பிக் பாஸ் வீட்டுக்குள் போகாமல் நல்லவேளை தப்பித்தேன்!

தடதடக்கும் தர்ஷா குப்தா
தர்ஷா குப்தா
தர்ஷா குப்தா

உங்களைப் பற்றி கொஞ்சம்…

என்னை பாதி மலையாளி, பாதி தமிழர்ன்னு சொல்லலாம். ஏன்னா..! அப்பா பாலக்காடு. அம்மா கோயமுத்தூர் பொண்ணு. மலையாளிகளும் சேர நாட்டைச் சேர்ந்தவங்கதானே அப்படிப் பார்த்தா நான் ரியல் தமிழ்ப்பொண்ணு. பிறந்து வளர்ந்தது எல்லாமே கோயம்பத்தூர்லதான். இளங்கலை அறிவியலில் ‘கம்பியூட்டர் டெக்னாலஜி’ படித்து முடித்துவிட்டு பெங்களூருவில் எம்.பி.ஏ. படித்தேன். படித்துக்கொண்டிருக்கும்போதே ‘கம்பியூட்டர் டீச்சர்’ ஆக சர்வதேசப் பள்ளி ஒன்றில் வேலை கிடைத்தது. டீச்சர் வேலை ரொம்பவே பிடித்திருந்தது. மாடர்ன் டிரஸ் எந்த அளவுக்குப் பிடிக்குமோ அதே அளவுக்கு புடவையும் எனக்கு பிடிக்கும். புடவைக்கு மாடர்ன் ஜாக்கெட்ஸ் தைக்கலாம் என்று நினைத்து சென்னையிலுள்ள தோழியின் வீட்டுக்கு வந்து சில தினங்கள் தங்கினேன். அப்போது, பக்கக்கத்து வீட்டில் இருந்த பிரபல மாடல் பெண்மணி என்னைப் பார்த்து “ரேம்ப் மாடலிங் செய்ய விருப்பமா?” என்றார். “பள்ளி விடுமுறையில் அழைத்தால் வருகிறேன்” என்று அவரிடம் சொன்னேன்.

அப்படித்தான் ‘ஃபாஷன் ரேம்ப் வாக்’, ‘புராடெக்ட் விளம்பரங்கள்’ என்று ஆரம்பித்து ஃபேஷன் விளம்பர உலகில் பிரபலமானேன். விளம்பரங்களில் என்னைப் பார்த்தே தொலைக்காட்சித் தொடர்களுக்கு அழைத்தார்கள்.

உங்களுடைய முதல் தொலைக்காட்சித் தொடர், சன் டிவியில் வந்த ‘மின்னலே’தானே?

இல்லை. விஜய் டிவியில் 2019-ல் ஒளிப்பரப்பான ‘அவளும் நானும்’ தொடரில் ஹீரோயினுக்கு தங்கை ‘மானசா’வாக நடிக்க வரும்படி அழைத்தார்கள். கதையும் எனது கதாபாத்திரமும் பிடித்திருந்ததால், டீச்சர் வேலையை விட்டுவிட்டு அந்தத் தொடரில் நடிக்க வந்தேன். அதன்பிறகு ஜீ தமிழில் ‘முள்ளும் மலரும்’ தொடரில் கதாநாயகியாக நடித்தேன். அதன்பிறகுதான் ‘மின்னலே’, விஜய் டிவியில் ‘செந்தூரப்பூவே’ தொடர்களில் நடித்தேன். கடைசி இரண்டு தொடர்களிலுமே எதிர்மறைக் கதாபாத்திரங்களில் நடித்ததால் எனது துணிச்சலுக்குப் பாராட்டு கிடைத்தது.

கரோனா முதல் அலையின்போது இன்ஸ்டாகிராமில் உங்களுக்கும் ஷிவானி நாராயாணனுக்கும் யார் அதிக போட்டோ ஷூட்களைப் பதிவிடுவது என்பதில் பெரிய போட்டியே நடந்ததே... அதற்கான பலன் தான் என்ன?

பலன் இல்லாமலா? இன்று இன்ஸ்டாகிராமை பெண்கள் தங்களுடைய சுய முன்னேற்றத்துக்காக பயன்படுத்திக்கொள்கிறார்கள். பல பெண்கள் தங்களுடைய கைவினைப் பொருட்களை விற்பனை செய்கிறார்கள். போட்டித் தேர்வுகளுக்கு டீச்சிங் செய்கிறார்கள். தங்கள் யூடியூப் சேனலை வளர்க்கப் பயன்படுத்துகிறார்கள். என்னைப் போன்ற மாடல்களும் நடிகர்களும் எங்களுடைய விதவிதமான படங்களைப் பதிவிடுகிறோம்.

