எதற்காக இந்த ரிஸ்க் என்று பலரும் கேட்டார்கள்!
கௌரி ஜி.கிஷன்

எதற்காக இந்த ரிஸ்க் என்று பலரும் கேட்டார்கள்!

‘மகிழினி’ பற்றி மனம் திறக்கும் கௌரி ஜி.கிஷன்

“ஒரே படம்.. ஓஹோன்னு புகழ்” என்றால் ‘96’ படத்தின் கௌரி ஜி.கிஷனுக்கு கச்சிதமாகப் பொருந்தும். அந்தப் படத்தில், பள்ளிப் பருவத்தின் ஜானுவாக நடித்து, த்ரிஷாவை விட அதிகம் பேசப்பட்டார். தற்போது, தனது தாய்மொழியான மலையாளத்தில் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு என பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். தன்பாலின ஈர்ப்பாளர்களை அங்கீகரிக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் ‘மகிழினி’ இசைக் காணொலியில் நடித்திருக்கும் கௌரி, அதை அறிமுகப்படுத்த சென்னை வந்திருந்தார். அப்போது காமதேனு மின்னிதழுக்காக அவர் அளித்த சிறப்புப் பேட்டி இது.

உங்களை இன்னும் பள்ளி, கல்லூரி மாணவியாகவே தமிழ் சினிமா பார்க்கிறது இல்லையா?

அதில் தவறில்லை. இன்னும் சின்னப் பெண் போன்ற தோற்றமே எனக்கு இருப்பதாக நினைக்கிறார்கள். நான் ‘இன்னொசென்ட்’ லுக்கில் இருப்பதாகச் சொல்கிறார்கள். அந்தத் தோற்றதுக்கு ஏற்ற கதாபாத்திரங்களையே எனக்குத் தர விரும்புகிறார்கள். மாஸ்டரிலும் கர்ணனிலும் அப்படித்தான் எனக்கு கேரக்டர்கள் அமைந்தன. இப்போது கொஞ்சம் பெரிய பெண்ணாக ஆகிவிட்டதாக நினைகிறேன். தற்போது, மலையாளம், தெலுங்கு, தமிழ் ஆகிய 3 மொழிகளிலும் தலா 1 படத்தில் கதாநாயகியாக நடித்து முடித்திருக்கிறேன்.

கேரளத்திலிருந்து தமிழ் சினிமாவுக்கு வரும் பெண்கள் பேசும் தமிழில் மலையாள வாசமே அதிகமாக இருக்கும். நீங்கள் எப்படி இவ்வளவு தெளிவாகப் பேசுகிறீர்கள்?

ஆறாம் முதல் 12-ம் வகுப்பு வரை சென்னையில் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் படித்தேன். தோழிகள், தோழர்கள் அனைவரும் தமிழ்ப் பிள்ளைகள். அதனால், நன்றாகத் தமிழ் பேசக் கற்றுகொண்டேன். பிறகு பெங்களூரு கிறிஸ்ட் கல்லூரியில் ஜர்னலிசம், சைக்காலஜி மற்றும் ஆங்கில இலக்கியம் கொண்ட ‘ட்ரிபிள் மேஜர்’ டிகிரியை முடித்தேன்.

கிறிஸ்ட் கல்லூரியைப் பொறுத்தவரை சென்னையிலிருந்து வந்து படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகம். அங்கே வளாகத்தின் உள்ளே ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்று கல்லூரி கண்டிப்பு காட்டினாலும், தனிப்பட்ட விஷயங்களை தமிழில் பேசிக்கொள்வதுதான் பிடிக்கும். பிறகு ‘96’ படத்தில் நடிக்கத் தேர்வானதும், அந்த டீமில் இயக்குநர் பிரேம் அண்ணாவும் உதவி இயக்குநர்களும் எனக்கு வசனம் சொல்லிக்கொடுத்தார்கள். அப்போது என்னுடைய தமிழ் உச்சரிப்பை நிறையவே சரி செய்தார்கள். இப்போது தமிழ் எழுதப் படிக்க கற்று வருகிறேன். தமிழை இப்போது எழுத்துக் கூட்டிப் படிக்கத் தெரியும்.

சினிமாவுக்குள் எப்படி வந்தீர்கள்?

