காலம் என்னை சினிமாவுக்கானவள் ஆக்கிவிட்டது!

‘தீக்குள் விரலை விட்டாய் ‘ தீப்ஷிகா பேட்டி
தீப்ஷிகா
தீப்ஷிகா

அழகுடன் திறமையும் ஒருங்கே அமைந்துவிட்டால், அறிமுகப்படம் வெளிவரும் முன்பே பிஸியாகி விடலாம் என்பதற்கு தீப்ஷிகா ஓர் உதாரணம். ‘ரேணிகுண்டா’ தொடங்கி விஜய்சேதுபதியின் ‘கருப்பன்’ வரை தனக்கென தனித்த பாணியில் படங்களைத் தந்து வருபவர் இயக்குநர் ஆர்.பன்னீர்செல்வம். இவர் தனது மகன் அருணை கதாநாயகனாக அறிமுகப்படுத்தும் படம் ‘தீக்குள் விரலை விட்டாய்’. இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கதாநாயகியாக அறிமுகமாகிறார் தீப்ஷிகா. இன்னமும் பெயர் வைக்கப்படாத இன்னொரு படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாகவும் நடித்துக் கொண்டிருக்கிறார். கடந்த இரண்டு வருடத்தில் தமிழிலும் தெலுங்கிலும் தலா மூன்று படங்கள் என ஆறு படங்களில் நடித்திருக்கும் தீப்ஷிகாவுடன் காமதேனு மின்னிதழுக்காக உரையாடியதிலிருந்து…

உங்களை நீங்களே கொஞ்சம் அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்…

சென்னையில் பிறந்து வளர்ந்த தமிழ் பொண்ணு நான். பெருங்குடியில் உள்ள புனித பயஸ் பள்ளியில் படித்தேன். பிறகு பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் இளங்கலை முடித்தேன். ஆனால், காலம் என்னை சினிமாவுக்கானவள் என்று ஆக்கிவிட்டது. அப்பா பிசினஸ்மேன். அம்மா ஹவுஸ் வொய்ஃப். சிறு வயது முதலே டிவியில் ஆங்கராக வரவேண்டும் என்று விரும்பினேன். எனது விருப்பத்துக்கு அப்பாவும், அம்மாவும் தடை ஏதும் சொல்லாமல் ஆதரவு கொடுத்தனர்.

கல்லூரி இறுதி ஆண்டின்போது இயக்குநர் பன்னீர்செல்வத்தின் படத்துக்கு ஆடிஷன் நடப்பதாக கல்லூரி அறிவிப்புப் பலகையில் நோட்டீஸ் ஒட்டியிருந்தார்கள். ஆர்வத்துடன் நானும் பங்குகொண்டேன். சுமார் 100 பேர் வந்திருந்தார்கள். என்னைவிட அழகான பெண்களும் இருந்தார்கள். இயக்குநர் பன்னீர்செல்வம் சார், “உனக்கு நடிக்கவும் தெரிகிறது” என்று சொல்லி என்னைத் தேர்ந்தெடுத்தார். 40 நாட்கள் ஒரே ஷெட்யூலில் படத்தை முடித்துவிட்டார். அவருடைய மகன் அருண் தான் கதாநாயகன். அவரது முதல்படம் ‘ஐஸ்வர்யா முருகன்’ முதலில் ரிலீஸ் ஆக இருக்கிறது. அடுத்ததாக இந்தப் படம். ஆனால் அதுக்கு முந்தியே, நான் நடித்துள்ள தெலுங்குப் படங்கள் ரிலீஸ் ஆகிவிடும் என நினைக்கிறேன்.

விக்ரம் பிரபு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு எப்படி அமைந்தது?

‘தீக்குள் விரலை விட்டாய்’ படத்தின் ஒளிப்பதிவாளர் சக்திவேல் சார் தான், விக்ரம் பிரபு நடித்த ‘இவன் வேற மாதிரி’ படத்துக்கும் ஒளிப்பதிவாளர். அவரிடம், ‘மாயா’, ‘மாநகரம்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை தயாரித்த பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தினர், தங்களது படம் ஒன்றுக்கு புது ஹீரோயின் பற்றி கேட்டிருக்கிறார்கள். அவர்தான் நான் நடித்த சில காட்சிகளை வந்து பார்க்கும்படி கூறியிருக்கிறார். ‘நாளைய இயக்குநர் சீசன் 5’ டைட்டில் வின்னரான அஜித் தான் அந்தப் படத்தின் இயக்குநர். அவர் வந்து நான் நடித்த காட்சிகளைப் பார்த்துவிட்டு, என்னைத் தேர்வு செய்துவிட்டார்.

விக்ரம் பிரபுவுடன் நடித்த அனுபவம் எப்படியிருந்தது?