லாக்டவுனின்போது நான் பதிவிட்ட ஒவ்வொரு போட்டோ ஷூட்டையும் 54 ஆயிரம் பேர் வரை லைக் செய்துள்ளதுடன் 60 ஆயிரம் பேர் என்னைப் பின் தொடர்கிறார்கள். ஷிவானிக்கும் அப்படித்தான். இன்ஸ்டாகிராமில் எங்களுக்குக் கிடைத்த வரவேற்பைப் பார்த்தே ஷிவானிக்கு ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்கும் எனக்கு ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சிக்கும் அழைப்பு வந்தது. ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்கு சென்று வந்தபிறகு ஷிவானிக்கு பலன் இருந்ததோ இல்லையோ... ‘குக்வித் கோமாளி’ நிகழ்ச்சிக்குப் பிறகு நான் சினிமாவில் பிஸியாகி இருக்கிறேன்.

உங்களுக்கு ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு வரவில்லையா?

வந்தது! இரண்டில் எதைத் தேர்ந்தெடுக்க விரும்புகிறீர்கள் என்று கேட்டார்கள். நான் திடமாக ‘குக்வித் கோமாளி’ என்று அழுத்தம் திருத்தமாக பதில் சொன்னேன். பிக் பாஸைத் தேர்ந்தெடுத்திருந்தால் என்னால் அந்த வீட்டுக்குள் தாங்கியிருக்க முடியாது. ஏனென்றால் அங்கே பொய்யாக நிறைய நடிக்கவேண்டியிருக்கும். வெளிப்படையாகச் சொல்வதென்றால் எதையும் தாங்கும் இதயம் வேண்டும். நான் மிக மென்மையான மனது கொண்டவள். முகத்துக்கு நேராகப் பேசிவிடுவேன். ஒருவரைப் பற்றி பின்னால் நின்றுகொண்டு பேசுவதுபோல் தவறான விஷயம் வேறு எதுவுமில்லை. அதற்குப் பெயர் கோழைத்தனம். அது என்னிடம் கிடையாது. பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்திருந்தால் அங்கே நடக்கும் ரகளையில் என்னை அப்பளம் நொறுக்குவதுபோல் நொறுக்கியிருப்பார்கள். நல்லவேளை தப்பித்தேன்.

’குக்வித் கோமாளி’ எந்த வகையில் உங்களை மிகவும் கவர்ந்தது என்று சொல்வீர்கள்?

அதை குக்கிங் ஷோ என்று எல்லோரும் சொன்னாலும் அதுவொரு ஃபன் ஃபில்டு ஷோ. பெண்கள், ஆண்கள் இருவருக்குமே சமைப்பது என்பது ஒரு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் செயல். ஏனென்றால் வாழ்க்கையில் திரும்பத் திரும்ப வந்துகொண்டேயிருய்ப்பது. ஷோவில் நாம் சமைத்துக் கொண்டிருக்கும்போது நம் அருகில் ஒருவர் வந்து, நம்மை கலாய்த்து சிரிப்பு மூட்டிக்கொண்டிருக்கும்போது, சமைப்பதை அவ்வளவு என்ஜாய் செய்தோம். அந்த நகைச்சுவை களேபரத்தில் சமையல் படும்பாடு இன்னும் நகைச்சுவையாக மாறிவிடுகிறது. இந்த ஷோ பெண்களைக் கவர்ந்ததற்கு காரணம், சமையல் என்கிற சுமையை இலகுவாக எடுத்துக்கொள்ளலாம் என்று காட்டியதால் தான் என்று நினைக்கிறேன்.

‘ருத்ரத் தாண்டவம்’ படத்தில் நிறைமாத கர்ப்பிணி, பின்னர் ஒரு குழந்தையின் தாய் என்று அறிமுகப்பட்ட அனுபவம் எப்படி அமைந்தது?

இப்படியொரு அறிமுக எல்லோருக்கும் கிடைத்துவிடாது. ‘பழைய வண்ணாரப்பேட்டை’, ‘ திரௌபதி’ படங்களுக்குப் பிறகு மோகன் ஜி படம் என்றதும் கொஞ்சம் தயக்கம் இருந்தாலும் கதையையும் எனது கேரக்டரையும் கேட்டதும் அதில் ஒரு சவால் இருப்பதை உணர்ந்து எடுத்து நடித்தேன். விமர்சனங்களில் என்னை குறிப்பிட்டு எழுதியது மறக்க முடியாது. தற்போது ‘ஓ மை கோஸ்ட்’ படத்தில் கல்லூரி மாணவியாக ஆனால், கதையை நகர்த்திச் செல்லும் கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளேன். மூன்றாவது படமும் ஒப்புக்கொண்டாகிவிட்டது. விரைவில் அறிவிப்பு வரும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in