நடனம், இசை இரண்டிலும் மிகுந்த ஆர்வம் உண்டு. ஆனால், சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் எனக்கு இருந்ததில்லை. ஜர்னலிசம் முடித்ததும் சமூக அவலங்கள் குறித்து ஃபீல்ட் ரிசர்ச் செய்து ஒரு வெற்றிகரமான காலம் ரைட்டர் ஆகவேண்டும் என்பதுதான் எனது கனவாக இருந்தது. கல்லூரியில் முதலாண்டு படித்தபோது ‘96’ படத்தின் ஆடிசனுக்கு அழைத்தார்கள். அதில் தேர்வாகி, அந்தப் படத்தில் நடித்து, அதற்கு கிடைத்த வெற்றியால், இப்போது சினிமா முழுமையாக என்னை எடுத்துக் கொண்டிருக்கிறது.

சினிமாவும் ஊடகத் துறையின் ஒரு பிரிவே என்று எடுத்துக்கொண்டிருக்கிறேன். ஏனென்றால், நான் அடிப்படையில் ஒரு வாசகி. சிறுவயது முதல், ஆங்கில, இந்திக் கதைப் புத்தகங்களை அப்பாவும் அம்மாவும் போட்டிப்போட்டு எனக்கு வாங்கிக்கொடுத்து தினசரி வாசிக்கும்படி பழக்கப்படுத்தினார்கள். இன்றைக்கும் 1 மணி நேரமாவது வாசித்துவிட்டுத்தான் தூங்குவேன். எனக்கு வார்த்தைகள் என்றால் அவ்வளவு பிடிக்கும். அவற்றை ஆள வேண்டும் என்பது என் கனவுகளில் ஒன்று.

தன்பாலின ஈர்ப்பாளராக ‘மகிழினி’ இசைக் காணொலியில் துணிந்து நடிக்கக் காரணம், ஒரு இதழியல் மாணவி என்பதால்தானா?

அப்படிச் சொல்லமுடியாது. அந்தப் படிப்பின் வழியாக சமூகத்தை ஆழமாகப் புரிந்துகொள்ளமுடிந்தது. அதனால் கிடைத்திருக்கும் தெளிவு காரணமாக செகண்ட் தாட் இல்லாமல், ‘மகிழினி’யை இயக்கிய பாலசுப்ரமணியம் சொன்னதுமே ஒப்புக்கொண்டேன். நான் மட்டுமல்ல, அனகாவும் வளர்ந்து வரும் ஒரு நடிகைதான். “சினிமாவில் உங்கள் கேரியரின் தொடக்கத்தில் இருக்கிறீர்கள்... எதற்காக இந்த ரிஸ்க்?” என்று பலரும் எங்கள் இருவரிடமுமே கேட்டனர்.

எங்களுக்கு முன்னர் பல நடிகைகளிடம் கேட்டபோது எடுத்ததுமே மறுத்திருக்கிறார்கள். அது அவர்களுடைய முடிவு. தன்பாலின ஈர்ப்பு என்பது ஒரு நேச்சுரல் ஃபினாமினா. இயற்கையான ஒன்றைச் சமூகம் மனத் தடங்கல் இன்றி ஏற்கவேண்டும். அதற்கு ‘மகிழினி’ மாதிரியான ஐ ஓப்பனர் முயற்சிகள் மாஸ் மீடியாவில் அதிகம் தேவை.

கோவிந்த் வசந்தா மாதிரியான ஒரு முன்னணி இசையமைப்பாளரின் இசையில், மதன் கார்க்கியின் வரிகளில் மிகச்சிறந்த படைப்பாக வந்திருப்பதுடன், எங்கள் இருவருடைய நடனத் திறமையை வெளிப்படுத்தும் களமாகவும் ‘தமிழினி’ இசைக் காணொலி அமைந்துவிட்டது.

தற்போது தமிழில் என்னென்ன படங்களில் நடித்து வருகிறீர்கள்?

ஜெகன் விஜயமுத்து இயக்கும் படத்தில் நானும் வினோத் கிஷனும் நாயகன் - நாயகியாக நடித்திருக்கிறோம். ரோகிணி மேடம் முக்கிய கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார். இது ஒரு சோதனை முயற்சி படம். இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருகின்றன.

அடுத்து தமிழ் எழுத்தாளர் சு.சமுத்திரம் எழுதிய ‘ஒரு கோட்டுக்கு வெளியே’ என்கிற நாவலை, அந்த நாவலின் கதாநாயகியின் பெயரான ‘உலகம்மை’ என்கிற தலைப்பில் பீரியட் பிலிமாக இயக்கிவருகிறார், பாரதிராஜாவின் உதவியாளர் விஜய் பிரகாஷ். அதில், நான் தான் கதாநாயகி. பாதிப் படம் முடிந்துள்ளது. இதுதவிர, கிருத்திகா உதயநிதி மேடம் இயக்கும் வெப் சீரிஸில் காளிதாஸ் ஜெயராமுடன் நடிக்கத் தொடங்கியிருக்கிறேன்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in