மிகவும் இனிமையான மனிதர். நடிகர் திலகத்தின் பேரன், பிரபு சாரின் மகன் என்கிற எந்த பந்தாவும் இல்லை. ரொம்பவும் சிம்பிளாக இருக்கிறார். முதல்நாள் படப்பிடிப்பில் என்னை அறிமுகப்படுத்தியப்போது, “ஹாய்... வெல்கம் டு த டீரீம் ஃபேக்ட்ரி” என்று வெல்கம் சொன்னார். எனது நடிப்பைப் பார்த்து “நல்ல திறமையுடன் இருக்கீங்க... வாழ்த்துகள். இந்தப் படத்துல உங்கள் கேரக்டர்தான் ட்விட்ஸ்ட் கொடுக்கப்போகுது. டைரக்டர் கதை சொன்னாரா?” என்று முதல் நாளே அக்கறையாகக் கேட்டுப் பாராட்டினார். அதற்கு பெரிய மனது வேண்டும். அவ்வளவு அமைதியான மனிதர்.

கரோனா காலகட்டம் சினிமாவுக்கு போதாத காலம். ஆனால், உங்களுக்கு அதிர்ஷ்டமான காலமோ?

கடவுளுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். சினிமாவை சிறு வயது முதல் நேசித்து இந்தத் துறைக்கு வந்திருக்கிறேன். அதனால்தானோ என்னவோ. அடுத்தடுத்து என்னை படங்களுக்கு பரிந்துரை செய்கிறார்கள். என்னைப் பரிந்துரை செய்தவர்களின் நம்பிக்கையைக் காப்பாற்றும் விதமாக கடந்த ஒன்றைரை வருடத்தில் 5 படங்களில் நடித்து முடித்துவிட்டேன்.

விக்ரம் பிரபு சாருடன் நடித்து முடித்ததுமே, பிரபல தெலுங்கு ஹீரோ நவீன் சந்திராவுக்கு ஜோடியாக ‘தேஜாவுய்’ என்கிற தெலுங்குப் படத்தில் நடித்து முடித்துவிட்டேன். அரவிந்த் சீனிவாசன் இயக்கியிருக்கிறார். இந்தப் படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் நடித்து முடித்ததுமே ரவிதேஜா சார் தயாரிப்பிலும் மற்றொரு பெரிய தெலுங்குப் பட நிறுவனத்துக்கும் ஒப்பந்தமாகி, இரண்டு படங்களிலும் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறேன். மூன்றாவது தமிழ் படத்திலும் ஒப்பந்தமாகி நடித்துக் கொண்டிருக்கிறேன்.

இதற்கிடையில், கவிஞர் வைரமுத்துவின் ‘நாட்படு தேறல்’ இசை காணொலி ஆல்பத்தில் ஒரு பாடலில் நடித்திருப்பதாக செய்தி வெளியானதே..?

அவ்வளவு பெரிய புராஜெக்ட் அது! அதில் எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. இலக்கியத்தில் ஒரு புதிய முயற்சியாக நூறு பாடல்களை கொண்டு அவர் உருவாக்கி வரும் ‘நாட்படு தேறல்’ என்கிற ஆல்பத்தில் இடம்பெறும் பாடல்கள் ஒவ்வொன்றையும் முன்னணி இயக்குநர்கள் இயக்கி வருகின்றனர்.

அந்தவகையில் இந்த ஆல்பத்தில் இடம்பெறும் ‘கேசாதிபாதம்’ என்கிற பாடலில் நடன ஆசிரியையாக நான் நடித்துள்ளேன். ஒரு பெண்ணின் தலைமுதல் பாதம் வரை அவளது அவயங்களை ஒவ்வொன்றாக இயற்கையுடன் ஒப்பிட்டு வர்ணித்து இந்த பாடலை எழுதியுள்ளார் கவிப்பேரரசு. இந்தப்பாடலை விஜய் நடித்த பைரவா படத்தின் இயக்குநர் பரதன் இயக்கியுள்ளார்.

இந்தப்பாடலுக்கான படப்பிடிப்பு எல்லாம் முடிந்து, கிட்டத்தட்ட அதை மறந்தே போயிருந்த சூழலில், திடீரென ஒருநாள் கவிப்பேரரசு வைரமுத்துவிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தபோது யாரோ வைரமுத்து மாதிரி பேசி நம்மை ‘பிராங்க்’ பண்ணுகிறார்களோ என்ற சந்தேகம் வந்தது. “உண்மையாகவே நான் வைரமுத்துதான் பேசுகிறேன். நீங்கள் நடித்திருந்த ‘கேசாதிபாதம்’ இசைக் காணொலி கண்டேன். உங்கள் நடிப்பும், நடனமும் அந்தப் பாடலுக்கு உயிர்கொடுத்துவிட்டதம்மா.. தமிழ் சினிமாவில் உனக்கு நல்லதொரு இடம் காத்திருக்கிறது. எனது வாழ்த்துகள்” என வாழ்த்தினார்.. தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ஜாம்பவான், அவராகவே அழைத்து வாழ்த்தும் அளவுக்கு எனது வேலையை சிறப்பாக செய்திருக்கிறேன் என்கிற மகிழ்ச்சியும் பெருமிதமும் அப்போது ஏற்பட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in