநர் சத்ய சிவாதான் ‘நான் மிருகமாய் மாற’ படத்துக்கு நீங்கள்தான் வேண்டும் என்று விரும்பி அழைத்தார்.

இன்னொரு ரகசியமும் சொல்கிறேன். ‘பெல் பாட்டம்’ படத்தை சத்ய சிவாதான் தமிழில் ரீமேக் செய்திருக்கிறார். படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை என நினைக்கிறேன். அப்படித்தான் தமிழ் ரசிகர்களை மீண்டும் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. தமிழுக்கு மீண்டும் வந்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தப் படம் கன்னடத்திலும் டப் செய்யப்பட்டு வெளியாகும் என எதிர்பார்க்கிறேன்.

‘பெல் பாட்டம்’ படத்தின் இயக்குநர் ஜெயதீரா இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘பனாரஸ்’ திரைப்படம் ஒரு பான் இந்திய படமாக உருவாகியிருக்கிறதே..?

ஆமாம்! அந்தப் படத்தின் டீசர் வெளியீட்டுக்கு ஜெயதீரா சார் அழைத்திருந்தார். அப்போது படப்பிடிப்பில் இருந்ததால் போகமுடியவில்லை. ஜெயதீரா சாருக்கு என் வாழ்த்துகள்.

‘நான் மிருகமாய் மாற’ படத்தில் உங்களுடைய கதாபாத்திரம் என்ன?

இந்தப் படத்தை தயாரித்துள்ள செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் ‘வல்லக்கோட்டை’ படத்தில் ஏற்கெனவே கதாநாயகியாக நடித்திருக்கிறேன். நல்ல நிறுவனம். சத்ய சிவா சொன்ன கதை நன்றாக இருந்ததால் உடனடியாக ஒப்புக்கொண்டேன். படத்தில் நான் ஆனந்தி என்கிற கதாபாத்திரத்தில், கணவனையும் குழந்தையையும் அக்கறையுடன் பாதுகாக்கும் ஒரு யதார்த்தமான ஹோம் மேக்கராக நடித்துள்ளேன். இதுவொரு ஃபேமிலி த்ரில்லர் டிராமா.

எனது கணவராக சசிகுமார் சார் நடித்துள்ளார். நடிகர் மட்டுமல்லாது இயக்குநராகவும் இருப்பதால் அவரிடமிருந்து நிறையக் கற்றுக்கொண்டேன். குறிப்பாக, பெண் நடிகர்களுக்கு அவர் தரும் கேர் என்னைப் பரவசப்படுத்தியது. நிஜவாழ்க்கையில் இப்போது அவரும் ஒரு அப்பா என்பதை அறிந்து அவரை வாழ்த்தினேன். படத்தில், அவர் சினிமாவில் பணிபுரியும் சவுண்ட் இன்ஜினியராக வருகிறார். தானுண்டு தனது வேலையுண்டு என இருக்கும் அவருக்கு வரும் பிரச்சினைக்கு நான் எந்த அளவுக்கு உறுதுணையாக இருக்கிறேன் என்பதுதான் எனது கேரக்டர். படத்தில் பாடல் கிடையாது. அடுத்து என்ன நடக்கும் என எதிர்பார்க்க வைக்கும்.

படத்தில் வன்முறை சற்று அதிகமாக இருப்பதை இயக்குநரே ஒப்புக்கொண்டிருக்கிறார்… படப்பிடிப்பில் அது சார்ந்து மறக்கமுடியாத அனுபவம் எதேனும் உண்டா?

சசி சார் கேரக்டரும் சரி, எனது கேரக்டரும் சரி... கணவன் மனைவியாக அதிகமாகப் பேசிக்கொள்ள மாட்டோம். பார்வை மற்றும் எக்ஸ்பிரஷன் வழியாகத்தான் பேசிக்கொள்வோம். அந்த அளவுக்கு புரிதல் கொண்ட தம்பதியாகப் படத்தில் வருகிறோம். இவ்வளவு அழகாகவும் அமைதியாகவும் போகும் குடும்பத்தில் வன்முறை எப்படி நுழைகிறது என்பதுதான் கதை.

உடம்பு முழவதும், உடை முழுவதும் ரத்தம் தெறித்து பார்க்கவே பயங்கரமாக இருக்கும் விதமாக சசி சாரும் நானும் இருக்கும் காட்சியை இயக்குநர் படமாக்கினார். அந்தக் காட்சி படமான அன்று ஹோலி பண்டிகை. படப்பிடிப்புக்காக கொண்டு வந்திருந்த ‘சினிமா ரத்த’த்தை எடுத்து சசிகுமார் சார் எனக்குப் பூசிவிட்டு விளையாட, நான் அவருக்குப் பூசிவிட்டேன். சினிமா ரத்தம் ஹொலிப் பண்டிகை கலர் தண்ணிராக மாறி செட்டே கலகலப்பானது.

Mu.BASKAR

15 வருடங்களாக தொடர்ந்து கதாநாயகியாக நடித்துகொண்டிருப்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறீர்களா?

நீங்கள் தரும் பாராட்டுக்கு நன்றி. 16 வயதில் பள்ளியிறுதி வகுப்பு படித்துகொண்டிருக்கும்போது எனது நடனத்தைப் பார்த்துவிட்டு என்னை சினிமாவுக்கு நடிக்க அழைத்தார்கள். படிப்பையும் விடாமல் இன்னும் கதாநாயகியாக பிஸியாக நடித்துக்கொண்டிருப்பதில் நான் அதிர்ஷ்டம் செய்தவள் என்று நினைக்கிறேன். ஏனென்றால், கமர்ஷியல் கதாநாயகி, காக்கிச்சட்டை அணிந்த போலீஸ் அதிகாரி, கால் கேர்ள் தொடங்கி சரித்திரக் கதாபாத்திரம் வரை இந்த 15 வருடங்களில் நான் கேட்காமலேயே சிறந்த கேரக்டர்கள் எனக்குக் கிடைத்திருக்கின்றன. குறைந்தது இன்னும் பத்து வருடங்களுக்காவது கதாநாயகியாக நடிப்பேன் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

ஒன்றுக்குப் பல நாய்களைச் செல்லப் பிராணிகளாக வளர்க்கிறீர்கள் போலிருக்கிறதே..?

ஆமாம்! எந்த எதிர்பார்ப்பும் இல்லாத அன்பை அவற்றிடமிருந்து பெறலாம். ஆனால், நாம் அவற்றுக்கு அன்பு காட்டினால்தான் அவற்றை அவற்றிடமிருந்தும் திரும்பப் பெறமுடியும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in